தாஜுத்தீன் கொலையுடன் தொடர்புடைய MP களின் பெயர்களை வெளியிட வேண்டிவரும்; பிரதமர் தெரிவிப்பு

🕔 May 21, 2016

Ranil - 0998பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜூடீன் மற்றும் ஊடகவியலாளர் எக்னலிகொட ஆகியோரின் கொலைகளுடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட நேரிடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தொடர்பிலான விபரங்களை வெளியிட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டபோதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தொடர்பிலான விபரங்களை வெளியிடுவதாயின் ஊடகவியலாளர் எக்னலிகொட மற்றும் பிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜூடீன் ஆகியோரின் கொலைகளுடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களையும் வெளியிட நேரிடும் என்று அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாய்மூல கேள்வி நேரத்தின்போது, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில எழுப்பிய கேள்வியொன்று பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் இக்கருத்தை தொடர்ந்து உதய கம்மன்பில ஆளும் கட்சியினருடன் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளின் விபரங்களை வெளியிடுமாறு, ஏற்கனவே வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், அது தொடர்பில் கம்மன்பில நேற்று சபையில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க, நிதிக் குற்றப் பிரிவில் பல விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதிகாரிகளின் விபரங்களை வெளியிட முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நிதிக்குற்ற புலனாய்வுப் பிரிவில் உள்ளவர்களின் பாதுகாப்பு மற்றும் தனித்துவம் பேணப்பட வேண்டியதுடன், விபரங்களை வெளியிடுவதால் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகள் பாதிக்கப்படும் என, சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பதிலளித்த ரணில், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தொடர்பிலான விபரங்களை வெளியிட்டால், படுகொலைகளுடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்களது பெயர்களையும் வெளியிட நேரிடும் எனக் கூறியுள்ளார்.

Comments