கொரோனா விவகாரம்: ஜனாஸாக்களை எரிக்க வேண்டும் என வாதிடும் தரப்பின் சார்பில், மு.கா. தலைவரின் மருமகன் நீதிமன்றில் ஆஜர்

🕔 November 28, 2020

கொரோனாவினால் மரணிப்போரை எரிப்பதற்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைவரும் சட்ட ரீதியான நடவடிக்கைகளில் ஒருபக்கமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய மருமகன் (மகளின் கணவர்) மில்ஹான் இக்றாம் என்பவர், கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு எதிரானவரின் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியமை அம்பலமாகியுள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது;

ஜனாஸா எரிப்பு வழக்கில் அரச தரப்புக்கு ஆதரவாக, ‘கொறோனா நிலத்தடி நீரைப் பாதிக்கும்’ என்ற வாதத்திற்கு ஆதரவாக கருத்துச் சொன்ன பேராசிரியை மெதிக்கா, குறுக்கீட்டு மனுதாரராக (intervening petitioner) ஆக வந்திருந்தார்.

பேராசிரியை மெதிக்காவுக்கு ஆஜரான சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்த்தன – சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருப்பதால், குறித்த வழக்கை வேறொரு தினத்துக்கு மாற்றுமாறு, தனக்கு கீழ் பணிபுரியும் கனிஷ்ட சட்டத்தரணிகள் இருவரின் ஊடாக, வியாழக்கிழமையன்று நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்த இரண்டு கனிஷ்ட சட்டத்தரணிகளில் ஒருவர் ருக்ஷான் சேனாதீர என்பவர்.மற்றவர் மில்ஹான் இக்றாம் என்பவராவார்.

இந்த மில்ஹான் இக்றாம் என்பவர், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய மூத்த மகளின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களை எரிக்கக் கூடாது என்று மாமனார் ஒருபக்கம் வரிந்து கட்டிக் கொண்டிருக்க, மறுபுறமாக அவரின் மருமகன் – சடலங்களை எதிக்க வேண்டும் என வாதிடும் தரப்பின் பக்கமாக தொழில் செய்கிறார் எனும் விடயம் தற்போது சமூக வலைத்தளங்களில் எழுதப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

செய்தி மூலம்: ராஸி முகம்மத்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்