கிழக்கு முதலமைச்சர் விவகாரத்தினூடாக, இனக் கலவரத்தினை உருவாக்க முயற்சிக்கின்றனர்: லாகீர்

🕔 May 28, 2016

Laheer MPC - 098கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் கடற்படை அதிகாரிக்கு இடையிலான விவகாரத்தினை வைத்துக் கொண்டு, பேரினவாத சக்திகளும் – தேசதுரோக சக்திகளும் முஸ்லிம்களுக்கும் படையினருக்கும் இடையில் கசப்புணர்வுகளையும், பிளவுகளையும் ஏற்படுத்த எத்தணிகின்றனர் என்று கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம். லாகீர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;

“அண்மையில் சம்பூரில் இடம்பெற்ற சம்பவத்தை வைத்துக் கொண்டு, கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக, சில பேரினவாத சக்திகளும், அவற்றுக்குத் துணை போகும் குழுவினரும் ஊடகங்களினூடாக செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். குறித்த செய்தியானது உண்மைக்கு புறம்பாக சோடிக்கப்பட்ட செய்திகளாகும். குறித்த சம்பூர் மகா வித்தியாலயமானது – கிழக்கு மாகாண கல்வியமைச்சரின் கீழ் பரிபாலிக்கப்படுகின்றது.

அப்பாடசாலையில் இடம்பெறுகின்ற விழாக்களை கிழக்கு மாகாண கல்வி அமைச்சினூடாக நடத்துவது முறையாகும். இவ்விழாவில் கிழக்கு மாகாண ஆளுனர் பிரசன்னமாகியிருந்த அதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரும்  சமூகமளித்திருந்தனர். இவ்வேளையில்தான் முதலமைச்சர் மேடையை நோக்கி சென்றபோது, சம்பந்தப்பட்ட கடற்படை அதிகாரி முதலமைச்சரை மேடையில் ஏறவிடாது அவரின் வயிற்றுப்பகுதியைப் பிடித்து தடுத்து நிறுத்தியுள்ளார். இதுவே உண்மைச் சம்பவமாகும்.

இதனை மறைத்து விட்டு, படையினருக்கும் முதலமைச்சருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக திரிவுபடுத்தி ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. முதலமைச்சர் தனக்கு ஏற்பட்ட அநிதீயை, எதிர்த்து சொன்ன விடயத்தை மாத்திரம் ஊடகங்களில் தனிமைப்படுத்தி  வேறாகக் காட்டி முதலமைச்சர் படையினரை தூசித்தார் என்று காட்ட முனைகின்றனர்.

குறித்த சம்பவத்தை ஊடகங்களில் முழுமையாக காட்டுவதனூடக, உண்மையினை அறிந்து கொள்ள முடியும்.  ஊடகவியலாளர்களே உண்மைச்சம்பவத்தை முழுமையாக காட்டுமாறு உங்களிடம் வினையமாக வேண்டுகின்றேன்.

பேரினவாத சக்திகளும், தேசதுரோக சக்திகளும் முஸ்லிம்களுக்கும் படையினருக்கும் இடையில் பூதகரமான கசப்புணர்வுகளையும், பிளவுகளையும் ஏற்படுத்த எத்தணிகின்றனர். கிழக்கு மாகாண முதலமைச்சர் –  கிழக்கிலங்கையின் கௌரவ பிரஜையாவார். முதலமைச்சரை – வேண்டுமேன்றே தேச துரோக சக்திகள் விமர்சிப்பது மிகவும் விந்தையாக இருக்கின்றது.

அது மாத்திரமின்றி முன்னாள் பொலிஸ் மா அதிபரை, வீதியில் வைத்து பொதுமக்களுக்கு முன்பாக சீருடையை பிடித்து அகௌரவப்படுத்தியவர்கள் கூட, நாட்டு பற்றாளர்கள் போல் பேசிக்கொண்டு, கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரத்தினை வைத்து, இன்னுமோர் இனக் கலவரத்தினை ஏற்படுத்துவதற்கு முயற்கிக்கின்றனர்.

முஸ்லிம்களும் இந்நாட்டினுடைய கௌரவமான பிரஜைகள் என்பதோடு சிங்கள, தமிழ் சகோதரர்களும் எங்களது சகோதரர்களாவர். எங்களுக்குள் பிரித்தாளுகின்ற எண்ணம் வேண்டாம். இந்த நல்லாட்சியில் நாட்டை வெற்றிகரமாக அபிவிருத்தி செய்வதோடு எங்களுக்குள் இருக்கின்ற வேற்றுமைகளை கலைந்து ஒற்றுமையாக சேர்ந்து விரைவாக இந்நாட்டை முன்னெடுத்து அபிவிருத்தி செய்வதற்க்கு அனைவரும் ஒன்று சேருமாறும் அரைகூவல் விடுகின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்