இந்தியாவிலுள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை: குஜராத் கலவரம் தொடர்பில் ஆவணப்படம் வெளியிடப்பட்டமைக்கு பழிவாங்கலா?

இந்தியாவின் புது டெல்லி மற்றும் மும்பையிலுள்ள பிபிசிஅலுவலகங்களில் இன்று (14) வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
வருமானத் வரி துறையின் 60 – 70 பேரைக் கொண்ட குழு பிபிசி அலுவலகங்களில் சோதனைகளை மேற்கொண்டதாகவும், இதன்போது ஊழியர்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் தெரியவருகிறது.
பிபிசி அலுவலகங்கள் வருமான வரித் துறையால் சோதனை செய்யப்பட்டதை அடுத்து, காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
பிபிசி அலுவலகத்தில் நடந்த இந்த சோதனைகளை ‘அறிவிக்கப்படாத அவசரகால நிலை’ என, காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவும் நரேந்திர மோடி அரசாங்கத்தை கிண்டல் செய்து, ‘ஆஹா, உண்மையாகவா? எவ்வளவு எதிர்பாராதது’ என குறிப்பிட்டுள்ளார்.
குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரம் தொடர்பில் சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் வெளியான நிலையில், டெல்லியிலுள்ள பிபிசி அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம், சர்ச்சைக்குரிய ஆவணப்படம் வெளியான யூடியூப் வீடியோக்கள் மற்றும் ட்விட்டர் இடுகைகளைத் தடுப்பதற்கான வழிமுறைகளை அரசாங்கம் வெளியிட்டது.