ஊடகங்களின் பார்வையில் பொது மன்னிப்பு: ஒரு நாட்டில் இரு வேறு உலகங்கள்

🕔 November 1, 2021

– யூ.எல். மப்றூக் –

(இந்தக் கட்டுரை ‘இலங்கை ஊடகங்களின் துருவப்படுத்தல்’ எனும் தலைப்பில் இன்ரநியூஸ் நிறுவனம் நடத்திய செய்தி ஆய்வுப் பயிற்சி நெறியினைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் அனுசரணையில் எழுதப்பட்டது)

ரு சம்பவத்தை வெவ்வேறு மொழிகளில் ஊடகங்கள், ‘எதிரும் புதிருமாக’ அறிக்கையிடுவதை நாம் பல சந்தர்ப்பங்களில் கண்டுள்ளோம். இதனால், ஒவ்வொரு மொழியிலும் அந்தச் சம்பவம் பற்றிய செய்திகளைக் காண்போரின் மனதில் வெவ்வேறான பிம்பங்கள் உருவாகி, அதனூடாக அந்தந்த மொழிசார்ந்த சமூகங்கள் துருவப்படுத்தப்படும் நிலை உருவாகுவதையும் நாம் அவதானித்திருக்கின்றோம்.

இதற்கு பல்வேறு உதாரணங்களைக் குறிப்பிட்டுக் கூற முடியும்.  

இலங்கையில் மரண தண்டனைக் கைதியான முன்னாள் ராணுவ சார்ஜன்ட் ஆர்.எம். சுனில் ரத்நாயக்க, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட போது, அது குறித்து சிங்கள ஊடகங்களில் கணிசமானவை வெளியிட்ட அறிக்கைகளும், தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கைகளும் பாரியளவில் வித்தியாசமுடையவையாக அமைந்திருந்தமையினை அவதானிக்க முடிந்தது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையினைக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய போது, அதுகுறித்து வெளியான தமிழ் மற்றும் சிங்கள மொழி அறிக்கையிடல்களிலும் இந்த மாறுபாடுகளைக் காண முடிந்தது.

சிங்கள மொழியை மட்டும் தெரிந்தவர்கள் மேற்படி விடயங்கள் குறித்து வெளியான அறிக்கைகளைக் காணும் போது, அவர்களிடத்தில் அவை தொடர்பில் ஒரு வகையான பிம்பமும், தமிழ் மொழியை மட்டும் தெரிந்தவர்கள் இவ்விடயங்கள் தொடர்பில் வெளியான அறிக்கைகளைக் காணும் போது, அவர்களிடத்தில் வேறோர் வகையான பிம்பமும் உருவாக்கும் நிலை – இதனால் ஏற்பட்டது.

மேற்படி நபர்களுக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு ஒரு வார காலத்தினுள் – சிங்கள மற்றும் தமிழ் மொழியில் வெளிவரும் சில பத்திரிகைகளும் அவற்றின் இணையத்தளங்களும் சில இலத்திரனியல் ஊடகங்களும் வெளியிட்ட செய்திகள் மற்றும் கட்டுரைகளை எடுத்தாள்வதன் ஊடாக, மேற்சொன்ன விடயங்களை இந்தக் கட்டுரையில் நாம் காணலாம்.   

யார் இவர்கள்?

சுனில் ரத்நாயக்க, இலங்கை ராணுவத்தில் சார்ஜன் தரத்தில் இருந்தவர். 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் தமது வீடுகளைப் பார்வையிடச் சென்ற பொதுமக்களில் 08 பேர் ராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் சுனில் ரத்நாயக்கவும் ஒருவர். இந்தக் கொலை தொடர்பான வழக்கில் சட்ட மா அதிபரால் நிறுவப்பட்ட மூவரடங்கிய விசேட நீதிமன்றம், 2015ஆம் ஆண்டு ஜுன் மாதம் 24ஆம் திகதி சுனில் ரத்நாயக்கவுக்கு மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

இதன் பின்னர் சிறையிலடைக்கப்பட்டிருந்த சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பு வழங்கிய நிலையில், கடந்த வருடம் மார்ச் மாதம் 26ஆம் திகதி அவர் விடுதலையானார்.

இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு ஒரு வருடத்தின் பிறகு, மற்றொரு மரண தண்டனைக் கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பு வழங்கினார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேம சந்திர கொலையில் சம்பந்தப்பட்டார் என, துமிந்த சில்வா மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 2010ஆம் ஆண்டு இந்தக் கொலை நடந்தது. இது தொடர்பான வழக்கில் துமிந்த சில்வாவுக்கு 2016ஆம் ஆண்டு, கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து துமிந்த சில்வா மேன்முறையீடு செய்தார். இருந்தபோதும் 2018 ஒக்டோபர் 11ஆம் திகதி இந்தத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இந்தப் பின்னணியில்தான் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ், இவ்வருடம் ஜுன் மாதம் 24ஆம் திகதியன்று துமிந்த சில்வா விடுதலையானார்.

சிங்கள ஊடகங்களில் சுனில் ரத்நாயக்க

சுனில் ரத்நாயக்க பொதுமன்னிப்பில் விடுதலையானமை குறித்து ‘மவ்பிம’ சிங்களப் பத்திரிகையின் இணையத்தளம் 2020 மார்ச் 26 அன்று வெளியிட்ட செய்திக்கு; ‘போர்வீரர் சுனில் ரத்நாயக்க விடுதலை’ (රණවිරු සුනිල් රත්නායක නිදහස්) எனத் தலைப்பிடப்பட்டிருந்தது.  

சுனில் ரத்நாயக்க வீடு வந்தபோது…

ஹிரு வானொலி மற்றும் தொலைக்காட்சிக்கு சொந்தமான `ஹிரு கொசிப்’ செய்தித்தளம்; ‘போர் வீரர் சுனில் ரத்நாயக்க விடுவிக்கப்பட்டு வீடு செல்கிறார்’ (රණවිරු සුනිල් රත්නායක නිදහස් ලබා නිවසට යයි) எனும் தலைப்பில் 2020 மார்ச் 26 அன்று செய்தி வெளியிட்டது. 

சுனில் ரத்நாயக்கவின் விடுதலை தொடர்பில், 2020 மார்ச் 26ஆம் திகதி ஹிரு தொலைக்காட்சியிலும் செய்தியொன்று ஒளிபரப்பானது. அதில், சுனில் ரத்நாயக்க கல்கமுவ பிரதேசத்திலுள்ள தனது வீட்டுக்கு செல்வதும், அங்கு அவரின் குடும்பத்தாரால் அவர் வரவேற்கப்படுவதும் காண்பிக்கப்பட்டது.

மேலும் அந்தச் செய்தியில், சுனில் ரத்நாயக்கவின் மனைவி அழுதவாறே பேசுகின்றார். ” நாலரை வருடங்களாக எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. கடந்த வருடமும், 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளிலும் ஜனாதிபதியை சந்திக்க நான்கு ஐந்து தடவை முயற்சித்தேன். என்னை சந்திக்க விடவில்லை, அதற்கான சந்தர்ப்பத்தினை தரமறுத்தார்கள். எங்களுக்கு எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. 04 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். எனது கணவர் ஆற்றிய சேவைக்காக நீங்கள் வழங்கிய தீர்மனத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம். ஜனாதிபதி நீங்கள் புத்தரைப்போன்றவர்” என்கிறார் சுனில் ரத்நாயக்கவின் மனைவி.

அதே செய்தியில், ஜாதிக சிங்ஹலே அமைப்பின் செயலாளர் மெடில்லே பஞ்ஞாலோக தேரர் பேசி வெளியிட்ட வீடியோ ஒன்றும் ஒளிபரப்பப்பட்டது. அதில்; ” சுனில் ரத்நாயக உள்ளிட்ட மரண தண்டனை விதிக்கப்பட்ட பல போர்வீரர்களின் விடுதலைக்காக நீங்களும் நாங்களும் பல வருடங்களாக போராடி வருகிறோம். இவரின் விடுதலை தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு விசேடமாக நன்றி கூறுகின்றேன். மேலும் இதற்காக குரல்கொடுத்த அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன். மகா சங்க தேசிய அமைப்பின் பேஸ்புக் பக்கத்தில் அவருக்காக குரல் எழுப்பிய எங்கள் அனைவரின் முயற்சியின் விளைவாகவே இது நடந்தது” என, ஜாதிக சிங்ஹலே அமைப்பின் செயலாளர் கூறுகின்றார்.

