சுதந்திரக் கட்சியில் கோட்டாவுக்குப் பதவி; பொய்யான செய்தி என்கிறார் துமிந்த திஸாநாயக்க
கோட்டாபய ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் – அவர் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்;
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவராக கோட்டாபய ராஜபக்ஷவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மைகளும் கிடையாது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைமைகளை பொறுப்பேற்றுக் கொள்ள போதியளவு இளைஞர்கள் இருக்கின்றார்கள். இரண்டாம் நிலைத் தலைவர் ஒருவரை கட்சிக்கு வெளியே இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை.
ஜனவரி மாதம் 08ம் திகதி மஹிந்த ராஜபக்ஷ குடும்ப ஆட்சியிலிருந்து நாட்டை மட்டுமன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீட்டு எடுத்திருந்தார்.
சுதந்திரக் கட்சியில் தற்போது உள்ளக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் கட்சியில் குடும்ப மரங்களை உருவாக்கிக் கொள்ள எவருக்கும் இடமளிக்கப்படாது” என்றார்.
தொடர்பான செய்தி: கோட்டாவை சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவராக நியமிப்பது குறித்து பேச்சு; அமைச்சர் செனவிரட்ன