மாடி வீட்டுத் திருடன், வெள்ளவத்தையில் அகப்பட்டார்

🕔 June 11, 2016

Climbing up - 0987வெள்ளவத்தையிலுள்ள தொடர் மாடி வீடொன்றில் பத்து லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளையும், 02 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடிய நபரொருவரை வெள்ளவத்தைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த தொடர்மாடியின் கழிவுநீர் குழாய் வழியாக ஏறி, ஆறாவது மாடியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த மேற்படி நபர், அங்கு கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.

சந்தேக நபர், கொஹுவல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், இவர் மூன்று மாடி சொகுசு வீடொன்றின் உரிமையாளர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும், இவரிடம் சொகுசு ரக வேன் ஒன்றும் உள்ளது.

வீடுகளில் திருடிய குற்றச்சாட்டின் பேரில் மேற்படி சந்தேக நபர், பல தடவை சிறைவாசம் அனுபவித்தவர் என்றும், இவர் சிறையிலிருந்து மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் விடுதலையானார் எனவும் அறிய முடிகிறது.

விசாரணையினை அடுத்து, வெள்ளவத்தை வீட்டிலிருந்து சந்தேக நபர் திருடிய பணம், மற்றும் நகைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த நபரின் மனைவியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் வீடுகளில் திருடிய நகைகளை, அவரின் மனைவிதான் அடகு வைத்து வந்துள்ளார்.

31 வயதுடைய சந்தேக நபர், 03 பிள்ளைகளின் தந்தையாவார். இவர் போதைப் பொருளுக்கு அடிமையானவர் எனத் தெரியவருகிறது.

இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து சுமார் 20 வீடுகளில் இவர் இதுபோன்று திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்