சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக் கோரிக்கையும், முகமூடி அரசியலின் சித்து விளையாட்டுக்களும்!

🕔 June 14, 2015

Sainthamaruthu - 0111

  • வழிப்போக்கன்

சாய்தமருது பிரதேசத்துக்கு தனியான உள்ளுராட்சி சபையொன்றினை ஏற்படுத்தித் தருமாறு, நீண்ட காலமாக கோரிக்கையொன்று விடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கை தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. சாய்ந்தமருதுப் பிரதேசமானது – தற்போது, கல்முனை மாநகரசபை நிருவாகத்தின் கீழ் உள்ளது. இங்கிருந்து – சாய்ந்தமருது பிரதேசம் – தனி உள்ளுராட்சி சபையாகப் பிரிந்து சென்றால், கல்முனை மாநகரசபைக்கான முஸ்லிம் பெரும்பான்மை மற்றும் வருமானம் என்று பல விடயங்களில் வீழ்ச்சியேற்பட்டு விடும் என்கிற அச்ச நிலையொன்று உள்ளது. ”ஆனால், இந்த அச்சமானது வெறும் கற்பனா வாதமானது, சாய்ந்தமருதுக்கென தனியான உள்ளுராட்சி சபையொன்று வழங்கப்படும்போது, கல்முனை மாநகரசபையானது மேற்சொன்ன எந்தவித வழிகளிலும் பாதிப்படையப் போவதில்லை” என்பது பெரும்பான்மைக் கருத்தாகும்.

இது ஒருபுறமிருக்க, சாய்ந்தமருதுக்குரிய தனியான உள்ளுராட்சி சபைக் கோரிக்கையானது, இன்று – அரசியல் மயப்பட்டுள்ளது. பலவிதமான அரசியல் சித்து விளையாட்டுக்களுக்கு மேற்படி கோரிக்கையானது – ஒரு கருவியாக மாறியுள்ளது.

இந்த நிலையில், சாய்ந்தமருதுக்கான தனித்த உள்ளுராட்சி சபையினைப் பெற்றுத் தருமாறு, அம்பாறை மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகள் பலரிடமும், அப்பிரதேசம் சார்பாகக் கோரிக்கை விடுக்கப்பட்டது. உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சராக அதாஉல்லா இருந்த போது, சாய்ந்தமருதுக்கு நகரசபையொன்றினைப் பெற்றுத் தரப்போவதாக, மிகப் பெரிய வாக்குறுதியொன்றினை வழங்கியிருந்தார். கிட்டத்தட்ட, ‘இரண்டொரு நாளைக்குள் சாய்ந்தமருதுக்கான நகரசபையை, அதாஉல்லா தந்து விடுவார்’ என்பதுபோல், அப்போது ஓர் ‘அரசியல் படம்’ காட்டப்பட்டது. இறுதியில் ஒன்றுமே நடக்கவில்லை. அதாஉல்லாவின் ‘படம்’, வெறும் ‘பப்படம்’ என்பதை மக்கள் புரிந்து கொண்டனர்.

அக்கரைப்பற்றுக்கான மாநகரசபையை – காதும் காதும் வைத்தாற்போல், ஓர் இரவுக்குள் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா உருவாக்கினார். அப்படியென்றால், விடயத்துக்குரிய அமைச்சராக இருந்தும், சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினை – ஏன் அவரால் உருவாக்க முடியாமல் போனது என்கிற நியாயமான கேள்வி எழுகிறதல்லா? உண்மையில், சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபைக் கோரிக்கையில் ஏறி, அரசியல் சவாரி செய்வதற்கே அமைச்சர் அதாஉல்லா விரும்பினார்.

