மு.காவின் துயர்: யார் காரணம்?

🕔 July 2, 2016

Article - Rifan - 002
ஸ்ரீ
லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பிரச்சினையை இனியும் பிற்போட முடியாததொரு சூழல் அக்கட்சிக்குள் உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குக் கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களான செயலாளர் எம்.ரி. ஹஸன்அலி, தவிசாளர் பசீர் சேகுதாவூத் உட்பட சிரேஸ்ட உறுப்பினர்கள் முதல், கனிஸ்ட உறுப்பினர்கள் வரை தங்களுக்கு தரப்பட வேண்டுமென்று தலைவர் ரவூப் ஹக்கீமை பெரும் நெருக்குவாரங்களுக்கு அவர்களின் ஆதரவாளர்கள் உட்படுத்தினார்கள். இதனால், யாருக்கு தேசியப்பட்டியிலில் சந்தர்ப்பம் வழங்குதென்பதில் தலைவர் ரவூப் ஹக்கீம் முடிவுகளை எடுக்க முடியாதவராக காணப்பட்டார். இதனால், தமது சகோதரர் ஹபீஸுக்கும், சட்டத்தரணி சல்மானுக்கும் தற்காலிகமாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்பட்டன.

தற்காலிகமாக வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை நிரந்தரமாக வழங்குவதற்கு தலைவர் ரவூப் ஹக்கீம் கால நீடிப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். இதனால், எழுந்த பலத்த விமர்சனங்களின் காரணமாக சகோதரர் ஹபீஸை ராஜினாமாச் செய்ய வைத்து, அந்தப் பதவியை திருகோணமலையில் பொதுத் தேர்தலில் மக்களினால் தோற்கடிக்கப்பட்ட எம்.எஸ். தௌபீக்குக்கு தலைவரின் அதிகாரத்தை பயன்படுத்தி தலைவர் ரவூப் ஹக்கீம் வழங்கினார்.

ஆயினும், சட்டத்தரணி சல்மானிடம் ஒப்படைக்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இன்னும் நிரந்தரமாக ஒருவருக்கு வழங்கப்படவில்லை. தற்காலிகமாக இருக்கின்ற அவர் வாகன கோட்டா முதல் அனைத்து சௌபாக்கியங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார். சுமார் ஒரு வருடம் நெருங்கிய நிலையிலும் தற்காலிகம் என்பது காலவறை இன்றி சென்று கொண்டிருக்கின்றது. தற்காலிகம் என்ற பேரில் கால நீடிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருப்பது ஒரு திட்டமிட்ட செயற்பாடு என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் உயர்பீட உறுப்பினர்களே நம்மிடம் பல தடவைகள் சொல்லியுள்ளார்கள். அதுமட்டுமன்றி இக்கால நீடிப்பு பலத்த விமர்சனங்களை இன்றுவரைக்கும் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு வரவழைத்துக் கொண்டிருக்கின்றன.

இதே வேளை, செயலாளர் ஹஸன்அலி, தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர்கள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கேட்டுக் கொண்டிருப்பதனால்தான் யாருக்கு வழங்குதென்பதில் தலைவர் ரவூப் ஹக்கீம் முடிவு செய்து கொள்ள முடியாதுள்ளார் என்று கட்சிக்குள் காணப்படும் தலைமைத்துவ விசுவாசிகள் சொல்லிக் கொண்டார்கள். ஆனால், தற்போது செயலாளர் ஹஸன்அலி, தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர்கள் தங்களுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வேண்டாமென்று பகிரங்கமாகவே அறிவித்துள்ளார்கள். ஆதலால், இவர்களை காரணம் காட்டி தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குரிய நிரந்தர தீர்வுகளை காணாதிருக்க முடியாது.

சல்மானிடம் அமானிதமாக ஒப்படைக்கப்பட்டுள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நியாயத்தின் அடிப்படையிலும், அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளின் அடிப்படையிலும் வழங்கப்பட வேண்டியுள்ளது. இதனை இன்னும் கால நீடிப்புச் செய்ய காரணங்கள் சொல்லப்படுமாயின், இதுவரைக்கும் செய்யப்பட்ட கால நீடிப்பு ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகவே கருதப்படும்.