இவ்வாறான செய்திகளைக் காண்போர், சுனில் ரத்நாயக்க தொடர்பில் அனுதாபம் கொள்ளும் நிலை உருவாகும். அவர் ஒரு கொலையாளி என்பதை விடவும், ‘அவர் ஒரு போர் வீரர்’, ‘தாய்நாட்டுக்கு சேவையாற்றிய ஒருவர்’ எனும் பிம்பங்கள் – அந்தச் செய்திகளைக் காண்போருக்கு ஏற்படும். சுனில் ரத்நாயக்கவினால் கொலை செய்யப்பட்டவர்களுக்கான நியாயம், இந்தச் செய்திகளின் ஊடாக எதுவும் இல்லை. சுனில் ரத்நாயக்கவின் மனைவி அழுவதைக் காண்பவர்களுக்கு, அவர்மீது ஒரு பரிவு ஏற்படும். அதனூடாக சுனில் ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு நியாயமானது என்கிற மனநிலையை அந்தச் செய்திகள் மக்கள் மனதில் கட்டியெழுப்பப்புகின்றன. இதனால், மேற்படி செய்திகளைக் காண்போர், சுனில் செய்த குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய எந்தவித தகவலும் அறியாமலே, ‘அவர்கள் தமிழர்கள்’ என்ற ஒரு தகவலுடன் கடந்து போகின்றனர். தமிழர்கள் மீது இழைக்கப்படும் குற்றங்களை ‘பயங்கரவாதத்தை ஒடுக்குதல்’ என்ற ஒற்றைச் சொல்லினூடாக சிங்கள மக்கள் கடந்து செல்கிறார்கள். கொல்லப்பட்ட அந்த 08 பேர் பற்றிய எந்தவித தகவலையும் சிங்கள மக்கள் அறிய வாய்ப்பு இல்லை. எனவே தமிழர்கள் தொடர்பில் சாதாரண சிங்கள மக்கள் மனதில் கட்டைமக்கப்படும் விம்பங்கள் முக்கியமானவை.

சுனில் ரத்நாயக்க மனைவி

தமிழ் ஊடகங்களில் சுனில் ரத்நாயக்க

சுனில் ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு தொடர்பில் தமிழ் ஊடகங்களில் அநேகமானவை – மேற்படி சிங்கள ஊடகங்கள் செய்திகளை அறிக்கையிட்ட விதத்திலிருந்து, மாறுபட்ட வகையில் செய்திகளை  வழங்கின.

சுனில் ரத்நாயக்கவின் விடுதலை தொடர்பில் 29 மார்ச் 2020 அன்று வீரகேசரி இணையத்தளம்; ‘பொதுமன்னிப்பு: ஜனாதிபதியின் துஷ்பிரயோகம்’ எனும் தலைப்பில் கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தது. 

அதன் ஓரிடத்தில்; ‘தமிழினத்தின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள எத்தனையோ மிலேச்சத்தனமான கொடூரங்களுக்கான நீதிக் கோரிக்கை தொடர்ந்து கொண்டிருக்கையில், 15 ஆண்டு போராட்டத்தின் பின்னர், பாதிக்கப்பட்ட தரப்புக்கு இலங்கை நீதித்துறையூடாகவே நீதி கிடைத்திருந்தாலும், தீர்ப்பளிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளே முழுமையாக நிறைவடையாத நிலையில், அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு உள்ள விசேட அதிகாரத்தின் பிரகாரம், பொதுமன்னிப்பில் குற்றவாளி விடுக்கப்பட்டுள்ளமையானது, உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், ‘பொதுமன்னிப்பு குறித்து நீதிபதிகளின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. ஆகவே அரசியலமைப்பில் தனக்குள்ள அதிகாரத்தினை ஜனாதிபதி சுய லாபத்துக்காப் பயன்படுத்தியுள்ளமை வெளிப்பட்டுள்ளது. இங்கு அதிகார துஷ்பிரயோகம் நடைபெற்றுள்ளமை வெளிப்படையானது என, அந்த வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஆர். தவரசா தெரிவித்துள்ளார்’ என்றும், அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

‘யாழ் மிருசுவில் படுகொலை குற்றவாளி விடுதலையானார்’ எனும் தலைப்பில் 2020 மார்ச் 26ஆம் திகதி தினக்குரல் இணையத்தளம் வெளியிட்ட செய்தியில்; ‘ யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டு தமிழ் மக்களை சுட்டும் வெட்டியும் கோரமாக கொலை செய்த சம்பவத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியான இவர், இன்று காலை 9.30 மணியளவில் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டார். பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண சிறைச்சாலைக்கு நேரில் சென்று, அவரை வழியனுப்பி வைத்தார்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

2020 மார்ச் 27ஆம் திகதியன்று ‘நியூஸ் ஃபெஸ்ற்’ இணையத்தளம்; ‘முன்னாள் ராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்னாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ எடுத்த தீர்மானம், சமூகத்துக்கு கவலையளிக்கும் செய்தி என, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது’ எனும் தலைப்பில், செய்தியொன்றை வெளியிட்டிருந்தது.

