‘துயர் துடைக்கும் தூய ரமழான்’ திட்டத்தின் கீழ் உதவி பெற, 6500 குடும்பங்கள் விண்ணப்பம்; முஜிபுர் ரஹ்மான்

🕔 May 31, 2016
Mujibur Rahman - 095‘துயர் துடைக்கும் தூய ரமழான்’ திட்டத்தின் கீழ், உதவி பெறுவதற்காக 06 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாக அவ்வமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு, புனித ரமழான் மாதத்தில் இடையூறின்றி நோன்பு கடமைகளை மேற்கொள்வதற்கு உதவி புரியும் வகையில், கொழும்பு மாவட்ட அபிவிருத்தி மன்றம் மேற்படி ‘துயர் துடைக்கும் தூய ரமழான்’ திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் மேற்படி திட்டம், கடந்த வியாழக்கிழமை அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதற்காக, வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு 03 தினங்களுக்கு பின்னர் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டன. இந்நிலையில் விபரங்களை சேகரிப்பதற்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி நேற்று திங்கட்கிழமையுடன் முடிவடைந்துள்ளது.

இதற்கமைய 6500 க்கும் மேற்பட்ட குடும்பங்களிடமிருந்து கிடைக்கெப்பெற்ற விண்ணப்பங்களில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனி நபர்கள் உள்ளடங்குகின்றனர்.

குறித்த உதவித் திட்டத்தின் மூலம் கொழும்பு மாவட்ட அபிவிருத்தி மன்றம் நிதியினைசேகரிக்காது, பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கான உதவிகளை தனவந்தர்கள் நேரடியாக சென்று மேற்கொள்வதற்கான தகவல்களை வழங்கி, இரு தரப்பினருக்குமான தொடர்பினை மேற்கொண்டு வருகின்றது.

இத்திட்டத்தினூடாக உதவிகளை மேற்கொள்ள விரும்புவோர் எதிர்வரும் 06 ஆம் திகதிக்கு முன்னர், கொழும்பு மாவட்ட அபிவிருத்தி மன்றத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பு கெள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்: 011-3443199/011-7907838.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்