இதே வேளை, செயலாளர் ஹஸன்அலி, தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வேண்டாமென்று சொல்லிக் கொண்டாலும், அவர்களின் அவ்வார்த்தைகளின் பின்னால் சூழ்ச்சிகள் உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், இவர்கள் தலைவர் ரவூப் ஹக்கீமை நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள் என்பது தெளிவாகும். தாங்கள் தலைவர் ரவூப் ஹக்கீமினால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இவர்கள் கருதுகின்றார்கள். இவர்களின் இக்கருதுகோள் உண்மையுமாகும். ஆதலால், இவர்களின் நம்பிக்கையை பெற வேண்டியவராகவும் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளார்.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வேண்டாமென்று ஹஸன்அலியும், பசீர் சேகுதாவூத்தும் தெரிவித்துள்ளமையை வரவேற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களில் சிலர், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலுள்ள நப்பாசையால் தலைவரை புகழ்ந்தும், ஹஸன்அலி, பசீர் சேகுதாவூத் ஆகியோர்களை விமர்சனம் செய்தும் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் கடந்த காலங்களில் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக ஊடகங்களில் அறிக்கை விடுத்தமையையும், தனக்கு ஒரு சிறிய பதவியாவது கிடைக்காதா என்று பத்திரிகையாளர்களிடம் முறைப்பாடுகளைச் செய்தமையும், கட்சியின் உயர்பீடத்தில் நடைபெற்ற சுவாரஸ்யங்களையும், ரகசியங்களையும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இவர்கள் இன்று கட்சி பலவீனமடைந்து விட்டதாகவும் அதற்கு பசீர் சேகுதாவூத் போன்றவர்களே காரணமென்றும் பத்திரிகைகளில் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், இவர்களும் உயர்பீட உறுப்பினர்கள் என்பதனை மறந்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள். கட்சியின் இன்றைய நிலைக்கு உயர்பீடத்தில் உள்ள அனைவரும் பொறுப்புச் சொல்ல வேண்டும். ஆனால், தலைவரின் அன்பைப் பெற வேண்டுமென்று அறிக்கைகளை விடும் சட்டத்தரணிகள், தங்கள் முதுகுகளில் உள்ளதை கண்ணாடியில் ஒரு தடவை பார்த்துக் கொள்ளல் வேண்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் சட்டத்தரணிகளின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டுள்ளன. இவர்கள் கட்சியை வைத்து வழக்காடிக் கொண்டிருக்கின்றார்கள். வழக்கு என்றால் வருமானம் வர வேண்டும். அதனையே இன்று செய்து கொண்டிருக்கின்றார்கள். இதனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது இமேஜை இழந்து கொண்டிருக்கின்றது. சட்டத்தரணிக்கு தமது வாதம் வெல்ல வேண்டும். யார் பாதிக்கப்பட்டாலும் கவலையில்லை.

ரவூப் ஹக்கீமை புகழந்து பேசிக் கொண்டிருக்கும் இன்றைய பினாமிகள் கட்சியினால் பெற்றுக் கொண்டிருக்கும் சலுகைள், பதவிகள், எதிர்ப்பார்ப்புகள் பறிபோகுமாயின் மீண்டும் தலைவர் ரவூப் ஹக்கீமை விமர்சனம் செய்வார்கள். ஆதலால், தலைவர் ரவூப் ஹக்கீமை சுற்றியுள்ள உயர்பீட உறுப்பினர்களில் பலர், பதவிகளை மையப்படுத்திக் கொண்டுதான் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தங்களுக்கு பதவி தந்தால் தலைவர் நல்லவர். பதவி தராதுவிட்டால் தலைவர் கெட்டவர் என்பதே இவர்களின் கொள்கையாகும். இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் ஏற்பட்டுள்ள பலத்த பிரச்சினைக்கும், முரண்பாடுகளுக்கும் இவர்கள்தான் பிரதான காரணமாகும். விரைவில் இவர்கள் எத்தகைய காவுகளைச் செய்தார்கள் என்று வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டியுள்ளது.

