பெண்களுக்கான 25 வீதம்: இலக்கை எட்டியுள்ளதா?

🕔 November 26, 2021

– யூ.எல். மப்றூக் –

லங்கையின் சனத்தொகையில் சுமார் 52 வீதமானோர் பெண்கள். ஆனாலும், அந்த எண்ணிக்கைக்கேற்ப முக்கியமான துறைகளில் அவர்களுக்கான இடம் வழங்கப்படாத நிலையே காணப்படுகின்றது. குறிப்பாக, அரசியலில் அவர்கள் மிகவும் பின்தங்கியவர்களாகவே உள்ளனர். நாடாளுமன்றம் தொடக்கம் உள்ளுராட்சி சபைகள் வரை பெண்களின் பிரதிநிதித்துவங்கள் மிகவும் அடி மட்டத்திலேயே உள்ளன. இந்த நிலைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

மறுபுறமாக, திருத்தப்பட்ட உள்ளுராட்சிமன்ற தேர்தல் சட்டத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான பயன் அடையப்பட்டுள்ளதா என்கிற கேள்விகளும் பரவலாக உள்ளன.

உள்ளுராட்சி சபைகளிலுள்ள பெண்களின் செயற்பாடுகள் – எதிர்பார்க்கப்பட்ட அடைவை எட்டியுள்ளனவா என்பதையும், உள்ளுராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டமைக்கு அமைய, அரசியல் மற்றும் அபிவிருத்தி தொடர்பாக தீர்மானம் எடுப்பதில் அவர்களின் வகிபாகம் அமைந்துள்ளனவா என்பது தொடர்பிலும் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

நவீன ஜனநாயக ஆட்சித்துவத்தின் படி, பெண்கள் – சமமானதும் நிலையானதுமான அரசியல் பங்குபற்றலை அடைவதற்கு, அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்தல் ஒரு முக்கியமான வழிமுறையாகக் கவனத்திற் கொள்ளப்படுகிறது என்கிறார் தென்கிழக்குப் பல்லைக்கழகத்தின் அரசறிவியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம். பௌசர்.

அபிவிருத்தியடைந்த பல நாடுகளுக்கு முன்னராகவே இலங்கைப் பெண்கள் அரசியலில் சில வரப்பிரசாதங்களைப் பெற்றிருந்தனர். இலங்கையில் 1931ஆம் ஆண்டு ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக வாக்குரிமை வழங்கப்பட்டது. உலகளவில் முதலாவதாக பெண்ணொருவர் பிரதமராகத் தெரிவானதும், முதலில் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பெண்ணொருவர் தெரிவானதும் இலங்கைக்குரிய பெருமைகளாகும்.

ஆனாலும், இலங்கையில் பெண்கள் அரசியலில் பங்குபற்றுதல், அரசியல் பிரவேசம் மற்றும் அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் போன்றவை மிகவும் குறைந்தளவிலேயே காணப்படுகின்றன.

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள நாடுகளின் தர வரிசையில், இலங்கை 181ஆவது நிலையில் உள்ளமை இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியம் (Inter -Parliamentary Union)  2021ஆம் ஆண்டு 193 நாடுகளை உள்ளடக்கி வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

நமது நாட்டின் சனத்தொகையில் 52 வீதமானோர் பெண்களாக உள்ள நிலையில், 225 உறுப்பினர்களைக் கொண்ட நம் நாடாளுமன்றில் தற்போது 12 பெண் உறுப்பினர்கள் மட்டுமே (5.3 சதவீதம்) உள்ளனர்.

இலங்கை அரசியலமைப்பில் ஆண்களுக்கு நிகரான சம அந்தஷ்த்து பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை கைச்சாத்திட்டுள்ள – பெண்களுக்கு எதிரான அனைத்து பாரபட்சங்ளையும் அகற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தத்தின் மூலம், பெண்களின் சமமான அரசியல் பங்கேற்பு மற்றும் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும், இலங்கைப் பெண்களின் எண்ணிக்கைக்கேற்ப அரசியலில் இடமும் அந்தஷ்த்தும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதே தரவுகள் அடிப்படையிலான உண்மையாகும்.

