வாரியபொல பிரதேசத்தில் இரண்டு கோடி ரூபா கப்பம் கோரல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒர் பொறியியல் பட்டதாரி என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இரண்டு கோடி ரூபா கப்பம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பிரதேசத்தின் வர்த்தகர் ஒருவரது 20 வயது மகனை ஒரு கும்பல் கடத்தியிருந்தது.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப் படிப்பினை பூர்த்தி செய்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
பிரமிட் திட்டமொன்றின் ஊடாக பாரிய நட்டமடைந்த நபர் அதனை ஈடு செய்ய இவ்வாறு சிலருடன் இணைந்து கப்பம் பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளார்.
2013ஆம் ஆண்டு மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இந்த நபர் பொறியியல்துறை பட்டம் பெற்றுக்கொண்டுள்ளார்.
இவருடன் வாரியபொல கல்வௌ பிரதேசத்தைச் சேர்ந்த ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்களுடன் வாரியபொல ஆங்கில தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் உள்ளடங்கலாக மேலும் மூன்று பேர் தொடர்பு பட்டிருப்பதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இவர்களை கைது செய்ய பொலிஸார் தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 13ம் திகதி முஹமட் ஆஷிக் என்ற கடத்தப்பட்ட இளைஞர் தமது தந்தைக்கு சொந்தமான கடையிலிருந்து இரவு உணவு எடுப்பதற்காக சைக்கிளில் சென்ற வேளை இனந்தெரியாத நபர்கள் கடத்திச் சென்று இரண்டு கோடி ரூபா கப்பம் கோரியிருந்தனர்.
பெற்றோருடன் இணைந்து பொலிஸார் கப்பம் வழங்குவதாகத் தெரிவித்து கடத்தல்காரர்களை மடக்கிப் பிடிக்கத் திட்டமிட்டனர்.
இதன்படி 60 லட்ச ரூபா வழங்க முடியும் என ஆஷிக்கின் தந்தை கடத்தல்காரர்களுக்கு உறுதியளித்தார். எனினும், இந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ள கடத்தல்காரர்கள் எவரும் வரவில்லை.
பின்னர் நேற்று நிக்கவரட்டிய பிரதேசத்தில் கடத்தப்பட்ட இளைஞர் விடுவிக்கப்பட்டிருந்தார்.