இதே வேளை, கட்சியின் செயற்பாடுகள் பற்றி நியாயமான விமர்சனங்கள் பத்தி எழுத்தாளர்களினால் எழுதப்படும் போது அதனை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் பத்தி எழுத்தாளர்களை தாக்குகின்றோம் என்று நினைத்துக் கொண்டு தலைவர் ரவூப் ஹக்கீமை கேவலப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். கட்சியின் நல்ல நடவடிக்கைகளை பற்றி பாராட்டி எழுதினால் குறிப்பிட்ட பத்தி எழுத்தாளரை பாராட்டாமல், நன்றி தெரிவிக்காமல், அவர்களின் துன்பங்களுக்கு ஆறுதல் கூறாமல் இருக்கும் இவர்கள், கட்சியின் ஏற்றுக் கொள்ள முடியாத நடவடிக்கைகளை விமர்சனம் செய்யும் பத்தி எழுத்தாளர்களை குறை கூறிக் கொண்டிருக்கின்றார்கள். நியாயத்தை நிலை நாட்டுவதற்காக எழுதுகின்றவர்களே ஊடகவியலாளர்கள் என்பதனை புரிந்து கொள்ளாது தங்களுக்கும், தமது கட்சிக்கும் சாதமாக எழுத வேண்டுமென்று சதா எண்ணுவது சுதந்திர ஊடகத்துறையின் மீதான வன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மு.காவின் தலைவர் பணயக் கைதி

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிப் பிரச்சினை, செயலாளர் ஹஸன்அலியின் அதிகாரப் பிரச்சினை, தவிசாளர் பசீர் சேகுதாவூத்தின் நகர்வுகளின் பிரச்சினை,சட்டத்தரணிகளின் ஆதிக்கம்,கட்சியின் தலைமைத்துவத்தை கைப்பற்ற வேண்டுமென்ற பிரச்சினை என – ஒன்றுக்கொன்று தொடரான பிரச்சினைகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர் கொண்டுள்ளது. இந்தப் பின்னணியில் காத்தான்குடியில் நடைபெற்றதொரு நிகழ்வில் உரையாற்றிய தலைவர் ரவூப் ஹக்கீம் ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை பணயக் கைதியாக வைத்து அரசியல் செய்வதற்கு இனிமேல் இடமளிக்கப் போவதில்லை’ என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக தலைவர் ரவூப் ஹக்கீம் இதுவரைக்கும் பணயக் கைதியாக இருந்துள்ளார் என்பது தெளிவாகின்றது. மட்டுமல்லாது கிழக்கு மாகாண சபையின் கடந்த தேர்தல் காலத்திலும் அதற்கு முன்னரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்றலில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் போதும், தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையை சூழ்நிலைக் கைதியாகவோ, பணயக் கைதியாகவோ வைத்து அரசியல் செய்ய அனுமதிக்கப் போவதில்லை என்று தெரிவித்திருந்தார். ஆயினும், அவர் கடந்த பொதுத் தேர்தலில் தம்மை பணயக் கைதியாக வைத்திருந்தவர்களுக்கே தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கினார். இன்றும் கூட கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகளுக்கு இவர்களின் அழுத்தமும் காரணமாகும். இவர்கள் ஹஸன்அலியை தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக்க முடியாதென்று தலைவருக்கு அழுத்தங்களை கொடுத்தாகவும் தெரிவிக்கப்படுகின்றன. இதற்கு முன்னதாக தேர்தலில் போட்டியிடுவதற்கு ஹஸன்அலிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால், தாங்கள் மற்றுமொரு முஸ்லிம் கட்சியில் போட்டியிடுவோம் என்று மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. இவை உண்மையாயின், முதலில் இவர்களுக்கு எதிராக தலைவர் ரவூப் ஹக்கீம் எடுக்கப் போகும் நடவடிக்கைகள் என்ன? இவர்கள் கட்சியின் திசைமாற்று நடவடிக்கைக்கு காரணமானவர்கள் என்பது வெளிச்சம் போட்ட செயலாகும்.

