சிறு பிள்ளை இழைக்கும் குற்றம் தொடர்பில், தண்டனைச் சட்டக் கோவையில் மாற்றம்

🕔 May 19, 2016

Gayanda karunathilaka - 032குறைந்த வயதுடைய பிள்ளையொன்று குற்றமிழைக்கும்போது, குறித்த குற்றம் தொடர்பான புரிந்துணர்வை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அப் பிள்ளைக்கு உள்ளதா என்பதை தீர்மானிப்பதற்கு, நீதவானுக்கு தற்றுணிவை வழங்கும் வகையில், தண்டனை சட்ட கோவையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் விபரிக்கையில்;

“இலங்கையில் குற்றமொன்றின் பொறுப்பை ஏற்கும் ஆகக் குறைந்த வயதெல்லை, எட்டாக இருக்க வேண்டுமென தண்டனைச் சட்டக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், சர்வதேச ரீதியில் குற்றமொன்றின் பொறுப்பை ஏற்கும் ஆகக் குறைந்த வயது, 12 இலிருந்து 14 என மாறுபடுகிறது.

குற்றமொன்றின் பொறுப்பை ஏற்கும் ஆகக் குறைந்த வயதெல்லை மிகவும் இளமையானதென்பது, உளவியல் அறிஞர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் எண்ணமாகும்.

ஆகவே, 12 வயதிற்கும் 14 வயதிற்கும் மேற்பட்ட பிள்ளையொன்று குற்றமிழைத்தால், அக்குற்றம் தொடர்பான புரிந்துணர்வை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அப் பிள்ளைக்கு உள்ளதா என்பதை தீர்மானிப்பதற்கு, நீதவானுக்கு தற்றுணிவை வழங்கும் வகையில் தண்டனை சட்டக் கோவையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதுகுறித்து நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது” என்றார்.

Comments