இவ்வாறானதொரு நிலையில், சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபைக் கோரிக்கை, மு.காங்கிரசிடமும் கொண்டு செல்லப்பட்டது. முன்னைய அரசாங்கத்தில் மு.காங்கிரசுக்கு எவ்வித அதிகாரங்களும் இருக்கவில்லை. ஆனால், இப்போதைய அரசாங்கத்தில் – இவ்வாறானதொரு விடயத்தினை – வென்று கொடுக்குமளவுக்கு, மு.காங்கிரசானது அதிகாரம் மிக்கதொரு தரப்பாக மாறியுள்ளது.

மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், கடந்த மே மாதம் – சாய்ந்தமருதுப் பிரதேசத்துக்கு வருகை தந்திருந்தபோது, தமது உள்ளுராட்சி சபைக் கோரிக்கை தொடர்பில், அந்தப் பிரதேச பள்ளிவாசல் நிருவாகத்தினர் உள்ளிட்ட ஒரு தரப்பினர் – மு.கா. தலைவரைச் சந்தித்துப் பேசினார்கள். அந்த சந்திப்பு ஒலுவில் பிரதேசத்தில் இடம்பெற்றது.

இதன்போது, சாய்ந்தமருதுக்கான தனியானதொரு உள்ளுராட்சி சபையினைப் பெற்றுத் தருவதில், தனக்கு எவ்வித தயக்கமும் கிடையாதென்றும், அதற்குரிய முழுமையான நடவடிக்கையினை, தான் மேற்கொள்வதாகவும் ஹக்கீம் உறுதி வழங்கியிருந்தார்.

தற்போது, சாய்ந்தமருதுக்கான – தனியான உள்ளுராட்சி சபையினை உருவாக்குவதற்குரிய, மேல்மட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அறிய முடிகிறது.

நிலைமை இப்படியிருக்க, திடீரென்று – ஒரு பூதம் கிளம்பினாற்போல், சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக்கான கோரிக்கையினை முன்வைத்து, நாளை திங்கட்கிழமை அப் பகுதியில் ஹர்த்தால், கடையடைப்பொன்றுக்கு – அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ஊடகங்கள் மூலம் அறியக் கிடைக்கிறது. ‘சாய்ந்தமருது பொது மக்கள் அமைப்பு’ என்கிற பெயரில்தான் ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு ‘காளான்’ அமைப்பாகும். அதாவது, நேற்று முந்தாநாள் முளைத்ததாகும். இப்படியொரு அமைப்பு சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் இதற்கு முன்னர் அறியப்பட்டதேயில்லை.

போதாக்குறைக்கு, சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையொன்று கிடைக்கப் பெறுவதை, மு.கா. தலைமை தடுப்பதாகவும் – மேற்படி அமைப்பு பிரசாரம் செய்து வருகிறது.

இது என்ன வகையான கூத்து என்று புரியவேயில்லை. மு.காங்கிரசிடம் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபைக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு, அதை நிறைவேற்றில் தருவதாக அந்தக் கட்சியின் தலைவர் உறுதி வழங்கியிருக்கின்றார். இந்த நிலையில், மேற்படி அவசரக் குடுக்கைத் தனமான ஹர்த்தால் – கடையடைப்பு ஏன்? எதற்கானது? என்பதைக் கொஞ்சம் விசாரித்துப் பார்ப்பவர்களுக்கு, இதற்குப் பின்னால், முன்னால், பக்கவாட்டிலுள்ள அரசியல் என்ன என்று புரியத் துவங்கும்.

மு.காங்கிரசிலிருந்து ஒதுக்கப்பட்ட நிலையில், அண்மையில் வேறொரு முஸ்லிம் கட்சியில் இணைந்து கொண்ட சிலரின் பின்னணியில்தான், நாளைய ஹர்த்தால் நடவடிக்கை இடம்பெறவுள்ளது. மு.காங்கிரசுக்கு எதிராக –  சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் எதையாவது செய்து காட்ட வேண்டிய தேவையில் உள்ள இவர்களுக்கு, கையில் கிடைத்த ‘சமாச்சாரம்’தான் சாய்ந்தமருதுக்கான  உள்ளுராட்சி சபைக் கோரிக்கையாகும்.