‘பிரித்தானியரின் காலணித்துவவத்தின் கீழ் இருந்த நாடுகளில் முதலில் (1931ஆம் ஆண்டு) சர்வஜன வாக்குரிமையைப் பெற்றுக் கொண்ட இலங்கைப் பெண்களின் தேசிய மட்ட அரசியல் பிரதிநிதித்துவம் எந்தவொரு தேர்தலிலும் 06 வீதத்தைத் தாண்டியிருக்கவில்லை. உள்ளுராட்சி  நிறுவன மட்டங்களில் இந்த வீதாசாரம் 02 வீதத்தை எட்டியிருக்கவில்லை’ என்கிறார் பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் கமலா லியனகே (கமலா லியனகே, 2012, பக்கம் 09).

மாகாண சபைகளில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 2.8 சதவீதத்தினை இதுவரையும் தாண்டியதில்லை.

இவ்வாறு மிகவும் அடி மட்டத்திலிருந்த பெண்களின் அரசியல் பிரவேசத்தையும் பிரதிநிதித்துவங்களையும் மேம்படுத்துவதற்கு எந்தவொரு முயற்சியும் 2017ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு முன்னர் வரை, இலங்கையின் எந்தவொரு தேர்தல் சட்டத்திலும் மேற்கொள்ளப்படவில்லை.

2012ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க உள்ளுர் அதிகார சபைகள் தேர்தல் திருத்தச் சட்டத்தில் இனங்காணப்பட்ட வழுக்களைத் திருத்துவதற்காக, 24 ஒகஸ்ட் 2017ஆம் ஆண்டு அப்போதைய உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் 2017ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, மறுநாள் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 2017ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வெளியிடப்பட்டது.

மேற்படி தேர்தல் திருத்தச் சட்டத்தின் 07ஆவது சரத்தின்படி முதன்மைச் சட்டவாக்கத்தின் 27ஊ எனும் பிரிவை 27ஊ (1) என மாற்றீடு செய்தமையின் மூலம்,  ஒவ்வொரு உள்ளுராட்சி சபையிலும் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 25 சதவீதத்துக்கு குறையாதோர் பெண்களாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

உள்ளுராட்சி சபை உறுப்பினர் தெரிவில் 60 சதவீதமானோர் வட்டார முறை அடிப்படையிலும், 40 சதவீதமானோர் விகிதாசார அடிப்படையிலும் இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர்.

இந்த கலப்புத் தேர்தல் முறைமைக்கிணங்க, 2018ஆம் ஆண்டு 340 உள்ளுராட்சி சபைகளுக்கும், 2019ஆம் ஆண்டு எல்பிட்டி பிரதேச சபைக்குமென 341 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டன. அவற்றில் 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 276 பிரதேச சபைகள் உள்ளடங்கியிருந்தன. குறித்த தேர்தல்களில் நாடு முழுவதும் 56066 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் சுமார் 17,000 பேர் பெண்களாவார். இதன்படி இலங்கையின் உள்ளுராட்சிமன்ற தேர்தல் வரலாற்றில் அதிக பெண் வேட்பாளர்கள் போட்டியிட்ட தேர்தல் இதுவாகும்.

இந்தத் தேர்தல்களில் 8690 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களில் 1919 பேர் பெண் உறுப்பினர்களாவர். இவர்களில் 535 பெண்கள் தேர்தலில் நேரடியாகப் போட்டியிட்டு வட்டார முறைமையின் அடிப்படையிலும், 1384 பெண்கள் விகிதாசார முறைமையில் ‘போனஸ்’ அடிப்படையிலும் தெரிவாகினர். (புள்ளடியின் பலம் சஞ்சிகை – பக்கம் 02)

அதற்கு முன்னர் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தெரிவான 4486 உறுப்பினர்களில், 82 பேர் மட்டுமே பெண் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை, அடி மட்டத்திலிருந்து அதிகரிக்கும் வகையில், உள்ளுராட்சி மன்றங்களில் அவர்களுக்கான இட ஒதுக்கீடு 25 சதவீதமாக அதிகரிக்கப்பட்ட போதும் கூட, அதன் பலன் அடையப்பட்டுள்ளதா, அல்லது இலக்கு எட்டப்பட்டுள்ளதா என்கிற கேள்வி முக்கியமானதாகும்.

