வெள்ளப் பாதிப்பு; முஸ்லிம் காங்கிரசின் இரண்டாம் கட்டப் பணி ஆரம்பம்
🕔 May 26, 2016
– ஷபீக் ஹுஸைன் –
முஸ்லிம் காங்கிரசின் ஏற்பாட்டில், இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை கழுவி துப்புரவு செய்யும் நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை காலை முதல் வெல்லம்பிட்டி, மெகடகொலன்னாவ, பொல்வத்த, வென்னவத்த மற்றும் அம்பத்தல ஆகிய இடங்களில் இடம்பெற்றன.
வெள்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ளும் இரண்டாம் கட்ட பணியாக இந் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
இந்தப் பணிகள் ஆரம்பமான போது – மு.காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீமும் வருகை தந்திருந்தார்.
வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் கட்சியின் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீமின் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான், மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷத் நிசாம்தீன், அவரது செயலாளர் ரியாஸ் கபூர் மற்றும் உயர்பீட உறுப்பினரும், அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான ரஹ்மத் மன்சூர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் முன்னெடுக்கப்பட்டன.
இதில் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் அனர்த்த நிவாரண குழுவினர், பகுதி பகுதியாகப் பிரிந்து, வீடுகளையும் பாதைகளையும் துப்பரவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இந்த சுத்திகரிப்பு நடவடிக்கைகள், முஸ்லிம் காங்கிரஸ் அனர்த்த நிவாரண இளைஞர் அணியினரால் அடுத்துவரும் நாட்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன.