புதிய தேர்தல் முறைமைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்: மாத்தளையில் மு.கா. தலைவர்

🕔 June 15, 2015

Hakeem - 987மது கோரிக்கைகள் உள்ளடக்கப்படாமல், புதிய தேர்தல் முறைமை தொடர்பான சட்டவரைவு – வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டால், அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு தாங்கள் தீர்மானித்திருப்பதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

இதேவேளை, புதிய தேர்தல் முறைமை விடயத்தில், எமது கட்சியின் நன்மையினை கருத்திற் கொண்டு, தான் -சுயநலத்துடன் நடந்து கொள்வதாக, தன்மீது குற்றம் சாட்டப்படுவதாகவும், அவை முற்றிலும் தவறானவை எனவும் அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறினார்.

மாத்தளை நகர அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக முக்கிய கூட்டமொன்று, அங்குள்ள மாநகர சபை கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை முற்பகல் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின் முடிவில் அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்கள் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் குறித்து அமைச்சரிடம் கேள்விகளைத் தொடுத்தனர். அவற்றிற்கு பதிலளிக்கும் பொழுதே, அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்ட வரைவு, இந்த நாட்டில் புதிய தேர்தல் முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்காக, கடந்த தேர்தலின் போது –  மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் முகமாக கொண்டுவரப்படுகிறது.

விருப்பு வாக்கு முறையை முழுமையாக நீக்குவதற்கும், தொகுதிவாரி மற்றும் விகிதாசார தேர்தல் முறைகள் கலந்த – ஒரு புதிய தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ள முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது தொடர்பில், கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சரவையில் காரசாரமான வாக்குவாதம் – எங்களுக்கும் அமைச்சர்கள் சிலருக்குமிடையில் ஏற்பட்டது.

அதற்கு முன்னைய தினம் 18 சிறுபான்மையினக் கட்சிகள், சிறிய கட்சிகள் இணைந்து இந்த விடயத்தில் ஒருமித்த தீர்மானத்திற்கு வந்திருந்தோம். புதிய தேர்தல் முறையில் இரட்டை வாக்குச் சீட்டு அறிமுகப்படுத்தப்படவில்லையென்றால், அதனை ஆதரிக்கமாட்டோம் என்ற தெளிவான முடிவோடு அமைச்சரவையில் நாங்கள் கடுமையாக வாதாடினோம்.

அதையும் மீறி, எங்களது கோரிக்கையை கவனத்தில் எடுக்காமல், புதிய தேர்தல் முறைமை நாடாளுமன்றத்தில் சம்ர்ப்பிக்கப்படுமானால், நாங்கள் எல்லோரும் அதனை எதிர்த்து வாக்களிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.

நேற்று, ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு கூட்டத்தின் போதும் – ஆசனங்களை அதிகரிப்பதன் தீர்மானத்திற்கு, அக்கட்சி உடன்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை புதிய தேர்தல் முறைமையினை நாடாளுமன்றத்தில் சட்டமூலமாக அறிமுகப்படுத்துவது குறித்து, தனது ஆட்சேபனையை அக்கட்சியின் செயற்குழு தெரிவித்திருப்பதாகவும் அறிகிறோம்.

அந்த அடிப்படையில், சிறுபான்மை கட்சிகளின் கோரிக்கையினை  உதாசீனம் செய்து, அறிமுகம் செய்யவுள்ள ஒரு தேர்தல் முறைமை, எந்த விதத்திலும் சாத்தியமாகாது என்பதை மிகவும் தெளிவாக நாங்கள் சொல்லி வைக்கின்றோம்.

இறுதியில், இரண்டு பெரிய கட்சிகள் மட்டும் தேர்தல் செய்வதற்கு அனுமதிக்கின்றதாக இந்தத் தேர்தல் முறை வந்துவிடும் என்ற காரணத்தினால், எங்களது பலத்த ஆட்சேபனையை நாங்கள் தெரிவிக்கின்றோம். நானும், அமைச்சர்களான பழனி திகாம்பரம், ரிசாட் பதியுதீன் ஆகியோரும் இந்த விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டில் இருக்கின்றோம்.

