வேறு நபர்களின் பெயரில், சொத்துக்கள் வாங்கி குவித்தார் பஸில்; நீதிமன்றில் உண்மை அம்பலம்

🕔 May 28, 2016

Basil - 976ம்பஹா மாவட்டம், தொம்பே பிரதேசத்திலுள்ள காணி – தனது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள போதும், அதன் உரிமையாளர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷதான் என்று முதித ஜயகொடி என்பவர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டம், தொம்பே பிரதேசத்தில் பதினாறு ஏக்கர் காணியொன்றை வாங்கி, ஆடம்பர மாளிகையொன்றை நிர்மாணித்துள்ள விவகாரம் தொடர்பில் பூகொட நீதிமன்றத்தில் வழக்கொன்று நடைபெற்று வருகின்றது.

குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ராஜபக்ஷவினரின் நம்பிக்கைக்குரிய கட்டிடக்கலை நிபுணர் முதித ஜயகொடி – நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்திருந்தார்.

குறித்த வாக்குமூலத்தில்,தொம்பே காணி – தன்னுடைய பெயரில் பதியப்பட்டுள்ள போதிலும், அதன் உண்மையான உரிமையாளர் பசில் ராஜபக்ஷதான் என்று தெரிவித்துள்ளார்.

காணியில் அமைக்கப்பட்டுள்ள ஆடம்பர மாளிகைக்கான அடிக்கல்லினை, பசில் ராஜபக்ஷவின் மனைவி நட்டதாகவும், வீட்டின் உள் அலங்காரங்களை பசில் ராஜபக்ஷவின் புதல்வியொருவர் மேற்கொண்டதாகவும் முதித ஜயகொடி தெரிவித்துள்ளார்.

அண்மையிலும், மாத்தறை பிரவுன்ஸ் ஹில் மாளிகை தொடர்பான வழக்கில் – பஸில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டிருந்தார். அந்த காணி மற்றும் மாளிகையும் ராஜபக்ஷவினரின் உறவினரான நடேசன் என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரிய வந்தது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள முதித ஜயகொடி, ராஜபக்ஷவினரின் அனைத்துச் சொத்துக்களும், அடுத்தவரின் பெயர்களில் வாங்கிக் குவிக்கப்பட்டதாகவும், ஆட்சி மாற்றத்தின் பின்னர் சில சொத்துக்கள் ரகசியமான முறையில் குறைந்த தொகைக்கு வேறு நபர்களுக்கு கைமாற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்