பெண் உறுப்பினர்கள் என்ன சொல்கிறார்கள்?

இதற்கான விடையினைத் தெரிந்து கொள்ளும் முயற்சிகளில் ஒரு நடவடிக்கையாக, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பெண் உறுப்பினர்களினுடைய அரசியல் செயற்திறன்கள் குறித்து ஆராய்ந்த போது, அவை மிகவும் குறைந்த மட்டத்தில் இருந்தமை தெரியவந்தது.

18 உறுப்பினர்களைக் கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நால்வர் பெண் உறுப்பினர்கள். இவர்கள் விகிதாசார முறையின் கீழ் ‘போனஸ்’ உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களாவர்.

2019ஆம் ஆண்டு அட்டாளைச்சேனை பிரதேச சபையில் 13 கூட்ட அமர்வுகள் நடைபெற்றுள்ள போதிலும், அவற்றில் ஜனவரி தொடக்கம் ஜுலை வரை நடைபெற்ற 08 கூட்டங்களில் எந்தவொரு பெண் உறுப்பினரும் உரையாற்றவில்லை. அந்த வருடத்தில் 04 கூட்டங்களில் மட்டுமே பெண் உறுப்பினர்கள் உரையாற்றியிருந்தனர். (தகவல் மூலம்: மாதாந்த சபை அமர்வுக் கூட்டக் குறிப்பு)

அதேபோன்று 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அச்சபையின் 14 கூட்டங்களில், ஒன்றில் மட்டும் பெண் உறுப்பினர் ஒருவர் உரையாற்றியுள்ளார்.  

இவ்விடயம் குறித்து அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பெண் உறுப்பினர்களுடன் கலந்துரையாடியபோதுளூ தம்மைத் தேடிவந்து மக்கள் தமது பிரச்சினைகளைத் தெரியப்படுத்தும் போது மட்டுமே, அவை குறித்து தாம் சபை அமர்வுகளில் உரையாற்றுவதாகக் கூறினர்.  

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தேசிய காங்கிரஸ் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜெமீலா ஹமீட்; “அரசியலுக்குள் தான் விரும்பி வரவில்லை” என்கிறார். இவரின் கணவர் மற்றும் கணவரின் மாமா தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களாக இருந்தமை காரணமாக, 2018ஆம் ஆண்டு நடைபெற்ற அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில், வட்டார வேட்பாளராக ஜெமீலா களமிறக்கப்பட்டார். ஆயினும் அவரால் வெற்றிபெற முடியவில்லை. பின்னர் விகிதாசார பட்டியல் வழியாக ‘போனஸ்’ உறுப்பினராக ஜெமீலாக நியமிக்கப்பட்டார்.

ஜெமீலா

மற்றொரு உறுப்பினரான எஸ்.எப். யாஸ்மின் கூறுகையில், தனது அரசியல் பிரவேசமும் தான் விரும்பி நிகழ்ந்ததல்ல என்றார்.

இதேவேளை, தமது அரசியல் செயல்பாடுகளின் போது ஆண்களின் இடையூறுகளைச் சந்தித்ததாகவும், தாங்கள் கருத்துக்களை முன்வைக்கும் போது, சக ஆண் உறுப்பினர்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளத் தயங்குபவர்களாக இருக்கின்றனர் எனவும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மேற்படி பெண் உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றனர். “பெண்களுக்கு அரசியல் தேவையில்லை” என்கிற விமர்சனங்களை தாம் அதிகம் எதிர்கொண்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

யாஸ்மின்

மேலும் தமது கணவர்மாரின் விருப்பங்களுக்கு மாறாக, அரசியலில் தங்களால் தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பெண் உறுப்பினர்களான ஜெமீலா, யாஸ்மின் மற்றும் றிஸ்பா ஆகியோர் கூறுகின்றனர்.

