தெ.கி.பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள், ஏற்றுக் கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்; உபவேந்தர் தெரிவிப்பு

🕔 December 2, 2015

SEUSL - 03
– எம்.வை. அமீர் –

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள், தமது பீடத்திலுள்ள சில சிறிய குறைபாடுகளை – பெரிய பிரச்சினைகள் போல் கூறிக்கொண்டு, ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைப்பதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.

அதேவேளை, பொறியியல் பீட மாணவர்கள் எதிர்நோக்குவதாகக் கூறிக் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில், அவர்கள் பல்கலைக்கழக நிருவாகத்தினருடன் பேசாமல், அரசியல் ரீதியில் இந்த விவகாரத்தினைக் கையாள முயற்சிப்பதாகவும் உபவேந்தர் குற்றம்சாட்டினார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள், தாம் எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கும் பிரச்சினைகளை தீர்த்துத் தருமாறு கோரி, கடந்த ஒரு வார காலமாக வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக தமது தரப்பு நியாயங்களை வெளிப்படுத்தும் நோக்கில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகத்தினர் நேற்று செவ்வாய்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடத்தினர். அந்த சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் நாஜிம் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

இலங்கையில் உள்ள ஏனைய பல்கலைக்கழகங்களின் தரத்துக்கேற்ப, தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் இங்கு கல்விகற்கும் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளுக்காக, அதியுயர்வான வகையில் பங்காற்றுகிறது.

பல்கலைக்கழகத்துக்கு எதிராக பொறியியல் பீட மாணவர்கள் முன்வைக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கின்றோம். இந்த மாணவர்கள் முன்னெடுக்கும் இவ்வாறான செயற்பாடுகள் அவர்களின் எதிர்காலத்தையே பாதிக்கும்.

பொறியியல் பீட மாணவர்களின் தவறான செயற்பாடுகளுக்கு எதிராக, பலகலைக்கழக நிருவாகம் இதுவரை எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.  எனவே, மாணவர்கள் உடனடியாக தங்களது கல்வி நடவடிக்கைகளில் இணைந்து கொள்ள வேண்டும்” என்றார்.SEUSL - 01

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்