கொஸ்கம; தீ அணைந்தது, மக்கள் திரும்புகின்றனர், பிரதேசமெங்கும் வெடிபொருட்களின் எச்சங்கள்
கொஸ்கம ராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடி விபத்தினைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ தற்போது அணைந்துள்ளது.
இந்த நிலையில், முகாமினைச் சுற்றி 06 கிலோமீற்றர் தூரத்துக்குள் வசித்து வந்தவர்கள் நேற்றிரவு தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். ஆயினும், தற்போது அவர்கள் தமது இடங்களுக்குத் திரும்பி வருகின்றார்கள்.
இருந்தபோதும், முகாமிலிருந்து 01 கிலோமீற்றர் தொலைவில் இருப்பிடங்களைக் கொண்டவர்களை, அவர்களின் இடங்களுக்குத் திரும்ப வேண்டாம் என, ராணுவம் அறிவித்துள்ளது.
இதேவேளை, ஆயுதக் களஞ்சியத்தில் வெடித்த பல பொருட்களின் பகுதிகள், முகாமைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பிரதேசங்களில் சிதறிக் காணப்படுகின்றன.
எனவே, இவ்வாறான பொருட்களை தொட வேண்டாம் என ராணுவம் கூறியுள்ளது. சிலவேளைகளில், அந்தப் பொருட்கள் வெடிக்கக் கூடிய ஆபத்துக்கள் உள்ளன என்றும் ராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், ஆயுதக் களஞ்சியத்திலிருந்து சிதறிய பொருட்கள் எவற்றினையாது, பொதுமக்கள் காணக்கிடைத்தால், அவை குறித்து தொலைபேசி இலக்கங்களான 0113818609 அல்லது 0112434251 ஆகியவற்றுக்கு அறிவிக்குமாறும் ராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது.