புத்தளத்தில் வாழ்ந்து கொண்டு, மன்னாரில் வாக்களிக்க முடியாது: தேர்தல் ஆணையாளர் திட்டவட்டம்

🕔 January 19, 2021

– அஷ்ரப் ஏ சமத் –

புத்தளத்தில் வாழ்பவர்கள் அந்த மாவட்டத்திலேயே வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும். அவா்கள் அங்கு வாழ்ந்து கொண்டு மன்னாரில் வாக்காளர்களாக பதிய முடியாது என, தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்தார்.

சுயாதீன தோ்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா , ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் தோ்தல் ஆனையாளர் நாயகம் ஆகியோர் இணைந்து இன்று செவ்வாய்கிழமை தேர்தல் திணைக்களத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர்.

அதன்போது, ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“கடந்த கால யுத்தத்தினால் மன்னார், வன்னி மாவட்ட மக்களில் ஒரு தொகையானோர் புத்தளத்தில் இடம்பெயா்ந்து வாழ்கின்றனர். இம் மக்களின் பெயர்கள் மன்னார் மாவட்டத்திலுள்ள வாக்காளர் டாப்பில் இம்முறை நீக்கப்பட்டுள்ளது. இது அவா்களின் வாக்குரிமையினையும், அடிப்படை உரிமையினையும் மீறவில்லையா? என, ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கே அவர் இந்தப் பதிலை வழங்கினார்.

தேர்தல் ஆணையாளர் நாயகம் இந்தக் கேள்விக்கு தொடர்ந்து பதிலளிக்கையில்;

“புத்தளத்தில் வாழ்பவர்கள் அந்த மாவட்டத்திலேயே வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும். அல்லது அவா்களின் வதிவிடம் மன்னாரில் இருப்பின் அங்கு போய் வாழ வேண்டும்.

புத்தளத்தில் வீடு, பாடசாலை, நீர், மிண்சாரம் மற்றும் பாதைகளை பயன்படுத்துவோர் அந்த பிரதேசத்தில் உள்ள உள்ளுராட்சி, மாகணசபை, மற்றும் நாடாளுமன்ற வேட்பாளர்களுக்கே வாக்களித்தல் வேண்டும்.

புத்தளத்தில் வதிவிடம், மன்னாரில் வாக்களிப்பு என்பது இனி சாத்தியப்படாத காரியம். அல்லது மன்னாரிலிருந்து இடம்பெயா்ந்தவா்கள் அங்கு அவா்களுடைய வீடு, காணிகள் சொத்துக்கள் இருப்பின், அங்கு சென்று வாழ வேண்டும். அங்குள்ள கிராம சேவகரிடம் வாக்காளர்களாகப் பதிய வேண்டும்.

ஆகவே இம்முறையில் இருந்து புத்தளத்தில் வாழ்ந்து கொண்டு, அப்பிரதேசத்தில் சகல அரச அனுகூலங்களையும் அனுபவித்துக் கொண்டு, மன்னாரில் வாக்குரிமையைப் பெற முடியாது.

அத்துடன் புத்தளத்திலிருந்து மன்னாருக்குச் சென்று வாக்களிப்பதற்கு, நாங்கள் பிரயாண ஒழுங்குகளையும் செய்து கொடுக்க முடியாது” என்றார்.

இதேவேளை, “09 மாகாண சபைகளுக்கான தோ்தல்களும் நடத்தப்படாமல், மூன்று வருடங்களும் 06 மாதங்களும் கடந்து விட்டன. மாகாணசபைகள் ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ளன. ஏன் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை” என்று ஊடகவியலாளர் அங்கு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிகேவா ;

“அண்மையில் பிரதமரை சந்தித்து, மாகாணசபை தேர்தல் பழைய முறைமையிலா அல்லது புதிய முறைமையிலா நடத்த வேண்டும் என்பது பற்றிய நாடாளுமன்றின் தீர்மானத்தைப் பெற்றுத் தருமாறு கேட்டோம். அந்த முடிவு கிடைக்கும் வரை காத்திருக்கின்றோம்.

அனைத்து கட்சிகளின் தலைவா்களையும் அண்மையில் சந்தித்து மாகாணசபைத் தோ்தல் பற்றி கலந்தாலோசித்தோம். ஓரிரு சிறிய கட்சிகளைத் தவிர சகல கட்சிகளும் மாகாண சபைத் தோ்தலை ஒரே தடவையில் 09 மாகாணங்களிலும் நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்தன.

மத்திய அரசின் நிர்வாகத்தினை விடவும், மாகாண சபையின் கீழ்தான் அரச அதிகாரங்களும் நிர்வாகங்களும் உள்ளன. குறிப்பாக மாகாணசபைகளின் 04 வருட பதவிக் காலம் முடிவடைந்தவுடன், 03 மாதங்களுக்குள் தோ்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் மூன்றரை வருடங்கள் கடந்து விட்ட போதும் தேர்தல் நடைபெறவில்லை. இலங்கையில் மாகாணசபை முறைமையை யாரும் நீக்க முடியாது. அது இலங்கை அரசியல் யாப்பில் உள்ள அதிகாரமுறைமையாகும்” என்றார்.

தொடர்பான செய்தி: வாக்காளர் டாப்பிலிருந்து பெருந்தொகையானோர் நீக்கப்பட்ட விவகாரம்: மனித உரிமை ஆணைக்குழுவில் றிசாட் முறைப்பாடு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்