அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகளுடன், ஜனாதிபதி ஒப்பந்தம்

🕔 June 12, 2016

Athaullah - 0099
மு
ன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகளுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று சனிக்கிழமை கைச்சாத்திட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளுடன் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

இதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மறுசீரமைப்பது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதன் பிரகாரம் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் மற்றும் புதிதாக இணையவுள்ள கட்சிகள் ஆகியவற்றுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுவதெனத் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் பெரும்பான்மை இனக் கட்சிகளுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை மேற்கொண்டு கூட்டமைப்பை விரிவாக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

இதற்கிணங்க, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளுடன் உத்தியோகபூர்வமான புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்களான மஹிந்த அமரவீர, பைஸர் முஸ்தபா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செயலாளர் நாயகமும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவாந்தா, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் பிரபா கணேசன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம், ரெலோ தலைவர் உதயராசா, தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்அ.எம். அதாஉல்லா உட்பட ஏனைய கட்சிகளின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை வலுவானதாக விரிவாக்கும் நோக்கிலும், அடுத்து நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலை இலக்கு வைத்தும் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டிருந்தன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்