அட்டாளைச்சேனையில் மீன் வியாபாரத்துக்கான கட்டடத்தை திறந்து கொடுக்காமல், தவிசாளர் இழுத்தடிப்புச் செய்வதாக புகார்

🕔 February 15, 2023
திறக்கப்படாமலுள்ள கட்டடம்

– அஹமட் –

ட்டாளைச்சேனை சந்தைப் பகுதியில் மீன்களை விற்பனை செய்வதற்கென கட்டடமொன்று புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதனைத் திறந்து மீன் வியாபாரிகளுக்கு வழங்காமல், பிரதேச சபை – இழுத்தடிப்புச் செய்து வருவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக மீன் வியாபாரிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும், பொதுமக்கள் மிக மோசமான சுகாதார அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

அட்டாளைச்சேனை சந்தைப் பகுதியின் பிரதான வீதியோரத்தில் வியாபாரிகள் கொட்டில்களை அமைத்தும், வாகனங்களை நிறுத்தியும் – மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வியாபாரிகளிடம் பிரதேச சபையினர் நாளாந்தம் பணம் வசூலித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சந்தைப் பகுதியில் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் – முன்னர் நூலகமாக இயங்கி வந்த கட்டடத்தை, பல லட்சம் ரூபா செலவு செய்து, மீன் சந்தையாக மாற்றும் நடவடிக்கையினை பிரதேச சபை மேற்கொண்டுள்ளது.

ஆயினும் குறித்த கட்டடத்தை திறந்து – மீன் வியாபாரிகளுக்கு வழங்காமல், பிரதேச சபையினர் இழுத்தடிப்புச் செய்து வருவதாக வியாபாரிகளும் பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர்.

குறித்த கட்டடத்தை திறந்து தருமாறு பிரதேச சபைத் தவிசாளரிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்திருந்தும், அது தொடர்பில் அவர் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.

எனவே, இன்னும் காலம் தாழ்த்தாமல் குறித்த கட்டடத்தை உடனடியாகத் திறந்து – மீன் வியாபாரத்துக்கு வழங்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது விடயத்தில் இன்னும் தாமதித்தால், பிரதேச சபையின் முன்பாக தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தயாராக இருப்பதாகவும் மீன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

திறக்கப்படாத கட்டடத்தின் முன்பாக நடக்கும் மீன் வியாபாரம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்