மறுபுறமாக, இவர்கள் சில பிரேரணைகளை சபையில் சமர்ப்பித்துள்ளதோடு, மக்களுக்கான வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியுள்ளார்கள் என்பதையும் இங்கு குறிப்பிடுதல் வேண்டும்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தமிழ் மற்றும் சிங்கள மொழி பேசும் உறுப்பினர்கள் உள்ளமையினால், சபை அமர்வுகளின் போது அவர்கள் பேசுகின்றமையினை மொழிபெயர்ப்புச் செய்ய வேண்டும் என, உறுப்பினர் ஜெமீலா 2018ஆம் ஆண்டு ஜுலை 19ஆம் திகதி சபையில் சமர்ப்பித்த பிரேரணை குறிப்பிடத்தக்கது. அதேபோன்று அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவில் மீனவர்களுக்கான வீதியொன்றை நிர்மாணிக்க வேண்டுமென 18 ஜுன் 2020ஆம் ஆண்டு உறுப்பினர் ஜெமீலா – மற்றொரு பிரேரணையினையும் முன்வைத்திருந்தார். குறித்த பிரேரணைகள் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.

றிஸ்பா

அதேபோன்று தமது வட்டாரங்களில் தெரு மின்விளக்கு பொருத்துவதற்கும் உறுப்பினர்கள் ஜமீலா, யாஸ்மின் மற்றும் ஆர். றிஸ்பா ஆகியோர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

தேர்தலில் வெற்றிபெற்றவர்களின் கதை

தர்ஷினி

இந்தக் கட்டுரைக்கான ஆய்வின் போது, உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்களில் – விகிதாசார பட்டியலில் (போனஸ் மூலம்) தெரிவு செய்யப்பட்டவர்களை விடவும், தேர்தலில் வெற்றிபெற்று தெரிவானவர்களின் அரசியல் செயற்திறன்களும், தீர்மானங்களில் பங்கெடுப்பதிலுள்ள வகிபாகமும் அதிகமாக உள்ளமை அவதானிக்கப்பட்டது.

நாவிதன்வெளி பிரதேச சபைக்கு தேர்தலில் வெற்றிபெற்று தெரிவான, இலங்கை தமிழரசுக் கட்சியின் பெண் உறுப்பினர் தர்ஷினி, அந்த சபையின் அநேகமான அமர்வுகளில் கலந்து கொண்டு பேசியிருக்கின்றார்.

இவர் – சபை அமர்வுகளில் இடம்பெறும் விவாதங்களில் பங்கேற்றும், சபைத் தலைவரின் செயற்பாடுகளை கேள்விக்குட்படுத்தியுமுள்ளார்.

2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்துக்குப் பின்னர், அரச சார்பற்ற அமைப்பொன்றின் அம்பாறை மாவட்டத்துக்கான இணைப்பாளராகப் பணியாற்றியதாகக் கூறும் தர்ஷினி, அந்தக் காலகட்டத்திலேயே தான் மேடைகளில் ஏறி பேசத் தொடங்கி விட்டதாகக் கூறுகின்றார். அதேபோன்ற வேறு சில சமூக சேவை நிறுவனங்களிலும் தான் பணியாற்றியதாகவும், அந்த அனுபவங்களே தனக்கு சபைக் கூச்சங்களில் இருந்து விடுபடுவதற்கு உதவியதாகவும் சுட்டிக்காட்டுகின்றார். 

“உள்ளுராட்சி மன்றங்களுக்கு போனஸ் உறுப்பினர்களாக பெண்கள் வருவதை விடவும், தேர்தலில் வெற்றிபெற்று வரவேண்டும்” என தர்ஷினி வலியுறுத்துகின்றார்.

