வசீம் கொலையில் கைதான அனுர சேனநாயக்கவுக்கு வைத்தியப் பரிசோதனை

🕔 May 24, 2016

Anura senanayake - 0099விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக, சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபல ரக்பீ வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட அனுர சேனாநாயக்க, எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் –  சிறைச்சாலை வைத்தியசாலையில் நேற்றிரவு வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டபோது, அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி எரிந்த கார் ஒன்றில் இருந்து வசீம் தாஜுதீன் சடலமாக மீட்கப்பட்டிருந்ததுடன், முன்னர் அது விபத்து என்று கூறப்பட்டது.

எனினும் அது விபத்து அல்ல கொலை என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தாஜுதீன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட தினத்தன்று அதிகாலை 2.45ற்கும் 3.20ற்கும் இடைப்பட்ட நேரத்தில், நாரஹேன்பிட்டிய சாலிகா மைதானத்திற்கு அருகில் அனுர சேனாநாயக்க உலாவிக்கொண்டிருந்தமைக்கான, ஆதாரங்கள் உள்ளதாக, ரகசிய பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்