புத்தளம் நகர சபையின் தவிசாளராக ரபீக் தெரிவு

🕔 July 1, 2021

புத்தளம் நகர சபையின் புதிய தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எஸ்.எம். ரபீக் இன்று வியாழக்கிழமை தெரிவு செய்யப்பட்டார்.

புத்தளம் நகர சபையின் தவிசாளராக செயற்பட்டு வந்த முன்னாள் பிரதி அமைச்சர் கே.ஏ. பாயிஸ் கடந்த மே மாதம் 23 ஆம் திகதி திடீர் விபத்து ஒன்றில் உயிரிழந்தமையை அடுத்து, புத்தளம் நகர சபையின் உபதலைவரான சுஷாந்த புஷ்பகுமார, ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை பதில் தவிசாளராக செயற்பட்டு வந்தார்.

இந்த நிலையில் புத்தளம் நகர சபையில் ஏற்பட்ட தவிசாளர் பதவி வெற்றிடத்துக்கு ஒருவரை நியமிப்பதற்கான தெரிவு இன்று (01) இடம்பெற்றது.

வடமேல் மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் ஐ.எம். இளங்ககோன் தலைமையில் புதிய தவிசாளரைத் தெரிவு செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது வாக்கெடுப்புக்கான சகல ஏற்பாடுகளும் மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளரினால் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினரான நகர சபையின் உப தவிசாளர் சுஷாந்த புஷ்பகுமார, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான எம்.எஸ்.எம். ரபீக்கை தவிசாளராக நியமிப்பதாக அவருடைய பெயரை சபையில் பிரேரித்தார்.

இதனை அடுத்து சபா மண்டபத்தில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் இதற்கு எவ்வித ஆட்சேபனைகளையும் தெரிவிக்காது இதனை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்ததை அடுத்து, புத்தளம் நகர சபையின் புதிய தவிசாளராக மு.கா உறுப்பினர் எம்.எஸ்.எம். ரபீக் போட்டி இன்றி தெரிவானார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி , நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ( NFGG) ஆகிய ஐந்து அரசியல் கட்சிகளையும் ஒரு சுயேட்சைக் குழுவையும் உள்ளடக்கிய வகையில் 19 உறுப்பினர்களைக் கொண்ட புத்தளம் நகர சபையின் ஆட்சி மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசமானது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்