ஜிஎஸ்பி வரிச் சலுகையை இழந்தால், ஒரு டொலருக்கு 300 ரூபா செலுத்த வேண்டிவரும்: முன்னாள் பிரதமர் ரணில் எச்சரிக்கை

🕔 June 14, 2021

ரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை நாடு இழந்தால், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும் என்றும், அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி 300 ரூபாவாக மாறும் எனவும் முன்னாள் பிரதமரும், ஐ.தே.கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே ஜிஎஸ்பி பிளஸ் விடயத்தை அரசியல்மயமாக்கி தூக்கி வீச வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் பேசி வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், மேற்படி விடயங்களை அவர் கூறியுள்ளார்.

நாட்டுக்கு வழங்கப்பட்ட ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை தற்காலிகமாக திரும்பப் பெறக் கோரும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சமீபத்திய தீர்மானம் தொடர்பில் பேசிய முன்னர் பிரதமர்; நாட்டின் பொருளாதாரத்தை விருத்தி செய்வதற்காக இந்த வரிச் சலுகையை 2017ஆம் ஆண்டு தனது அரசாங்கம் மீட்டெடுத்ததாகக் கூறியுள்ளார்.

ஜிஎஸ்பி பிளஸ் சலுகையானது வரிவிதிப்பு இல்லாமல் ஐரோப்பாவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய இலங்கையை அனுமதிப்பதாவும், ஆடை மற்றும் மீன்பிடித் தொழில்களில் அபிவிருத்தி காண இது வழிவகுக்கின்றது எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜிஎஸ்பி வரி சலுகை தொடர்பாக இந்த வாரம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுந்துள்ளது என்று கூறிய அவர்; “இந்த சலுகை ரத்து செய்யப்படும் என்று எங்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது” எனவும் தெரிவித்தார்.

கொவிட் தொற்றுநோயால் இலங்கையின் சுற்றுலாத் துறை ஆபத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ள ரணில் விக்ரமசிங்க; “எக்ஸ்-பிரஸ் பேல் கப்பல் மூழ்கியதால், எங்கள் மீன்பிடித் துறையிலும் பிரச்சினைகள் எழுந்துள்ளன. வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனவே, எங்கள் அந்நிய செலாவணி வீழ்ச்சியடைந்துள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.

“அந்நிய செலாவணி வீழ்ச்சியால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, பங்களாதேஷிடமிருந்து 200 மில்லியன் டொலர்களை இலங்கை கடன் வாங்கியுள்ளது. தற்போது, ​​தேயிலை மற்றும் ஆடைத் தொழில்கள் மட்டுமே நாட்டுக்கு அந்நிய செலாவணியைப் பெற்றுத் தர முடியும்”.

“இந்த நிலையில் நாங்கள் ஜிஎஸ்பி பிளஸ் வரி நிவாரணத்தை இழந்தால், ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையும். ஒரு டொலருக்கு சுமார் 300 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதனால் ஆயிரக்கணக்கான வேலைகளை இழக்க வேண்டிவரும்”என்றும் ரணில் எச்சரித்துள்ளார்.

எனவே ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை விடயத்தை அரசியல் மயப்படுத்தாமல், அதனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

“மக்கள் சுமக்கும் பெரும் பொருளாதாரச் சுமைக்கு மேலதிகமாக இன்னும் சுமையைக் கூட்டி, நாட்டை அழிக்க வேண்டாம் என்று நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்”என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காத பட்சத்தில் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற ஜி.எஸ்.பி.ப்ளஸ் (GSP+) வரிச்சலுகையை தற்காலிகமாகவேனும் ரத்து செய்வதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காது விட்டால், ஜி.எஸ்.பி.ப்ளஸ் இல்லை: இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்