மீண்டுமொரு முறை, சிறுபான்மையினக் கட்சிகள், சிறிய கட்சிகளை ஜனாதிபதி சந்தித்து  இது தொடர்பான, உரிய மாற்றத்திற்கு இடமளிப்பார் என நம்புகின்றோம்.

இந்த 20ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும். ஆகையால் அதற்கு எதிரான நிலைப்பாட்டை நாங்கள் எடுக்க நேரிடும் என்று திட்டவட்டமாக அமைச்சரவையில் கூறியிருக்கின்றோம். அத்துடன் எங்களது எதிர்ப்புக்கு மத்தியில், இதற்கான சட்டவரைவு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டாலும், அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கும் நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம்” என்றார்.

இந்த 20ஆவது திருத்தத்தை உங்களால் தோற்றடிக்க முடியுமா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஹக்கீம், தோற்கடிப்பதென்பது ஒருபுறமிருக்க, இந்தச் செயல்பாடு இந்நாட்டு சிறுபான்மை சமூகங்களுக்கும், சிறிய கட்சிகளும் எதிரான ஜனநாயக விரோத நடவடிக்கையென்று குறிப்பிட்டதோடு, பெரும்பான்மைச் சமூகத்தின் வாக்குகளினால் மட்டுமல்லாது சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குப்பலத்தாலும் வெற்றி பெற்ற – தூரநோக்கு மிக்க ஜனாதிபதி, அவ்வாறு நடந்து கொள்ள மாட்டார் என்று நம்புகின்றோம் என்றார்.

இந்த விடயத்தில் நான் குரலெழுப்பும் போது, இனவாத அடிப்படையில் பேசுவதாக குற்றம் சாட்டுகிறார்கள். மேலும், சில அடிப்படையே இல்லாத காரணங்களைக் காட்டுகிறார்கள். ஆனால் நாங்கள் இதனை விட்டுக் கொடுக்கப்போவதில்லை.

ஒன்றுக்கு மேற்பட்ட (பல ஆசன) தொகுதிகள் என்பது பற்றியும் பேசப்படுகிறது. தொகுதிகளை தீர்மானிக்கும் போது, இந்நாட்டில் வசிக்கும் வெவ்வேறு சமூகங்களின் பரம்பல் அடர்த்தியாக இருக்கும் பிரதேசங்களை சரிவர அடையாளப்படுத்தி, அவற்றுக்குரிய தனித்தனித் தொகுதிகளை உரியமுறையில் வரையறுப்பதென்பது மிகவும் சிரமமான காரியமாகும். ஆகையால்தான் பல்லாசனத் தொகுதிகளின் அவசியமேற்படுகிறது.

தொகுதிகளை குறைக்கும் பொழுது – பல்லாசனத் தொகுதியென்பதும் பிரச்சினைக்குரியதாகின்றது. அதற்கு மேலதிகமாக, ஆசனத்திற்கு வேட்பாளர்கள் பெயர்குறிப்பிடப்படும் பொழுது, பிரதான அரசியல் கட்சிகள் இரண்டினதும்,வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமென்பதால், அவ்வாறான வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதற்கு வாக்காளர் உந்தப்படுவது இயல்பாகும்.

இதனால், தொகுதியில் வசிக்கும் வேறுகட்சிகளின் ஆதரவாளர்களும் கூட, வெற்றிவாய்ப்பு மிக்க வேட்பாளருக்கு வாக்களிக்கும் மனோநிலை எற்படும். அதே வாக்கைப் பயன்படுத்தி, மாவட்ட மட்டத்தில் ஆசனங்களை பகிர்ந்தளிக்கும் விகிதாசாரத் தேர்தல் முறையை கடைப்பிடிக்கும் பொழுது, தொகுதி மட்டத்தில் கட்சியொன்றின் வேட்பாளருக்கு வழங்கப்படும் வாக்கை, இதற்கும் பயன்படுத்துவதால் – சிறிய கட்சிகளுக்கு ஆதரவு வழங்கும் வாக்காளர்கள் தங்களது உண்மையான ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை இழந்து விட நேருகின்றது.