அந்தச் செய்தியில் ‘பாரிய குற்றச்சாட்டுகளுக்காக தண்டனை பெற்ற ஒருவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதன் மூலம், அதற்கு இணையான குற்றங்களை இழைக்கும் ஒருவர், சட்டத்தின் முன் குற்றவாளியாகக் காணப்பட்டாலும், அவருக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பதை பிரதிபலிப்பதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

‘2000ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவத்துக்கு 2015 ஆம் ஆண்டு நீதி கிடைத்தாலும், இத்தகைய எதேச்சையான முடிவுகள் நீதித் துறைக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக சர்வதேச மன்னிப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது’ எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேற்படி செய்திகள் மற்றும் கட்டுரைகளைப் படிப்போர்; தமிழர்களுக்கு எதிரான குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்ட ஒருவர், பொதுமன்னிப்பு எனும் பெயரில் தப்பித்துக் கொண்டதாகவே புரிந்து கொள்வார்கள், இந்தப் பொதுமன்ளிப்பு தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை எனவும் விளங்கிக் கொள்வர். இதனால், மேற்படி செய்திகளைப் படிப்போர் இந்த நாட்டில் நீதி பற்றிய சந்தேகத்தையும் அதிலும் தமிழர்களுக்கான நீதி எப்போதும் மறுக்கப்படுவதாகவும் அவர்களை எண்ண வைக்கிறது. அத்துடன் அரசை எப்போதும் ‘சிங்கள’ அரசாகவே அது படிமமாக்குகிறது. அது ‘சிங்கள’ என்ற சமூகம் மீதான நம்பிக்கையின்மையையும் சேர்தே பொருள் கொள்கிறது.

துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு – சிங்கள ஊடகங்களின் அறிக்கைகள் 

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் பேரில் விடுவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்,

‘சிலுமின’ பத்திரிகையின் இணையத்தளத்தில் 26 ஜுன் 2021 அன்று ‘துமிந்த ஏன் விடுவிக்கப்பட்டார்’ (දුමින්ද සිල්වා නිදහස් කළේ ඇයි) எனும் தலைப்பில் கட்டுரையொன்று வெளியானது.

குறித்த கட்டுரை, துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையைக் கேள்விக்குட்படுத்துவதாக அமைந்திருந்தது.

‘ விசாரணைகள் முறையாக நடத்தப்பட்டனவா என சமூகத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. முக்கிய விஷயம் என்னவென்றால், துமிந்த சில்வா அந்த நேரத்தில் தலையில் சுடப்பட்டிருந்தார். மற்றையது – நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்கனவே எழுந்துள்ளன’.

‘நீதிபதி பத்மினி ரணவக்கவின் குரல் பதிவுகள் மூலம் சமூகத்துக்குள் பரவிய கதைகளைக் கேட்கையில், நீதிமன்றத் தீர்ப்பு நியாயமானதா? என்று சமூகத்திற்குள் பாரியதொரு விவாதம் உள்ளது’ என, அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை வழங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழுவில், நீதிபதி பத்மினி ரணவக்கவும் இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தது.

இவருடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசியில் உரையாடியதாகக் கூறப்படும் ஒலிப்பதிவொன்று வெளியாகி, அது பாரிய சர்ச்சைக்குள்ளானது. அதுவே மேற்படி கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

‘அடுத்தடுத்த விசாரணைகளில், பரத லக்ஷ்மன் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் இறந்தாலும், பாரதவின் மெய்ப்பாதுகாப்பாளர் முதலில் துமிந்த சில்வாவை சுட்டார் என்றும், துமிந்த சில்வா சுடப்பட்டு மயக்கமடைந்தார் என்றும் தெரியவந்தது. துமிந்த சில்வாவின் துப்பாக்கியிலிருந்து தோட்டாக்கள் ஏவப்படவில்லை என்பதும் தெரியவந்தது’ என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்ட தினத்தில், அதுகுறித்து ஹிரு தொலைக்காட்சியின் மதிய நேர செய்தியறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டது.

‘பொசன் போயா தினத்தை முன்னிட்டு, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 16 பேர் உட்பட 93 கைதிகள் இன்று ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டனர். அதற்கிணங்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று – ஜனாதிபதியினுடைய பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார்’ என அந்தச் செய்தியில் கூறப்பட்டது.

