காலத்தை இழுத்தடிக்காமல், நிரந்தர நியமனம் வழங்கவும்: பயிற்சி பட்டதாரிகள் ஒன்றியம் கோரிக்கை

🕔 September 28, 2021

– பி. முஹாஜிரீன் –

“அரச நிறுவனங்களில் கடமை புரியும் பட்டதாரி பயிலுனர்களை நிரந்தரமாக்கும் காலத்தை இழுத்தடிக்காமல், 2021.09.03 ம் திகதியிலிருந்து அவர்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்க வேண்டும்” என, ஒன்றிணைந்த பட்டதாரி பயிலுனர் ஒன்றியத்தின் அம்பாறை மாவட்ட தலைவரும் பயிற்சி பட்டதாரிகள் ஒன்றியத்தின் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளருமான ஏ.ஆர். றினோஸ்  கோரிக்கை விடுத்தார்.

பட்டதாரி பயிலுனர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் பாலமுனை மத்திய நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போது, அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்;

“ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்களின் பயிற்சி காலம் 2021 செப்டம்பர் மாதம் 02ம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் பட்டதாரி பயிலுனர்களை நிரந்தரமாக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவில்லை. பட்டதாரி பயிலுனர்களின் பயிற்சி காலத்தை 06 மாதங்களுக்கு நீடிப்பதாக அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதாக அண்மையில் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் பட்டதாரி பயிலுனர்கள் மினவும் அசௌகரியம் அடைந்துள்ளதுடன் பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்கொண்டுள்ளனர். பின்னர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும, பட்டதாரி பயிலுனர்களின் நிரந்தர நியமனம் ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இடம்பெறுமெனவும், இது குறித்து ஆராய மூன்று அமைச்சர் கொண்ட குழு நியமிக்கப்படும் எனவும் கூறினார்.

மாதாந்த கொடுப்பனவாக ரூபா 20 ஆயிரத்தினை பெற்றுக் கொண்டு, பயிற்சியாளர்கள் கடந்த 01 வருடமாக நிரந்தர ஊழியர்களின் கடமைகளை செய்துள்ளனர் என்பதை அனைத்து நிறுவனங்களின் தலைவர்களும் அறிவார்கள்.

இது குறித்து அனைத்து அதிகாரிகளுக்கும் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில், நிரந்தர்ப்படுத்தல் தொடர்பான செயற்பாடுகளின் போது எழும் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாட, ஒன்றிணைந்த பயிலுனர் ஒன்றியம் மற்றும் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் ஆகியவற்றிற்கு வாய்ப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்” என்றார்.

“நிரந்தர நியமனம் காலதாமதமின்றி விரைவாக வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு, நிரந்தர நியமனமானது எமது ஒரு வருட பயிற்சிக் காலம் நிறைவடைந்த தினமான 2021.09.03ம் திகதி செயற்படும் வகையில் வழங்கப்பட வேண்டும்.

கல்வி அமைச்சரும் அரசாங்கமும் வாக்குறுதியளித்தபடி, பாடசாலைகளில் பயிற்சியாளர்களாக இணைக்கப்பட்டு ஒரு வருடத்துக்கு மேல் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற பட்டதாரி பயிலுனர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட வேண்டும். அதற்கான நியமனத் திட்டமும் வெளியிடப்பட வேண்டும்.

பட்டதாரி பயிலுனர்களை நிரந்தரம் செய்கின்ற போது மற்றுமொரு தெரிவுக்கான விருப்பம் கோரப்பட வேண்டும்.

சுகாதார வைத்தியதிகாரி அலுவலகங்களில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரி பயிலுனர்கள் 07 நாட்களும் சேவைக்கு அழைக்கப்படுவதால், சுகாதார வைத்தியதிகாரி அலுவலக நிரந்தர உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படுகின்ற விசேட கொடுப்பனவவான 07 ஆயிரத்து 500 ரூபாவினை பயிலுனர்களுக்கும் வழங்க வேண்டும்.

சமுர்த்தி வங்கிகளில் இணைக்கப்பட்டுள்ள பயிலுனர் பட்டதாரிகள் பயணக்கட்டுப்பாடுகளின் போது 05 நாட்களும் சேவைக்கு அழைக்கப்படுகின்றார்கள். இதனால் அவர்களுக்கும் மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் அல்லது 05 நாட்களும் வேலைக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும்.

நுகர்வோர் அதிகார சபையுடன் இணைக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.

பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட பயிலுநர்கள் உட்பட சகல பயிலுநர்களுக்கும் கொவிட்-19 தடுப்பூசி வழங்க வேண்டும். சுகாதாரக் கடமைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பயிலுநர்களுக்குரிய விசேட கொடுப்பனவை வழங்குவதோடு ஏனைய பயிலுநர்களுக்கும் மேலதிக கொடுப்பனவையும், மாதாந்த கொடுப்பனவையும் தாமதமின்றி வழங்க வேண்டும்.

வாக்குறுதி அளித்தபடி ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ எங்களுக்கான நிரந்தர நியமனத்தை மேலும் தாமதிக்காது வழங்குதல் வேண்டும்” எனவும் இதன்போது பயிற்சிப்பட்டதாரிகள் ஒன்றியத்தின் சார்பாக ஊடக சந்திப்பில் கலந்து கொண்டோர் வேண்டிக் கொண்டனர்.

இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் ஒன்றிணைந்த பட்டதாரி பயிலுனர் ஒன்றியத்தின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.ஜி. முஹம்மட், நிருவாக உறுப்பினர்களான ஏ.ஜே. பாயிஸ், யு.எல்.எம். பாஸில் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்