‘பொன்மனச் செல்வர்’ உதுமாலெப்பை; ஒரு நினைவுக் குறிப்பு
(முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஹும் உதுமாலெப்பை அவர்களுக்கான அனுதாபப் பிரேரணையொன்று, அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனையொட்டி, உதுமாலெப்பை அவர்கள் தொடர்பான நினைவுகளையும், தகவல்களையும் பகிர்ந்து கொள்ளும் வகையில், இந்தக் குறிப்பு எழுதப்படுகிறது)
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஹும் எம்.ஐ. உதுமாலெப்பை அவர்கள், அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இக்கிராமத்தின் கல்வி வளர்ச்சியில் பெரிதும் பங்களிப்புச் செய்த ஒருவராக – இன்றும், கல்விச் சமூகத்தினால் மதிக்கப்படுகின்றார். பயிற்றப்பட்ட ஆசிரியராக, வர்த்தகப் பட்டதாரியாக, அக்கரைப்பற்று மத்திய மகா வித்தியாலயத்தின் சிறப்பு மிகு அதிபராக இருந்து – மிகப் பெறுமதியான சேவைகளைப் புரிந்துள்ளார்.
அக்கரைப்பற்று மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபராக உதுமாலெப்பை – மிக நீண்டகாலம் சேவையாற்றியுள்ளார். அவரின் அபார முயற்சியினால், அக்கரைப்பற்று முஸ்லிம் மகா வித்தியாலயம், அப்போதே முதன்மை வரிசையில் தேசிய பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது.
அக்கரைப்பற்றில் இன்று – வைத்தியர்களாகவும், பொறியியலாளர்களாகவும், பட்டதாரிகளாகவும் பணிபுரிகின்றவர்களில் பெரும்பாலானவர்கள், மர்ஹும் உதுமாலெப்பையின் மாணவர்களாவர்.
கல்வி சம்பந்தமான இவரின் விசாலமான பணிகளே, அரசியலில் ஈடுபடுமாறு, மக்கள் இவரை தூண்டுவதற்குக் காரணமாக அமைந்தன. 1983 முதல் 1989 வரை, ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில், பொத்துவில் தொகுதிக்கு நியமன எம்.பி. யாக நியமிக்கப்பட்டார். அதிலிருந்து ‘பொத்துவில் முதல்வர்’ என்று இப்பிரதேச மக்களால் அழைக்கப்படலானார்.
மர்ஹும் அஷ்ரஃப் அவர்களின் சமூக, அரசியல் இயக்கமான – ஸ்ரீ.ல.மு.காங்கிரசில் 1999 ஆம் ஆண்டு இணைந்து கொண்டு, பணி செய்தார். ‘பொன்மனச் செல்வர்’ எனும் புனைப்பெயரால் மர்ஹும் அஷ்ரஃப் அவர்களால் அடையாளப்படுத்தப்பட்டார்.
அரசியல் களமானது – ஊழல், மோசடி, வன்முறைக் கலாசாரங்களற்ற, ஒட்டு மொத்த ஜனநாயக விழுமியங்களின் அடையாளமாக அமைய வேண்டுமென விரும்பியதோடு, அவற்றினை நடைமுறைப்படுத்துவதிலும் பெரும் பாடுபட்டார்.
உதுமாலெப்பை அவர்கள் – அரசியல் அதிகாரத்திலிருந்த காலத்தில் அக்கரைப்பற்று கல்வி அலுவலகம், காதிரியா வித்தியாலயம், பத்ர் வித்தியாலயம் ஆகியவற்றை நிர்மாணிப்பதற்கு அடிப்படையாக இருந்தார். பத்ர் நகர், காதிரியா கிராமம் ஆகிய புதிய குடியிருப்புக்களும் இவரின் முயற்சியால் உருவாக்கப்பட்டவைதான். இவரின் பணிகளினால் கவரப்பட்ட மக்கள், இவரைக் கௌரவிக்கும் வகையில் – வீட்டுத் திட்டமொன்றுக்கு ‘உதுமாபுரம்’ எனப் பெயரிட்டு மகிழ்ந்தார்கள்.
சமூக சிந்தனை, தூரப் பார்வை, சமாதான நோக்கு என்பவை – இவரின் எல்லா நடவடிக்கைகளிலும் பரவிக் கிடந்தன.
இனப் பிரச்சினை உக்கிரமடைந்திருந்த காலகட்டத்திலும் – மிகப் பெரிய சமூகப் பணி செய்த, அனைத்துப் பள்ளி வாசல்கள் சம்மேளம் எனும் அமைப்பானது, உதுமாலெப்பையின் சிந்தனையிலிருந்து உதித்ததொன்றாகும். இதைத் தெரிந்து கொள்கின்ற போது, இவரின் தூர நோக்கு மற்றும் சமூக சிந்தனை பற்றிய நமது மதிப்பீடுகள் இன்னும் அதிகமாக்குகின்றன.
எல்லாம் வல்ல அழ்ழாஹ், இவரின் குற்றம் குறைகளை மன்னித்து – இவருடைய சேவைகளை ஏற்று, ‘பிர்தௌஸ்’ எனும் சொர்க்கத்தை வழங்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.