முஸ்லிம் காங்கிரஸுக்குள் தோன்றியுள்ள முரண்பாடுகள்

🕔 June 19, 2016

Article - Sahabdeen - 111
ஸ்ரீ
லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும் அக்கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹஸன் அலிக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள் தொடர்பில் சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற இவ்விருவருக்குமிடையிலான சந்திப்பின் பின்னர் முடிவுக்கு வருமென்று எதிர் பார்க்கப்பட்ட போதிலும், தற்போது இவர்கள் இருவருக்குமிடையிலான முரண்பாடுகள் மேலும் வலுத்துக் கொண்டிருப்பதாகவே தெரிகின்றன.

கடந்த தேர்தல் காலத்தில் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும், அரசியல் யாப்பில் 18வது திருத்தச் சட்ட மூலத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா ஒரு கோடி வழங்கப்பட்டதாகவும் ஆங்காங்கே பேசப்பட்டு வருவதுடன், சமூக வலைத் தளங்களிலும் இது பற்றி கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறு கருத்து பரிமாறல்கள் முன் வைக்கப்பட்டாலும் அவையாவும் ஊர்ஜிதமற்ற தகவல்களாகவே இருக்கின்றன. மேற்படி பணப் பரிமாற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களை ஹஸன்அலியே தெரிவித்துக் கொண்டிருப்பதாகவும் அதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும், செயலாளர் எம்.ரி. ஹஸன்அலிக்குமிடையே காணப்பட்ட முரண்பாடுகளை வலுவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. இதே வேளை, இத்தகையதொரு குற்றச்சாட்டை தான் முன் வைக்கவில்லை என்று ஹஸன்அலி தெரிவித்தார்.

ஆயினும், கடந்த 12.06.2016 ஞாயிற்றுக் கிழமை அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட உயர்பீட உறுப்பினர்களை தலைவர் ரவூப் ஹக்கீம் சந்தித்து இக்குற்றச்சாட்டு பற்றி கருத்துக்களை முன் வைத்ததாகவும், அத்தகைய பணப் பரிமாற்றங்கள் இடம்பெறவில்லை என்று தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சந்திப்பின் போது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து என்னை அடிமைப்படுத்த சிலர் எடுக்கும் முயற்சிகளுக்கு – தான் ஒரு போதும் அடிபணியப் போவதில்லை என்று ரஊப் ஹக்கீம் தெரிவித்தாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் உள்ள உயர்பீட உறுப்பினர்களில் பலரிடம் சுயநலன்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. இவர்கள் கட்சியை சமூகத்தின் தேவைக்காக வழி நடத்தாது தமது தேவைக்காக வழி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு பல விடயங்கள் உள்ளன. இந்த சுயநலப் போக்கில் சிக்குண்டதாலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு முரண்பாடுகளில் மாட்டியுள்ளது.

தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளையும், இதற்கு முதல் ஏற்பட்ட முரண்பாடுகளையும் அவதானிக்கும் போது, அவை முஸ்லிம் சமூகம் சார்ந்ததாக இருக்கவில்லை. முரண்பாடுகளுடன் தொடர்புடையவர்களின் பதவி நிலை பற்றியதாகவே இருக்கின்றது. இவர்களிடையே காணப்பட்ட பதவி அடிப்படையிலான முரண்பாடுகளினால் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலத்திலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.

இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான போட்டி, அதனை தீர்மானித்துக் கொள்வதற்கு எடுக்கப்பட்ட நீண்ட காலதாமதம், தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவர் யார் என்பதனை இன்று வரைக்கும் முடிவு செய்யாது தற்காலிகமானவர் என்று ஒரு வருடத்திற்கும் மேலாக காணப்படும் இழுபறி நிலை,  செயலாளரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டமை ஆகியவைகள்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் முரண்பாடுகள் வலுத்து காணப்படுவதற்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் கிழக்கில் இருக்க வேண்டுமென்று அக்கட்சியில் ஒரு பிரிவினர் போர்க் கொடி தூக்கி இருப்பதற்கும் காரணமாகும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் இன்று தலையெடுத்து ஆடிக் கொண்டிருக்கும் மேற்படி பிரச்சினையால் முஸ்லிம் சமூகத்திற்கு எந்த நன்மைகளும் கிடையாது. அடிப்படையில் இந்த முரண்பாடுகள் பதவிகளுடன் சம்பந்தப்பட்டதாகவே இருக்கின்றன. இந்த முரண்பாடுகளை இல்லாமல் செய்து கட்சிக்குள் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவது என்பது இலகுவான காரியமாகும். ஆனால், முரண்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டும். யார் விட்டுக் கொடுப்பது என்பதுதான் இன்றுள்ள கௌரவப் போட்டியாகும்.

