வரவு – செலவுத் திட்டத்தை எதிர்க்க, மக்கள் காங்கிரஸ் முடிவு: மூன்று எம்.பிகள் இல்லாத நிலையில் ஏகமனதாக தீர்மானம்

🕔 November 22, 2021

ரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

அந்தக் கட்சியின் அரசியல் அதிகாரசபைக் கூட்டம் நேற்று (21) கொழும்பில் நடைபெற்ற போது, மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இன்றைய (22ஆம் திகதி) வாக்கெடுப்பிலும், டிசம்பர் மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதி வாக்கப்பெடுப்பிலும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் தலைவர் றிஷாத் பதியுத்தீன், இஷ்ஹாக் றஹ்மான், அலி சப்றி றஹீம் மற்றும் முஷாரப் முதுநபீன் ஆகிய நால்வரும் கலந்து கொண்டு, எதிர்த்து வாக்களிக்க வேண்டுமென மக்கள் காங்கிரஸின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் காங்கிரஸின் நேற்றைய அரசியல் அதிகார சபைக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் றிசாட் பதியுதீன் மட்டுமே கலந்து கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் – கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என, கடிதம் மூலம் கட்சிக்கு அறிவித்ததாக தெரியவருகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அத்தியவசிய பொருட்களின் அபரிமிதமான விலை உயர்வினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களுக்கு எந்த வகையிலும் நிவாரணமாக, சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டம் அமையவில்லை என்பதோடு, முன்வைக்கப்பட்டுள்ள இவ்வரவுசெலவுத் திட்டத்தில் விவசாயிகளின் பிரச்சினை, அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினை, அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை, அபரிமிதமான பணவீக்கம் மற்றும் நாட்டில் தேவைப்படும் டொலர் ஒதுக்கீடுகள் இல்லாமை ஆகியவற்றுக்கு எவ்வித தீர்வுகளும் முன்வைக்கப்படவில்லை என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதனால் எதிர்காலத்தில் நாட்டில் பாரிய உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் காணப்படுவதோடு நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுவிடும் என்ற அச்சமும் காணப்படுவதாகவும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

கட்சியின் அரசியல் அதிகார சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களும் வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதற்கான நியாயங்களை முன்வைத்து கருத்துக்களை தெரிவித்தனர் எனவும் மக்கள் காங்கிரஸ் விடுத்துள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Comments