மஹரகம வைத்தியசாலைக்கு 50 லட்சம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கிய முஸ்லிம் சகோதரர்

🕔 June 13, 2016

– அஸ்ரப் ஏ சமத் –

ஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு தேவையாகவுள்ள பெட்  ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை கொள்முதல் செய்யும் பொருட்டு, கண்டி கட்டுக்கஸ்தோட்டயைச் சேர்ந்த ரஊப் ஹாஜியார் என்பவர் 50 லட்சம் ரூபாவினை மகரகம வைத்தியசாலையின் பணிப்பாளா் டொக்டா் வில்பட்டிடம் இன்று திங்கட்கிழமை கையளித்தார்.

சஊதி அரேபியா மதீனா நகரில் – ஹோட்டல்துறையில் கடமையாற்றும் ஹசன் ரஊப் எனும் தனது மகனின் ஊடாக மேற்படி நிதியினை ரஊப் ஹாஜியார் வழங்கினார்.

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு தேவையாகவுள்ள பெட்  ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை கொள்முதல் செய்வதற்காக, 04 மாதங்களுக்கு முன்பு எம்.என் முஹம்மட் என்பவர் தலைமையில், கதிஜா பவுன்டேசன் அமைப்பினால்,  20 கோடி ரூபா நிதி சேகரிக்கும் திட்டம்,  வைத்தியசாலையின் உதவியுடனும் சுகாதார அமைச்சின் அனுமதியுடனும் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த திட்டத்துக்காகவே,  மேற்படி ரஊப் ஹாஜியார் தனது மகன் ஊடாக இந்த 50 லட்சம் ரூபாவினையும் வழங்கினார்.இந்த தொகையுடன், 20 கோடி ரூபாய் சேகரிக்கும் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த ஒரு மாதத்திற்குள் ஜேர்மன் நாட்டில் இருந்து பெட் ஸ்கேனர் இயந்திரத்தை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, நிதியினை தலைமை தாங்கி திரட்டிய முஹம்மட் கூறினார்.

மேலும்  இவ் வைத்தியசாலைக்கு  25 கோடி ரூபாவினைத் திரட்டும் திட்டமொன்றும் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் முஹமட் தெரிவித்தாா்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்