தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள்

– பாறுக் ஷிஹான் –
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விமர்சித்து யாழ்ப்பாணம் நகரப்பகுதி எங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அழைத்துச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன், ஜனாதிபதியின் முன்னிலையில் தனது மகளின் பிறந்த நாளினை கேக் வெட்டி கொண்டாடியிருந்தார்.
இந்நிலையில், குறித்த சுவரொட்டிகளில் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, ‘காணாத உறவுகளை தேடி அலைகின்றோம், கண்ணீர் துடைக்க ஆளில்லை’ என்றும், ‘சரவணபவன் எம்.பி. மகளுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்’ எனவும் வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
இந்த சுவரொட்டிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் ஈ. சரவணபவன் ஆகியோரைக் குறிப்பிடும் வகையில், அவர்களின் முகங்களைச் சுற்றி சிவப்பு நிற வட்டம் இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை குறிப்பிட்ட நிகழ்வினை மக்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