இதே வேளை, முரண்பாட்டாளர்களிடையே காணப்படும் கௌரவப் பிரச்சினையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒரு சில உயர்பீட உறுப்பினர்கள் வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த பிரச்சினை இருக்கும் வரைதான் தங்களினால் அரசியலில் நிலைத்திருக்க முடியும் என்றும், பிழைப்பு நடத்த முடியுமென்றும் கணித்துள்ளார்கள். ஆக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் ஏற்பட்டுள்ள இன்றைய வலுத்த முரண்பாடுகள் முழுக்க சுயநல முட்கம்பியால் பிணைக்கப்பட்டதாகவே காணப்படுகின்றன.

முஸ்லிம் சமூகம் இன்றைய நல்லாட்சி அரசாங்கத்திலும் இனவாதம், குரோதம், அநீயாயம், உரிமைப் பறிப்புக்கள் போன்றவற்றுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றார்கள். அவற்றிலிருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு திட்டங்கள் வகுக்க வேண்டியதொரு கால கட்டத்தில் முஸ்லிம்கள் உள்ளார்கள். அவை தொடர்பில் கருத்துப் பரிமாறல்களை மேற்கொள்வதற்கு கூட முஸ்லிம் கட்சிகள் தயாரில்லை. அவை தொடர்பில் முரண்பாடுகளில் ஈடுபட்டுக் கொள்ளும் கொள்கைப் பற்றும் முஸ்லிம் கட்சிகளிடையே இல்லை. கட்சியில் தாம் பெற்றிருக்கும் பதவியை உறுதி செய்து கொள்வதற்கு சூழ்ச்சியும், தமக்குள்ள அதிகாரங்களை இழக்க முடியாதென்ற அதிகார வேட்கையும், நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டுமென்ற பதவி வெறியும், விட்டுக் கொடுப்புக்களை செய்து பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண வேண்டுமென்ற நல்லெண்ணமும் இல்லாத நிலையில் முஸ்லிம் சமூகத்தின் பெயரில் அரசியல் செய்து கொண்டிருக்கும் முஸ்லிம் கட்சிகளினால் முஸ்லிம் சமூகத்திற்கு விடிவுகள் பெற்றுத் தரப்படும் என்று நம்ப முடியாது.

இந்நிலை, இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் ஏனைய முஸ்லிம் கட்சிகளை விடவும் அதிகமாக இருப்பதனால்தான் அக்கட்சி முரண்பாட்டுப் புயலில் சிக்கி தள்ளாடிக் கொண்டிருக்கின்றது.

முஸ்லிம் சமூகத்தின் குரலாக ஒலிக்க வேண்டுமென்று ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று நலிவடைந்து பதவிகளுக்காக குரல் கொடுக்கும் உயர்பீட உறுப்பினர்களினால் நிறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை, அம்பாரை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வளர்ப்பதற்குரிய திட்டங்களை அக்கட்சி வகுத்துள்ளது. கடந்த வாரம் கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், தேசிய காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாவிற்குமிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு அமைவாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர் பிரதேசங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பொத்துவில் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் ஏ.எம். அப்துல் மஜீத் – பொத்துவில், திருக்கோயில், ஆலையடிவேம்பு, காரைதீவு பிரதேசங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு இணைத் தலைவராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனங்கள் மூலமாக அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வளர்ப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஆதலால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இந்நடவடிக்கை அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் காணப்படும் தற்போதைய முரண்பாடுகள் உதவியாகவும் அமையும். மேலும், முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவுக்கு முக்கியமானதொரு பதவி வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

ஐ.தே.கவும் அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் தமது செல்வாக்கை வளர்ப்பதற்குரிய திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் அம்பாறை மாவட்டத்தில் கால் பதித்துள்ளது.

இவ்வாறு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாக உள்ள அம்பாறை மாவட்டத்தில் தமது செல்வாக்கையும் கட்டி எழுப்ப வேண்டுமென்ற திட்டத்தில் பல கட்சிகளும் களத்தில் குதித்துள்ள அரசியல் சூழலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் காணப்படும் முரண்பாடுகள் தீர்க்கப்படாது போகுமாயின், அதன் கோட்டை மெல்ல மெல்ல சரிந்து கொண்டு போவதனை தடுக்க முடியாது.

நன்றி: வீரகேசரி வார வெளியீடு (19 ஜுன் 2016)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்