லசந்த கொலை வழக்கு; சிக்கலில் மாட்டுகிறாரா சரத் பொன்சேகா
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகளுக்காக, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் அதிகாரிகள் பற்றிய தகவல்கள் மற்றும் ராணுவ புலனாய்வு பிரிவினரின் குறிப்புப் புத்தகம் ஆகியவற்றை குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வழங்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லசந்தவின் கொலை தொடர்பான விசாரணைக்கு தேவையான தகவல்களை வழங்குவதற்கு, ராணு உயர் அதிகாரிகள் தடையாக இருக்கின்றனர் என்று நீதிமன்றில் குற்றப்புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டதோடு, குறித்த தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.
இதனையடுத்து, ராணுவ புலனாய்வு பிரிவினரின் நாளாந்த குறிப்புப் புத்தகத்தை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வழங்குமாறு உத்தரவிட்ட நீதவான் எம். சஹாப்தீன், கொலை இடம்பெற்ற காலப்பகுதியில் ராணுவ தளபதியாக கடமையாற்றிய தற்போதை அமைச்சரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவுக்கு கீழ் பணியாற்றிய படை அதிகாரிகள் பற்றி தகவல்களையும் வழங்குமாறு உத்தரவிட்டார்.