இந்த விடயத்தை வைத்து – சாய்ந்தமருது மக்களைச் சூடேற்றி, அப்படியே – அந்தச் சூடு தணிவதற்குள், அந்த மக்களை மு.கா.வுக்கும் அதன் தலைமைக்கும் எதிராகத் திருப்பி விடலாமென மேற்படியார்கள் யோசிக்கின்றார்கள். ஆனால், மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர். இந்த ஹர்த்தாலின் பின்னாலுள்ள சூழ்ச்சி பற்றி அவர்கள் விளங்கியுள்ளனர்.

சாய்ந்தமருது மக்கள் – அவர்களுக்கான உள்ளுராட்சி சபையொன்றினைக் கோருவதென்பது அவர்களின் உரிமைாகும். அதில் நியாயங்களும் இருக்கின்றன. ஆனால், அதை வைத்து, ஒரு கட்சிக்கும் அதன் தலைமைக்கும் எதிராக – எந்தவித நியாயங்களுமில்லாமல், அந்தக் கட்சிக்கு எதிரானவர்கள் – தங்கள் முகங்களை மறைத்துக் கொண்டு, பொய்ப் பிரசாரங்களைச் செய்வதென்பது – சாய்ந்தமருது மக்களையே ஏமாற்றும் நடவடிக்கையாகும்.

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையொன்றினைப் பெற்றுத் தரும் நடவடிக்கையில், முன்வைத்த காலினை – மு.கா. இன்னும்  பின் வைக்கவில்லை. இவ்வாறானதொரு நிலையில், அந்தக் கட்சியினையும், அதன் தலைமைத்துவத்தினையும் பகைத்துக் கொள்ள வேண்டிய தேவையானது – சாய்ந்தமருது மக்களுக்குக் கிடையாது.

எனவே, சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையொன்றினைப் பெற்றுத் தருவது தொடர்பில், மு.கா. தலைவர் ஹக்கீம் வழங்கிய உத்தரவாதத்துக்கிணங்க, அவரைச் சந்தித்து – அந்த விடயத்தினை துரிதப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை, சாய்ந்தமருது பிரதேசத்தின் புத்திஜீவிகள், பிரமுகர்கள், மதிப்புக்குரிய உலமாக்கள் மேற்கொள்ள வேண்டும்.

மு.கா.வுக்கு எதிரான அரசியல் நோக்கம் கொண்டவர்களால், அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நாளைய ஹர்த்தாலினை – பெரிய பள்ளிவாசலோடு தொடர்புபடுத்தி, மக்களை பள்ளி வாசலுக்கு அழைக்கும் வகையிலும் – பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்மையினைக் காணக்கிடைக்கின்றன.

இந்த விடயத்தில், பள்ளி வாசல் நிருவாகத்தினரும் – மதிப்புக்குரிய உலமாக்களும் மிகவும் கவனமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டியுள்ளது. ஒரு கட்சிக்கும், அதன் தலைமைக்கும் எதிரான பிரசாரங்களோடு முன்னெடுக்கப்படும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு, நடுநிலைத் தன்மையோடு செயற்பட வேண்டிய – பள்ளி வாசல்கள் பலியாகி விடக் கூடாது.

சாய்ந்தமருது மக்களின் உள்ளுராட்சி கோரிக்கையானது விரைவில் கனிய வேண்டுமென்பதுதான் நமது விரும்பமாகவும் உள்ளது. அதற்காக, அந்தக் கோரிக்கையினை ‘அடித்து’க் கனிய வைக்க நினைப்பதென்பது – சாணக்கியமான செயற்பாடாகத் தெரியவில்லை.

‘அடித்து’க் கனிய வைக்கும் பழங்கள் – பெரும்பாலும் அழுகித்தான் போவதுண்டு.  தப்பித் தவறி, அப்படித்தான் கனிந்தாலும் – அவற்றில் பெரிதாக ருசியிருப்பதில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்