காலாவதியடைந்த உணவுப் பொருட்கள் புதிய திகதியிடப்பட்டு விநியோகம்: அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் மற்றொரு மோசடி குறித்து புகார்

🕔 December 10, 2020

– அஹமட் –

னிமைப்படுத்தப்பட்டுள்ள அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கு அரசாங்க நிதியில் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களில், காலாவதியான உணவுப் பொருட்களுக்கு, புதிய திகதிகள் அச்சிடப்பட்டு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் வழங்கும் மேற்படி நிவாரணப் பொருட்கள் 2014ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டு 2015ஆம் ஆண்டு காலாவதியடைந்தவை எனவும், அந்த நூடில்ஸ் பொதிகளிலுள்ள பழைய திகதிகள் அழிக்கப்பட்டு, குறிப்பிட்ட நூடில்ஸ்கள் 2020ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டதாகவும், 2021ஆம் ஆண்டு காலாவதியடைவதாகவும் புதிதாக திகதிகள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு வழங்கப்பட்ட நூடில்ஸ் பொதியிலுள்ள திகதிகளைப் படம் பிடித்து ‘புதிது’ செய்தித்தளத்துக்கு பொதுமக்கள் சிலர் அனுப்பி வைத்திருந்தனர்.

அந்தப் படங்களை பெரிதாக்கிப் பார்த்த போது, அதில் பழைய திகதிகள் அழிக்கப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இதேவேளை, 500 கிராம் எடையுடைய நூடில்ஸ் பொதி வழங்குவதாக, ஏற்கனவே அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் அறிவித்துள்ள நிலையில், தற்போது 400 கிராம் எடையுடைய நூடில்ஸ் பொதிகளையே வழங்கியுள்ளதாகவும், அந்தப் பொதிகளில் 400 கிராம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை, 500 கிராம் என கையெழுத்தினால் மாற்றியுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

மக்களுக்கு வழங்கப்படும் மேற்படி நிவாரணப் பொருட்களை அதிக விலைக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினர் வழங்குவதன் மூலம் பெரும் தொகை பணத்தை கொள்ளையடிப்பதாக ஏற்கனவே புகார் உள்ளது.

மறுபுறம், பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட எடையிலும் குறைவாக வழங்குவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில்தான் – தற்போது காலாவதியடைந்த உணவுப்பொருட்களை புதிய திகதியிட்டு வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் வழங்கும் நிவாரணப் பொருட்களின் எடைகளில் மோசடி: ‘எரியும்’ வீட்டில் பிடுங்கும் அவலம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்