நாவிதன்வெளி பிரதேச சபையில் தர்ஷினி சமர்ப்பிப்பதற்ககு முயற்சித்த சில பிரேரணைகளை அச்சபையின் தவிசாளர் ஏற்றுக் கொள்ள மறுத்தமையினை அடுத்து, அவ்விடயங்களை அண்மையில் ஊடகங்கள் வழியாக தர்ஷினி தெரியப்படுத்தியிருந்ததோடு, தவிசாளரின் முடிவுகளை சவாலுக்குட்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தனது நிதியிலிருந்தும் தமது கட்சி சார்பான நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதிகளிலிருந்தும் தன்னுடைய வட்டார மக்களுக்கும், அங்குள்ள பொது நிறுவனங்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்துள்ளதாகவும் தர்ஷினி தெரிவிக்கின்றார்.

தர்ஷினி

2018ஆம் ஆண்டு நடைபெற்ற நாவிதன்வெளி பிரதேச சபைக்கான தேர்தலில், தர்ஷினியின் வட்டாரத்தில் போட்டியிட்ட 10 வேட்பாளர்களில் தர்ஷினி மட்டுமே வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது. அந்தத் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்களில் அதிகமானோர் ஆண்களாவர்.

தனது அரசியல் செயற்பாடுகளுக்கு தன்னுடைய கணவர் மற்றும் மாமனார் (கணவரின் தந்தை) ஆகியோரிடமிருந்து முழுமையான ஒத்துழைப்புக் கிடைப்பதாக கூறும் தர்ஷினி,; “ஏனைய ஆண்களிடமிருந்து பெரும்பாலும் ஆரவு கிடைப்பதில்லை” என்கிறார்.   

றிஹானா

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்று உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பெண்களில் மற்றொருவர் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ. பாத்திமா றிஹானா. 

13 உறுப்பினர்களைக் கொண்ட நிந்தவூர் பிரதேச சபையில் – பெண் உறுப்பினர்கள் மூவர். இவர்களில் றிஹானா மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்று தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் போட்டியிட தான் தீர்மானித்த போது அதனை தனது குடும்பத்தவர்கள் விரும்பவில்லை என்கிறார் றிஹானா. எதிர்க்கட்சிக்காரர்களின் விமர்சனங்களுக்கும் வசைகளுக்கும் பயந்தே அவர்கள் அதனை விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

ஆயினும் தனது கணவர் வழங்கிய முழுமையான ஒத்துழைப்பு காரணமாக தேர்தலில் வெற்றிகரமாகக் களமிறங்க முடிந்ததாகவும் றிஹானா தெரிவித்தார்.

“அரசியலுக்குள் நான் பிரவேசித்த போது – மத ரீதியான தடைகள் எவற்றையும் நான் எதிர்கொள்ளவில்லை. பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை இஸ்லாம் தடை செய்யவில்லை என்கிற தெளிவு எனக்கு இருக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிந்தவூர் பிரதேச சபையில் செயற்திறனுடன் இயங்குகின்ற உறுப்பினர்களில் றிஹானாவும் ஒருவர். கிட்டத்தட்ட அந்த சபையின் அனைத்து கூட்டங்களிலும் அவர் பேசி, வாதிட்டுள்ளார்.

கொரோனாவால் மரணித்த முஸ்லிம்களின் உடல்களை எரிக்கும் நடைமுறை அமுலில் இருந்தபோது, அதற்கு எதிராக – நிந்தவூர் பிரதேச சபையில் கடந்த வருடம் மே மாதம் 21ஆம் திகதியன்று முக்கியமானதொரு பிரேரணையை றிஹானா சமர்ப்பித்தார்.

கொரோனாவால் மரணிப்பவர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி – அரசு வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை நீக்க வேண்டும் என்றும், கொரோனாவினால் மரணித்த முஸ்லிம்களின் உடல்களை எரிக்காமல் அடக்கம் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கொண்டு வந்த பிரேரணையில் குறிப்பிட்டிருந்தார்.

