வசீம் தாஜுதீன் கொலை: முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்
வசீம் தாஜூதீன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
அனுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டார்.
சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸார் மற்றும் முறைப்பாட்டாளர் தரப்பு சட்டத்தரணிகள் ஆகியோர், தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் மொபிடெல் நிறுவனம் போதுமான ஒத்துழைப்புகளை வழங்குவதில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதவான், துரிதமாக தகவல்களை வழங்குமாறு குறித்த தொலைபேசி நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
வசீம் தாஜூதீன் 2012 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார், இந்த கொலை சம்பவம் விபத்து என அப்போதைய பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
ஆனால் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டார் எனக் கண்டறியப்பட்டது.