துமிந்த சில்வாவின் கைதையே கேள்விக்குட்படுத்துவதாக அமைந்த கட்டுரைகளும் செய்திகளும் ஏனைய 93 பேர் பற்றி எதையும் ஆராயவில்லை.

ஹிரு உட்பட, ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் ஊடகங்கள் அனைத்தும் இவ்வாறே செய்திகளை வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதற்கு உறவு நிலைப்பட்ட வேறு காரணங்களும் இருக்கலாம் என, மக்கள் நினைக்கும் அளவுக்கு செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

அதாவது ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் ஹிரு தொலைக்காட்சி, துமிந்த சில்வாவின் சகோதரருக்கு சொந்தமானது என்பதும்  இங்கு இந்தச் செய்தியில் தாக்கம் விளைவித்திருக்கிறது.

ஊடகங்களின் கொள்கைகள், அரசியல் சார்பு நிலைகள் என்பன – செய்திகளில் தாக்கம் விளைவிக்கின்ற நிலையில், உறவு நிலைப்பட்ட நோக்குகளும் செய்திகளைப் பிரசுரிக்கின்ற முறையில் பெரும்தாக்கத்தை செலுத்துகிறது என்பதையும் நாம் உணரமுடிகிறது. அதே நேரம் ஏனைய சில ஊடகங்கள் துமிந்த சில்வாவின் விடுதலையை கேள்விக்குட்படுத்தியிருந்தமையையும் காண முடிந்தது.

இதனூடாக சிங்கள சமூகத்துக்குள்ளேயே மக்களை இரு துருவப்படுத்தும்  நிலையை சிங்கள ஊடகங்கள் மேற்கொண்டிருந்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

துமிந்த விடுதலையும் தமிழ் ஊடகங்களும்

துமிந்த சில்வா விடுதலையான 24 ஜுன் 2021 அன்று தினக்குரல் இணையத்தளம்; ‘ துமிந்த சில்வா விடுதலை, சட்டத்தின் ஆட்சியை அலட்சியம் செய்கின்றது – அமெரிக்க தூதுவர்’ எனும் தலைப்பில் செய்தியொன்றை வெளியிட்டது. அதில், ‘ துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதியின் தீர்மானம் இலங்கையின் சட்டத்தின் ஆட்சியை அலட்சியம் செய்யும் விதத்தில் அமைந்துள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

25 ஜுன் 2021 அன்று வீரகேசரி இணையம்; ‘துமிந்த சில்வாவின் விடுதலைக்கு ஐ.நா. விசனம்’ எனும் தலைப்பில் வெளியிட்ட செய்தியொன்றில்; முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ட்விட்டர் பக்கத்தில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் ‘இது சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்துவதுடன், பொறுப்புக் கூறுதலையும் குறை மதிப்புக்கு உட்படுத்துகிறது எனவும் அந்த ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

துமிந்தவுக்கான பொதுமன்னிப்பு தொடர்பில் தமிழில் வெளிவந்த இவ்வாறான செய்திகள், துமிந்தவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு அநீதியானது என்கிற எண்ணத்தை உருவாக்குகின்றன. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்கள் பலர், மிக நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், துமிந்தவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை பாகுபாடான செயற்பாடு என, தமிழில் வெளியான செய்திகளைப் படிப்போர் உணரத் தலைப்படுவர்.

இவ்வாறு சாதாரண மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப ஊடகங்களும் தம்மை மாற்றிக் கொண்டுள்ளனவா? என்று சந்தேகிக்கும் வகையில் இன ரீதியாக, கட்சி அரசியல், தனிப்பட்ட நோக்குகள் மற்றும் அதிகாரம் போன்றவற்றின் அடிப்டையில் செய்திகளைத் துருவப்படுத்துவது நிகழ்கிறது.

இவ்வாறு ஒரே விடயம் தொடர்பில் சிங்களம் மற்றும் தமிழ் மொழி ஊடகங்கள், மாறுபட்ட வகையில் செய்திகளை வெளியிடுவதன் காரணமாக, அந்தந்த மொழிகளின் வாசகர்கள் மனங்களில் எதிரும் புதிருமான பிம்பங்கள் உருவாகுவதோடு, குறித்த மொழிகளை பேசும் சமூகங்கள், மென்மேலும் துருவப்படுத்தப்படும் அபாயம் உருவாகுவாகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்