றிஹானா

மேலும், பிரதேச சபை தவிசாளரின் செயற்பாடுகள் தொடர்பில் – சபை அமர்வுகளின் போது விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் றிஹானா வெளியிட்டுள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் பல்வேறு அரச சார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றியுள்ள றிஹானா, சமூகவியலில் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெண்களின் அரசியல் பிரவேசமும் எதிர்கொள்ளும் சவால்களும்

கலாசார இறுக்கங்களும், ஆணாதிக்கமும் நிறைந்த சமூகங்களில் வாழ்கின்ற இலங்கைப் பெண்கள் – அரசியலில் பிரவேசிக்கின்றபோது, பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டு வருகின்றமை குறித்து பரவலாக அறிய முடிகிறது.

2018ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் (28 ஜனவரி 2018 அன்று) தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் நடத்திய ஊடக சந்திப்பொன்றில்; “பெண் வேட்பாளர்களைத் தோற்கடிப்பதற்கு சிலர் திட்டமிட்ட வகையில் செயற்பட்டு வருகின்றனர்” என, அந்த நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்திருந்தமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

சமூக வலைத்தளத்தில் மௌலவி ஒருவர் பேசி வெளியிட்ட இரண்டு வீடியோக்கள் தொடர்பிலும் அந்த ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

“குறித்த மௌலவி வெளியிட்ட அந்த வீடியோகளில், பெண்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும், அவ்வாறு வாக்களிப்பது மனிதர்கள் செய்யும் பாவம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது” எனவும் மஞ்சுள கஜநாயக்க அந்த ஊடக சந்திப்பில் கூறியிருந்தார்.

இலங்கையில் ஏனைய சமூகத்தவர்களை விடவும் முஸ்லிம் பெண்கள் மிகவும் இறுக்கமான சமூகக் கட்டமைப்புக்குள் வாழ்ந்து வருகின்றமையினால், அவர்கள் அரசியலுக்குள் பிரவேசிக்கும் போது, அதிகளவான எதிர்ப்புகளையும் இடைஞ்சல்களையும் எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சிரேஷ்ட விரிவுரையாளர் பௌசருடன் நாம் உரையாடியபோது; “முஸ்லிம் சமூகத்தில் கற்பனையாக சில விடயங்களை நம்பிக் கொண்டிருக்கின்றனர், அவற்றில் பெண் தலைமைத்துவம் கூடாது என்பதுவும் ஒன்றாகும்” என்றார்.

ஒரு பெண் அரசியலில் நிலைப்பதற்கு சமூக ஆதரவு அவசியமாகும் என்று குறிப்பிடும் சிரேஷ்ட விரிவுரையாளர் பௌசர்; “மூன்றாம் உலக நாடுகளிலுள்ளோர் இறுக்கமான கலாசாரங்களைக் கொண்டுள்ளமையினால், அங்கு அரசியலில் பெண்கள் ஈடுபடுவதற்கு குறைந்தளவான ஆதரவே கிடைக்கின்றது” எனவும் தெரிவித்தார்.

சிரேஷ்ட விரிவுரையாளர் பௌசர்

இது குறித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சியின் தவிசாளரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சிறாஜ் மசூர் கூறுகையில்; “மதத்தைத் காரணம் காட்டி பெண்களின் அரசியல் பிரவேசத்துக்கு ஏற்படுத்தப்பட்டு வந்த தடைகள் உடைக்கப்பட்டு, சிந்தனை ரீதியான மாற்றங்கள் இஸ்லாமிய சமூகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள போதிலும், பெண்கள் அரசியலில் ஈடுபடுவதில் பல தடைகள் நடைமுறையில் உள்ளன” என்கிறார்.

