கொஸ்கம சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மஸ்தான் எம்.பி. உதவி
🕔 June 7, 2016
கொஸ்கம சாலாவ ராணுவ முகாம்ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால், பாதிக்கப்பட்ட பூகொட குமாரிமுல்ல மக்களுக்கான குடிநீர் தேவையினை, தனது சொந்தப் பணத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் நிறைவேற்றிக் கொடுத்தார்.
கொஸ்கம வெடி விபத்தின் காரணமாக தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேறி, விகாரையிலும் வேறு பகுதிகளிலும் தங்கியிருந்த மக்களை நேற்று திங்கட்கிழமை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டார்.
குறித்த விபத்தினால் பாதிக்கப்பட்ட பூகொட குமாரிமுல்ல பகுதிக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர், அங்குள்ள மக்களின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.
குமாரிமுல்ல பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, அப்பகுதியிலுள்ள நீரை – குடிநீர்த் தேவைக்கு பயன்படுத்தவேண்டாமென வைத்திய அதிகாரிகளால் அறிவுருத்தப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, உடனடியாக தனது சொந்த செலவில் 250 குடும்பங்களுக்கு தலா 05 லீற்றர் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் போத்தல்களை நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் வழங்கினார்.