மேலும் மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தில் வேண்டாவெறுப்புடன் இணைந்து கொண்ட காலத்தில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்தராஜபக்ஷவுடன் இணைவதற்கு, தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கொடுத்த நெருக்கடிகள், தொல்லைகளை கட்சியின் மேடைகளில் பல தடவைகள் தலைவர் ரவூப் ஹக்கீம் முதல் – முழக்கம் மஜீத் வரைக்கும் இடித்துரைத்தமையையும் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். இப்போதும் தலைவர் ரவூப் ஹக்கீம் – தலைமையை பணயக் கைதியாக வைத்து அரசியல் செய்ய முடியாதென்று அதே வார்த்தையை சொல்லுகின்றார் என்றால் அவர் பணயக் கைதியாக இருந்துள்ளார் என்பது உறுதி செய்யப்படுவதுடன், இனிமேலும் அதிலிருந்து விடுபடுவாரா என்பது சந்தேகமாகும். இதே வேளை, தம்மை பணயக் கைதியாக வைத்திருந்த ஒரு சிலருக்கு பாடம் புகட்ட வேண்டுமென்று திட்டமிட்டு செயற்பட்டு வெற்றியடைந்துள்ளார். ஆனால், அவர் இப்போது வேறு ஒரு குழுவினரிடம் பணயக் கைதியாகவுள்ளார்.

பிணக்குகளும், முரண்பாடுகளும்

இன்று கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிணக்குகளையும், முரண்பாடுகளையும் தலைவர் ரவூப் ஹக்கீம் நினைத்தால் ஒரு நாளைக்குள் தீர்த்துவிடலாம். தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்றினை யாரிடமும் கேட்காது தோல்வியடைந்த தௌபீக்கிற்கு வழங்கியதைப் போன்று, இன்னுமொருவருக்கு வழங்கலாம். செயலாளர் ஹஸன்அலிக்குரிய அதிகாரங்களை வழங்குவது, சம்பளத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள உயர்பீட உறுப்பினர் மன்சூர் ஏ.காதரை அப்பதவியிலிருந்து நீக்கிவிடுவது, உயர்பீட உறுப்பினரை நினைத்த மாத்திரத்தில் நீக்குவதற்கு தலைவருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆதலால், அதனை செய்வதற்கு துணிய வேண்டும். சம்பளத்துக்கு செயற்படும் செயலாளர் – தலைவருக்கு விசுவாசமாக இருப்பாரே அன்றி, கட்சிக்கும், சமூகத்துக்கும் விசுவாசம் காட்டமாட்டார். ஆதலால், உயர்பீட செயலாளரை நீக்குவது – பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இருக்கின்ற வழிகளில் ஒன்றாகும். ஹஸன்அலிக்கு செயலாளருக்குரிய அதிகாரங்களை வழங்கினால் கூட அவரினால் எதனையும் சாதிக்க முடியாது. அவருக்கு பயப்பட வேண்டிய அவசியமுமில்லை. அவரால் தலைவர் பதவியை பறிக்க முடியாது. அந்த சக்தியும் அவரிடமில்லை.ஆனால், தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த முடிவுகளை எடுப்பதற்கு – தாம் இறங்கிப் போவதா என்று எண்ணுவதுதான் இன்றுள்ள கௌரவப் பிரச்சினையாகும். ஹஸன்அலி வென்றுவிட்டார் என்று அர்த்தமாகிவிடும் என்ற கணிப்பு தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.

