வாக்குறுதியளித்தபடி அரசாங்கம் செயற்பட வேண்டும்; அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வேண்டுகோள்

🕔 March 13, 2016

ADJF - Logo - 01– யூ.எல்.எம். றியாஸ் –

டகவியலாளர்களுக்கு தீர்வையற்ற விலையின் அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, தீர்வையற்ற வகையில் ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் என்று முன்னர் தெரிவித்த அரசாங்கம், தற்போது சந்தை விலையில் மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில், ஊடகவிலாளர்களுக்கு சலுகை அடிப்படையிலான வங்கிக் கடன் மட்டும் வழங்கப்படும் என்று கூறியுள்ளமை குறித்து, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை தனது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கடந்த அரசாங்கம் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் போன்றோருக்கு, தீர்வையற்ற அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை வழங்கியது. இதற்காக அவர்களிடமிருந்து 50 ஆயிரம் ரூபா மட்டும் அறவிடப்பட்டது.

இதே போன்று ஊடகவியலாளர்களுக்கும் தீர்வையற்ற அடிப்படையில் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படுமென்று அரசாங்கம் உறுதியளித்து, விண்ணப்பங்களையும் கோரியிருந்தது.

ஆனால், தற்போது ஊடகவியலாளர்கள் மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக் கொள்வதற்காக, சலுகை அடிப்படையில் வங்கிக் கடன்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைவாக, தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு கடிதங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அக்கடிதத்தில் ஊடகவியலாளர் ஒருவர் மோட்டார் சைக்கிள் ஒன்றினைக் கொள்வனவு செய்வதற்காக, அரச வங்கிகளில் 02 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை சலுகை அடிப்படையில் கடனைப் பெறுவதற்கான ஏற்பாட்டை அரசாங்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் மோட்டார் சைக்கிள் கொள்வனவுக்காக வங்கிகளில் பெற்றுக் கொள்ளும் கடனுக்கு 09 வீத வட்டியை செலுத்த வேண்டும். இதில் 07 வீதத்தை அரசாங்கமும், 02 வீதத்தை கடன் பெற்றுக் கொள்கின்ற ஊடகவியலாளரும் செலுத்த வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந் நடவடிக்கையானது, ஊடகவியலாளர்களை கடனாளியாக்கும் ஒரு செயற்பாடாகும். அத்தோடு இந்த தீர்மானமானது ஊடகவியலாளர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

எனவே, அரசாங்கம் வாக்குறுதி அளித்தவாறு ஊடகவியலாளர்களுக்கு தீர்வையற்ற விலையின் அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்