“அரசியலில் பெண்ணொருவர் வேட்பாளராகக் களமிறங்கும் போது பல்வேறு வகையான வன்முறைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. ஆபாசமான பேச்சுக்கள், நேரடித் தாக்குதல்கள் என அவை வேறுபடலாம். இவற்றினை எதிர்கொள்வதென்பது பெண்களுக்கு பெரும் சவாலாகும். இவ்வாறான வன்முறைகளை எதிர்கொள்ளும் பெண்ணின் கண்ணியம் பாதிக்கப்படும் என்கிற பயம் அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு உள்ளது. அதனால், கணவர் மற்றும் ஆண் சகோதரர்களின் ஆதரவுள்ள – திருமணம் முடித்த பெண்கள்தான் அரசியலில் அநேகமாக ஈடுபடுகின்றனர்” என்றும் அவர் கூறினார்.    

அரசியலில் பெண்கள் ஈடுபடத் தயக்கம் காட்டுகின்றமை, அனைத்து சமூகங்களுக்குள்ளும் இருக்கும் பிரச்சினையாகும் என்றும் சிறாஜ் குறிப்பிடுகின்றார்.

இலக்கு அடையப்படவில்லை

இவ்வாறான சூழ்நிலையில், உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் 25 வீதத்துக்குக் குறையாத இடவொதுக்கீடு வழங்கப்பட்டுள்ள போதிலும், அதன் இலக்கு இன்னும் அடையப்படவில்லை என்று, நாம் மேலே சந்தித்த அனைத்து உள்ளுராட்சிமன்ற பெண் உறுப்பினர்களும் கூறுகின்றனர்.

இதனை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம். பௌசரும் ஏற்றுக்கொள்கிறார். 

தேர்தல் சட்டங்களில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளபோதும், ஆணாதிக்கம் நிறைந்த நமது சமூகத்தில் பெண்களுக்கான அரசியல் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன அல்லது இல்லாமல் செய்யப்படுகின்றன என்பதை கூறுகின்றனர்.

இருந்தபோதிலும் உள்ளுராட்சி மட்டங்களில் பெண்களை அரசியலுக்குள் உள்வாங்கி, அவர்களை தேசிய அரசியலுக்குத் தயார்படுத்தக் கூடியதொரு வாய்ப்பை, தற்போதைய உள்ளுராட்சி மன்ற தேர்தல் சீர்திருத்தச் சட்டம் ஓரளவுக்காயினும் உருவாக்கியுள்ளது என்பதையும் மறுக்க முடியாது.

ஆயினும், திருத்தப்பட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்டத்தின் மூலம் 25 வீதமான பெண் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டுள்ள போதும், அந்தத் தேர்தல் சட்டத் திருத்தத்தின் இலக்கு எட்டப்படவில்லை என்பதை, நாம் பெற்றுக் கொண்ட தரவுகள் மற்றும் நாம் உரையாடிவர்கள் வழங்கிய தகவல்களின் ஊடாக உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது.

இம்முறை 25 சதவீதமான பெண் பிரதிநிதிகள் உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போதிலும், வட்டாரத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளன.

“உண்மையில் தேர்தல் மூலம் பெண்கள் அதிகளவில் தெரிவு செய்யப்படும் போதுதான் – பெண்கள் விழப்புணர்வூட்டப்பட்டுள்ளார்கள், பெண்களின் அரசியல் ஈடுபாடு அதிகரித்துள்ளது என்கிற முடிவுக்கு நாம் வர முடியும்” என சிரேஷ்ட விரிவுரையாளர் பௌசர் குறிப்பிட்டார்.

தேர்தலில் வெற்றிபெற்று உறுப்பினர்களாகத் தெரிவாகும் பெண்கள் – தேர்தல் மேடைகளிலும், பிரசார நடவடிக்கைகளிலும் பகிரங்கமாக ஈடுபட்டவர்கள் என்பதால், அவர்கள் உள்ளுராட்சி சபைக் கூட்ட அமர்வுகளில் தயக்கமின்றி பேசுகின்றனர், மக்களின் பிரச்சினைகளை தைரியமாக எடுத்துச் சொல்கின்றனர் என்பதை இந்த ஆய்வின் வழியாக தெரிந்து கொள்ள முடிந்தது.

உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்டத்தின் மூலம் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ள போதிலும், பெண் பிரதிநிதித்துவ அதிகரிப்பின் மூலம் எதிர்பார்க்கப்படும் இலக்கு வெற்றிகரமாக அடையப்படவில்லை.

சிராஜ் மசூர்

நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியின் தவிசாளர் சிறாஜ் கூறுகையில்; குறித்த இலக்கை அடைவதற்கான இடம் பெண்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டதோடு, இலக்கை அடைவதற்கான சிறியளவான முயற்சிகள் நடைபெற்று வருகின்றமையை அவதானிக்க முடிவதாகவும் தெரிவித்தார்.

என்ன செய்ய வேண்டும்?

எது எவ்வாறாயினும் உள்ளுராட்சி மன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 சதவீதமாக இருக்க வேண்டுமென உறுதிசெய்யப்பட்டுள்ளமையானது கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றகரமானதொரு நிலைவரமாகும்.

ஆனால் இதனூடாக பெண்கள் தரப்பு அடைய எதிர்பார்க்கும் பலன் அல்லது இலக்கு எட்டப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். அவ்வாறெனில் அதனை அடைவதற்காக என்ன செய்ய வேண்டும்?

பல்வேறு தரப்பினருடனும் பேசி, அவதானிக்கப்பட்டமைக்கு அமைவாக, சில விடயங்களில் மாற்றங்களும் கவனங்களும் செலுத்தப்படுதல் அவசியமாகும்.

குறிப்பாக பெண் வேட்பாளர்களைக் களமிறக்கும் போது – அவர்களுடைய கல்வித் தகைமையிலும், அவர்களுக்கு நடைமுறை அரசியலில் உள்ள அறிவு தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுதல் அவசியமாகும்.

சமூக மட்டத்தில் சிறந்த தொடர்புகளுள்ள, சமூக சேவையில் அனுபவமுள்ள பெண்களுக்கு அரசியலில் பிரவேசிப்பதற்கான சர்தப்பங்களை வழங்குவது பொருத்தமாக அமையும். 

உள்ளுராட்சி மன்றங்களில் அமைக்கப்பட்டுள்ள குழுக்களில் (உதாரணமாக நிதிக்குழு, கொள்முதல் குழு) பெண் உறுப்பினர்கள் கட்டாயம் இணைத்துக் கொள்ளப்படுதல் வேண்டும்.

கட்சிகள் தம்மை வளர்த்துக் கொள்ளும் நோக்குடன், போனஸ் மூலம் நியமிக்கப்பட்ட பெண் உறுப்பினர்களை ராஜிநாமா செய்ய வைத்து, அந்த வெற்றிடங்களுக்கு – சுழற்சி முறையில் புதியவர்களை அடிக்கடி நியமிப்பதை தவிர்த்துக்கொள்தல் வேண்டும். 

உள்ளுராட்சி மன்றங்களிலுள்ள பெண் உறுப்பினர்களுக்கு அரசு மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் – துறைசார் பயிற்சிப்பட்டறை மற்றும் கருத்தரங்குகளை நடத்தி வருகின்ற போதிலும், அதன் மூலம் பெண் உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டுள்ள அடைவுகள் குறித்து மீளாய்வு செய்யப்படுதல் வேண்டும்.  

மேலும் ஆணாதிக்க கலாசாரத்தை எதிர்கொள்வதற்கான பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வுகள் போன்றவற்றினை பெண் உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக வழங்குவதன் ஊடாகவும், உள்ளுராட்சி மட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள பெண் பிரதிநிதித்துவத்தின் பயனை அல்லது இலக்கினை அடைந்து கொள்ள முடியுமாக இருக்கும்.

நன்றி: தமிழன் பத்திரிகை (26 நொவம்பர் 2021)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்