அத்துடன், சிறுபான்மையினக் கட்சிகளுக்கும், சிறிய கட்சிகளுக்கும் பாரிய அநியாயம் இழைக்கப்படுகின்றது. அதனால் இத்தகைய கட்சிகள் பெற்றுக் கொள்ளக் கூடிய ஆசனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவடையும் நிலைமை ஏற்படுகின்றது.

காலப்போக்கில் ஜே.வி.பி. போன்ற ஏனைய முக்கியமான கட்சிகளுக்கும் வேறுபட்ட சிந்தனைப் போக்குள்ள சிறிய கட்சிகளுக்கும் கிடைக்கும் ஆசனங்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சியைக் காணும் ஆபத்து உண்டு. அதனால், இவ்வாறான காலகட்டத்தில், பிரதான அரசியல் கட்சிகள் இரண்டுக்கு மட்டும் வெற்றி வாய்ப்புகளை – அதாவது சாதகமான நிலைமையை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு நடைமுறையாகவே, இந்த உத்தேச 20ஆவது திருத்தத்தை நாங்கள் காண்கின்றோம்.

இவ்வாறிருக்க, இதன் பின்னணியில் எங்களுக்கெதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றார்கள். என்னை இலக்கு வைத்து – எங்களது கட்சியின் நன்மைக்காகவே, நான் இவ்வாறான விடயங்களில் சுயநலத்துடன் நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டுகின்றனர். இவை முற்றிலும் தவறாகும். ஏனென்றால், இதுபற்றி நாங்கள் மிகவும் கவனமாகப் பரிசீலித்திருக்கின்றோம். முன்னர் நடந்த தேர்தல்கள் சிலவற்றின் பெறுபேறுகளைக் காட்டி, எங்களைப் போன்ற கட்சிகளின் ஆசன எண்ணிக்கை குறைந்துவிட மாட்டாதென்று எடுத்துக் காட்டுவதற்கு எத்தனிக்கின்றனர்.  இதற்கு நான் அமைச்சரவைக் கூட்டத்தில் உரிய முறையில் விளக்கமளித்திருக்கின்றேன்.

எங்களது கட்சி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போன்ற பல கட்சியினர் எங்களுக்கு ஆசனங்களை நேரடியாக வென்றெடுக்கக் கூடிய தொகுதிகளில் தனித்துத் தேர்தல்களில் போட்டியிடுகின்றோம். வேறு சில தொகுதிகளில் பிரதான கட்சியொன்றோடு சேர்ந்து போட்டியிடுகின்றோம். நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து போட்டியிடும் பொழுது, அந்தக் கட்சிக்கு கிடைக்கும் வாக்குகளில் – எங்களது வாக்கு வெளிப்படையாகத் தோன்றமாட்டாது. அவ்வாறான தேர்தல் முடிவுகளை ஒப்பிட்டு நோக்கி, எங்களுக்கு காட்ட முற்பட்டால், எங்களுக்கு உண்மையாக கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையை தெளிவாக எடுத்துக் காட்டும் தீர்வாக மாட்டாது. இது பற்றி நான் தெளிவாகத் தெரிவித்திருக்கின்றேன்.

எங்களால் முன்வைக்கப்பட்ட இரட்டை வாக்குச் சீட்டுகள் என்ற விடயத்தை முற்றுமுழுதாக உதாசீனம் செய்வதானால், இந்த 20ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கு நாங்கள் முழுமையான எதிர்ப்பை வெளிக்காட்டுவோம். சில கட்சிகளில் உட்பூசல் இருக்கின்ற பழிக்காக, தங்களது தனிப்பட்ட சுயநல நோக்கங்களுக்காக, 20ஆவது சட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவதை நாங்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

சமசமாஜக் கட்சி இலங்கையின் பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். அதனைச் சேர்ந்த அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன இன்று (சனிக்கிழமை) காலை, என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, எங்களுக்குச் சார்பாக இந்த விடயத்தில் தமது எதிர்ப்பையும் வெளியிட்டார் என்றும் அமைச்சர் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்