மக்கள் வரிசையில் நிற்பதற்கு அரசாங்கத்தின் இனவாத கொள்கைகளே காரணம்: மக்கள் பேரணியில் சஜித் பிரேமதாஸ

🕔 March 15, 2022

ராஜபக்ஷ அரசாங்கம் ராஜினாமா செய்து நாட்டின் ஆட்சியை ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

அரசாங்கம் பதவி விலக வேண்டும் அல்லது மீண்டும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம், அதன் பதவிக்காலத்தில் மறைக்கப்பட்ட ஒப்பந்தங்களையோ, துரோகத்தையோ மேற்கொள்ளாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசத்தின் முன்னேற்றத்துக்காக நாட்டின் குடிமக்களுடன் ஒன்றிணைவது மட்டுமே கட்சி செய்யும் ஒரே ஒப்பந்தம் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் தலைவர் கூறினார்.

ராஜபக்ஷ அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் இலங்கை தற்போது பாரிய நெருக்கடியில் சிக்கியுள்ளதாக சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார்.

பல்வேறு அரசியல் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக பலர் தம்மை அணுகியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார்.

தற்போது மக்கள் வரிசையில் நிற்பதற்கு தற்போதைய அரசாங்கத்தின் இனவாத கொள்கைகளே காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொத்து மற்றும் கருத்தடை தொடர்பில் இட்டுக்கட்டப்பட்ட கதைகளும் பொய்களும் மக்களை அவதிக்குள்ளாக்கியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற பேரங்கள் அல்லது மோசடி மற்றும் ஊழலை ஒருபோதும் செய்யாது எனவும் அவர் உறுதியளித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் உருவாக்கப்படும் அரசாங்கத்துக்கு மாத்திரமே சலுகைக் கட்டணத்தின் கீழ் எரிபொருளை வழங்குவதற்கு மூன்று மத்திய கிழக்கு நாடுகள் உறுதியளித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

நாட்டு மக்கள் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தயாராக வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்