பாசிச புலிகள் காத்தான்குடி பள்ளிவாசல்களில் நடத்திய வெறியாட்டம்: உயிரிழந்த 124 பேரையும் நினைவுகூரும் சுஹதாக்கள் தினம் இன்று

🕔 August 3, 2021

– மரைக்கார் –

காத்தான்குடி பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது, பாசிச புலிகள் நடத்திய தாக்குதலில் 124 பேர் பலியான தினம் இன்றாகும்.

1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி – பாசிசப் புலிகள் அமைப்பினர் இந்தத் தாக்குதல்களை நடத்தினர்.

இந்தக் கோரச் சம்பவத்தில் பலியானவர்களை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு வருடமும் இன்றைய நாள் ‘சுஹதாக்கள் தினம்’ ஆக அனுஷ்டிக்கப்படுகிறது.

அந்த வகையில் இன்றைய தினம் 31ஆவது சுஹதாக்கள் தினமாகும்.

காத்தான்குடியிலுள்ள ஹுசைனியா பள்ளிவாசலிலும், மீரா ஜும்ஆ பெரிய பள்ளிவாசலிலும் – இஷா தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது பாசிசப் புலிகள் கைக்குண்டுகளை வீசியும், துப்பாக்கிகளாலும் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

அதன் போது பள்ளிவாசலினுள் 103 பேர் பலியானார்கள், பின்னர் 21 பேர் இறந்தனர்.

“தொழுகைக்காக வந்த சிலரை ‘உள்ளே அவசரமாகச் செல்லுங்கள்’ என பள்ளிவாசலுக்குள் அனுப்பி விட்டு அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்” என்று, காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர் எம்.எஸ். நூர்தீன் எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இன விடுதலைக்காக போராடுவதாக ஆயுதம் ஏந்திய புலிகள், தமிழ் பேசும் மற்றொரு சமூகமான முஸ்லிம்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தியமையானது அவர்களின் கோழைத்தனத்துக்கும், பயங்கரவாத வெறியாட்டத்துக்கும் குறிப்பிடத்தக்க உதாரணமாகும்.

யுத்த காலத்தில் நடந்த மனிதப்படுகொலை மற்றும் இன அழிப்பு தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் போது, காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை தொடர்பிலும் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே முஸ்லிம்களின் வேண்டுகோளாக உள்ளது.

பாசிச புலிகளின் அந்தப் பயங்கரவாதத் தாக்குதலின் போது மரணித்த அனைவருக்கும் மேலான சுவர்க்கம் கிடைக்கப் பிராத்த்திப்போம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்