விமல் வீரவன்சவின் விசுவாசி, முஸம்மில் கைது
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், அந்தக் கட்சியின் தலைவர் விமல் வீரவன்சவின் விசுவாசியுமான முகம்மட் முஸம்மில், பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் கடந்த ஆட்சிக் காலத்தில் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
2010 ஆம் ஆண்டு, சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது, முன்னாள் அமைச்சர் மையோன் முஸ்தபா – தனக்கு பணத் தொகையொன்றினை லஞ்சமாகத் தந்து, சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்குமாறு கூறியதாக, மையோன் முஸ்தபா மீது, அக்காலப் பகுதியில் முஸம்மில் குற்றச்சாட்டொன்றினைப் பதிவு செய்திருந்தார்.
இதன் காரணமாக, முன்னாள் அமைச்சர் மையோன் முஸ்தபா நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைவரம் ஏற்பட்டது.
இதுவரையில், முன்னாள் அமைச்சர் மயோன் முஸ்தபா நாடு திரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.