சட்டத்தரணிகளுக்கும் கட்சிக்காரர்களுக்கும் இடையிலான உறவு எவ்வாறு அமைய வேண்டும்?: நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி விளக்கம்

🕔 March 29, 2023

– பாறுக் ஷிஹான் –

ட்டத்தரணிக்கும் அவரின் கட்சிக்காரருக்கும் தகுந்த இடைவெளியை பேணுவதன் ஊடாக, உரிய மரியாதையை சட்டத்தரணிகள் பெற்றுக்கொள்ள முடியும் என்று கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி தெரிவித்தார்.

இந்த இடைவெளியை தொடர்ச்சியாக பராமரிப்பதன் ஊடாக – நிலையான ஒரு உறவினை கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் கூறினார்.

கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற கட்டிடத்தில், சட்டத்தரணிகளின் பாவனைக்காக புதிய சட்ட நூலகம் இன்று (29) திறக்கப்பட்ட நிகழ்வில் – பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டார்.

கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ. றைசுல் ஹாதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கௌரவ அதிதிகளாக கல்முனை மாவட்ட நீதிபதி ஏ.எம் முஹம்மட் றியால், கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் பிரதம அதிதி கல்முனை நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி தொடர்ந்து உரையாற்றுகையில்;

“கல்முனை நீதிமன்ற வளாகம் என்பது ஆளுமைகளின் ஓர் ஊற்றாக அமைந்துள்ளது. பலரின் எதிர்பார்ப்புடன், நீண்ட காலத்தின் பின்னர் இன்று இவ்விடயம் இடம்பெற்றதனை நான் வெற்றி களிப்பாக கருதுகின்றேன்.

கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம்.ஐ. றைசுல் ஹாதி தலைமையில் இந்நிகழ்வு நடைபெறுவது இரட்டிப்பான மகிழ்ச்சியை தருகின்றது. பறக்க முடியாதவர்கள் ஓட வேண்டும், ஓட முடியாதவர்கள் நடக்க வேண்டும். நடக்க முடியாதவர்கள் தவழ வேண்டும். தவழ முடியாதவர்கள் உருண்டு கொண்டு இருக்க வேண்டும். ஏனெனில் நாம் எந்த நேரமும் இயங்கிக்கொண்டிருக்க வேண்டும் என்பது பொதுவான கருத்து.

நமக்கு இருக்க கூடிய தகைமை, திறமை அடிப்படையில் இயங்கி கொண்டே இருக்க வேண்டும்.

‘கற்பவனாக இரு அல்லது கற்று கொடுப்பவனாக இரு’ என்று சொல்வார்கள். குறைந்தது கற்பவனுக்கு உதவி செய்த ஆளாகவாவது இருஈ சோம்பேறியாக இருந்து விடாதே என்பார்கள். கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதியை பாரக்கின்ற போது இவ்வாறான விடயங்கள் எனக்கு ஞாபகத்துக்கு வருகின்றன.

அடுத்து வருகின்ற தலைமுறையான இளம் சட்டத்தரணிகளுக்கு இந்நூலகம் உந்து சக்தியை வழங்கும். நீதி வரம்புக்குள் நின்று, இளம் சட்டத்தரணிகள் தங்களின் சேவைகளை செய்ய வேண்டும். இல்லாவிடின் குறித்த சட்டத்தரணியை அவருடைய கட்சிக்காரரே விமர்சிக்கின்ற சூழ்நிலை ஏற்படும்.

எனவேதான் சட்டத்தரணிக்கும் அவரின் கட்சிக்காரருக்கும் தகுந்த இடைவெளியை பேணுவதன் ஊடாக, உரிய மரியாதையை சட்டத்தரணிகள் பெற்றுக்கொள்ள முடியும். இந்த இடைவெளியை தொடர்ச்சியாக பராமரிப்பதன் ஊடாக – நிலையான ஒரு உறவினை கட்டியெழுப்ப முடியும்” என்றார்.

நிகழ்வின் இறுதியில், சிரேஸ்ட சட்டத்தரணிகள் பலரின் பங்களிப்பில் கிடைக்கப்பெற்ற பெறுமதியான சட்டப்புத்தகங்கள், புதிய சட்ட நூலகத்துக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்