கட்சியை பாதுகாத்துக் கொள்வதற்காக மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு விட்டுக் கொடுப்புக்களை செய்ய முடியுமாயின், கட்சியை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக 18வது சரத்திற்கு விலை போக முடியுமென்றால், அதற்காக இறங்கிப் போகலாம் என்றால், முன்னாள் ஜனாதிபதியின் தேவைக்காக ஊவா மாகாண சபை தேர்தலொன்றின் போது கட்சியின் கொள்கையை விட்டுக் கொடுத்து றிசாட் பதியுதீனுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட முடியுமென்றால், ஏன் கட்சியை பாதுகாத்துக் கொள்வதற்காக செயலாளருக்கு அதிகாரங்களை வழங்க முடியாது. சம்பளத்துக்கு வேலை செய்யும் உயர்பீட செயலாளரை நிறுத்த முடியாது. கம்பனி நஸ்டத்தில் போகுமென்றால் ஊழியர் குறைப்பு செய்வதனைப் போன்று இதனையும் செய்யலாம். நோக்கம் கம்பனி நஸ்டத்தில் செல்லக் கூடாது. இது போலவே கட்சியை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய ஹஸன்அலிக்கு அதிகாரங்களை வழங்குவதில் எதுவும் தலைவருக்கு குறைந்துவிடப் போவதில்லை. தலைவர் கட்சியை பாதுகாத்துக் கொள்வதற்காக இறங்கிச் சென்றுள்ளார் என்ற நல்ல பெயர் கிடைக்குமே அன்றி, தலைவர் ரவூப் ஹக்கீம் தோல்வியடைந்து விட்டார் என்று கெட்ட பெயர் கிடைக்காது. இதற்கு தடையாக இருப்பது தலைவர் இறங்கிப் போவதா? செயலாளர் இறங்கிப் போவதா? இவர்கள் கட்சி முக்கியம் என்று கருதுவார்களாயின், முஸ்லிம் சமூகத்திற்கு இக்கட்சி அவசியம் என்று எண்ணுவார்களாயின் எதனையும் விட்டுக் கொடுப்பதற்கு தயங்கமாட்டார்கள்.

ஆனால், இன்று கட்சிக்குள் கௌரவப் போட்டிகளே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கடந்த காலங்களில் கட்சியும், முஸ்லிம் சமூகமும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தேவைகளுக்காக மலிவுப் பொருளாக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. அத்தகைய சம்பவங்கள் நடைபெற்றதாக ஆங்காங்கே கதைகள் உலாவிக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களுக்கு கட்சி வேண்டுமென்று ஆரம்ப காலத்தில் செயற்பட்டவர்கள் கட்சியை மலிவாக்கி சோரம் போக வைத்தது போதாதென்று, இன்று கட்சிக்குள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அழிக்க வேண்டுமென்று ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப்புக்கு கற்கள் வீசியவர்களும், இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீமை இல்லாமல் செய்ய வேண்டுமென்று சவால்விட்டவர்களும், அதற்காக செயற்பட்டவர்களும், பதவிகளுக்காக கட்சியின் கொள்கையை மாற்றியமைத்துக் கொண்டவர்களும் நிறைந்து காணப்படுகின்றார்கள். இத்தகையவர்கள் கட்சிக்கு ஏற்பட்ட திடீர் தலையிடிக்கு தீர்வாக உள்வாங்கப்பட்டார்களே அன்றி வேறு எதற்காகவும் உள்வாங்கப்படவில்லை.

ஆனால், அவர்களின் வருகை கட்சிக்கு நீண்ட காலத்தில் தீராத தலையிடிகளை ஏற்படுத்தும் என்று கணிக்கவில்லை. உடன்நிவாரணியில் பக்க விளைவுகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று அடைந்துள்ள துன்ப நிலைக்கு இத்தகையவர்கள் பின்னணியில் உள்ளார்கள் என்பதனை புரிந்து கொள்ள முடியாத நிலையிலேயே கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளார்கள்.

ஆதரவாளர்கள் இன்று காட்டப்படும் படத்தையே நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

நன்றி: விடிவெள்ளி (01 ஜுலை 2016)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்