முஸ்லிம் காங்கிரஸ் அதன் இலக்கை அடையவில்லை; செயலாளர் ஹசனலி

🕔 May 22, 2016

Hasan Ali - 096
-எம்.வை. அமீர் —

“முஸ்லிம் தேசியம் ஒன்றை ஸ்தாபித்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்ட போதிலும், கட்சியின் தலைவர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், இந்தக் கட்சியானது, இரண்டு – மூன்று எனப் பிரிந்து கூறுபோடப்பட்டுள்ளதே தவிர, கட்சியின் இலக்கு அடையப்படவில்லை” என்று மு.காங்கிரசின் செயலாளரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசனலி தெரிவித்தார்.

சாய்ந்தமருதைச் சேர்ந்த பன்னூலாசிரியர் எம்.எம்.எம். நூறுல் ஹக் எழுதிய ‘முஸ்லிம் அரசியலின் இயலாமை’ எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

டொக்டர் எஸ். நஜிமுதீன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே, மு.கா. செயலாளர் ஹசனலி மேற்கண்ட விடயத்தைக் கூறினார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்;

“இலங்கையில் உள்ள அநேகமான பல்கலைக்கழகங்கள், அந்தப் பல்கலைக்கழகம் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகம் சார்ந்த விடயங்களில் அக்கறை செலுத்தி வருகின்றன. குறிப்பாக, இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அரசியலைமைப்பு சீர்திருத்தம் போன்ற விடயங்களில், அந்த சமூகங்களுக்கான பங்குகள் பற்றி, புத்திஜீவிகளையும் அரசியல்வாதிகளையும் ஒன்றுதிரட்டி ஆவணங்களைத் தயாரித்து வருகின்றன.

அதுபோன்று முஸ்லிம்களுக்கு நியாயங்களை பெற்றுக்கொடுக்கக் கூடிய புத்திஜீவிகள் நிறைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகம், மௌனமாக இருக்காமல் – புத்திஜீவிகளையும் அரசியல்வாதிகளையும் ஒன்றுதிரட்டி முஸ்லிம் சமூகத்தின் இலக்கை அடைவதற்கு விரைந்து செயற்படவேண்டும்.
அரசியல்வாதிகளுக்கு இடையிலான பிரச்சினைகள் தீரும் என்று எதிர்பார்க்க முடியாது. அதேபோன்று அவர்கள் இணக்கப்பாட்டுக்கு வந்ததன் பின்னர்தான், அவர்கள் சார்ந்த சமூகத்தின் தீர்வு விடயங்களை யோசிக்க வேண்டும் என்றும் இல்லை. எனவே, உடனடியாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தலைமைத்துவத்தின் கீழ், வெளியில் உள்ள புத்திஜீவிகள் மற்றும் அரசியல்வாதிகளை இணைத்துக்கொண்டு, செயற்படவேண்டும.;

முஸ்லிம் சமூகத்துக்கு அதன் தனித்துவம், அடையாளம், இருப்பு மற்றும் நிலத்தொடர்புள்ள அரசியல் அதிகாரம் போன்றவற்றை பெற்றுக்கொடுக்க வேண்டும். முஸ்லிம் தேசியம் ஒன்றை ஸ்தாபித்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. காலப்போக்கில் அக்கட்சி தலைவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், தற்போது இரண்டு மூன்று எனப்பிரிந்து, அந்தக் கட்சி கூறுபோடப்பட்டுள்ளதே தவிர, கட்சியின் இலக்கு அடையப்பட வில்லை என்றுதான் கூற வேண்டும்.

எனவே, வேறுபாடுகள் எதுவுமின்றி முஸ்லிம் தேசியத்தை நிறுவுவதற்காக, புத்திஜீவிகள் ஓரணியில் திரளவேண்டும.; முஸ்லிம்கள் தொடர்பில் ஆவணங்களை தயாரித்து அரசியலமைப்பு சபையிடம் புத்திஜீவிகள் கையளிக்க வேண்டும்” என்றார்.

இதேவேளை, முஸ்லிம்காங்கிரஸின் தலைவருக்கும் தனக்கும் இடையில் ஏற்பட்ட இடைவெளி குறித்து கருத்து எதனையும் இப்போதைக்கு கூறமுடியாது என்றும் மு.கா செயலாளர் ஹசனலி இதன்போது கூறினார்.

இந் நிகழ்வில், தென்கிழக்குப் பல்லைக்கழகத்தின் தமிழ்துறை தலைவர் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். Hasan Ali - 097Hasan Ali - 095Hasan Ali - 098

Comments

புதிது பேஸ்புக் பக்கம்