அரநாயக்க அனர்த்தம்; 13 பேர் சடலமாக மீட்பு
🕔 May 18, 2016
அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு பெய்த கடும் மழை மற்றும் அந்த பகுதிக்கு போக்குவரத்து செய்வதில் இருந்த சிக்கல் காரணமாக நேற்றிரவு மீட்பு பணிகள் இடம்பெறவில்லை என்று அந்த நிலையம் கூறியுள்ளது.
இன்று புதன்கிழமை அதிகாலை 5.00 மணியில் இருந்து ராணுவம், பொலிஸார் மற்றும் மீட்பு படையினர் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் அரநாயக்க மண்சரிவில் பாதிக்கப்பட்ட 1200 பேர் வரை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்தப் பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் கூறினார்.
மண்சரிவு ஏற்பட்ட எலங்கபிட்டிய மலைப் பிரதேசத்தில் 150 வீடுகள் வரை இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் எங்கலபிட்டிய மண்சரிவினால் ஏற்பட்டுள்ள அனர்த்தம் குறித்து திட்டவட்டமான முடிவுக்கு வர முடியாதிருப்பதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறியுள்ளார்.
நேற்று செவ்வாய்கிழமை இரவு அந்தப் பகுதியில் கடும் மழை பெய்ததால் மீட்பு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டதாக அவர் கூறினார்.
இதற்கிடையில் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த நிலமைகள் குறையவில்லை என்று, இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.
இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்கள் இன்னும் அவதானமாக இருக்குமாறு அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.