மு.கா. தலைவர் ஹக்கீம் தலைமையில், வெள்ள நிவாரணப் பணி
– ஷபீக் ஹூசைன் –
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தலைமையிலான கட்சிக் குழுவினர் – அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை வழங்கும் பணியில் இன்று வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
ஹக்கீம் தலைமையிலான குழுவினர் – களனி கங்கையின் இரு மருங்கிலும் வெள்ளப் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களுக்குச் சென்று நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கொழும்பு மாவட்ட கட்சித் தொண்டர்கள் இந்த பணியில் இணைந்திருந்தனர்.
வெல்லம்பிட்டி, கொலன்னாவ, கொடிகாவத்தை மற்றும் கொஹிலவத்தை உள்ளிட்ட இடங்களில் வெள்ளப் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களுக்கு ஹக்கீம் தலைமையிலான குழுவினர் சென்றனர்.
இதேவேளை, மல்வானை உட்பட கம்பஹா மாவட்டத்தில் மழையினாலும், வெள்ளத்தினாலும் அதிகமாக பாதிக்கப்பட்ட கிராமங்களிலும் அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு, முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீனினின் வழிகாட்டலில் கட்சியின் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் உலர் உணவுப் பொருட்களை சேகரித்து வருகின்றனர்.
வெல்லம்பிட்டி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வெள்ளம் காரணமாக மிகவும் கடுமையாக பாதிப்படைந்துள்ள பிரதேசங்களுக்கு மு.கா. தலைவர் ஹக்கீமின் பணிப்புரைக்கு அமைய, மேல் மாகாணசபை உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீன் தலைமையிலான கட்சியின் அனர்த்த நிவாரண குழுவினர் மீட்புப் பணிகளிலும், நிவாரண நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.