அமைச்சர் கிரியெல்ல, 150 பிரத்தியேக உத்தியோகத்தர்களை நியமித்துள்ளதாக ஜே.வி.பி. குற்றச்சாட்டு
அமைச்சர் லக்மன் கிரியெல்ல, தனக்குக் கீழுள்ள பெருந்தெருக்கள் அமைச்சில் 94 பேரை இணைப்புச் செயலாளர்களாகவும், 56 பேரை ஆலோசகர்களாகவும் நியமித்துள்ளார் என்று ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.
இவர்களில் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ள 56 பேரும், அமைச்சரின் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளவர்களில் சிலர் க.பொ.த. சாதாரணதரம் கூட, சித்தியடையாதவர்கள் என்றும் அனுர குமார திஸாநாயக்க கூறினார்.
“சாதாரணமாக ஓர் அமைச்சருக்கான பிரத்தியேக பணியாளர்களாக 15 பேரை மட்டும்தான் நியமிக்க முடியும். ஆனால், அமைச்சர் கிரியெல்ல 94 பேரை இணைப்புச் செயலாளராக அமைச்சில் நியமித்துள்ளார். அவருடைய அமைச்சில் அப்படி என்னதான் வேலைகள் உள்ளன என்று எமக்குத் தெரியவில்லை” என்றும் அவர் சொன்னார்.
அமைச்சரின் இந்த செயற்பாடானது, நல்லாட்சியிலும் அநாகரீகான மனநிலையோடு செயற்படுகின்றமையினையும், கடந்த ஆட்சியாளர்களைப் போலவே இவர்களும் நடந்து கொள்கிறார்கள் என்பதையும் உறுதிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.