அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றுப் பகுதியை மண்ணிட்டு நிரப்பி, அபகரித்த ஆசிரியை: சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தீர்மானம்

🕔 October 14, 2020

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள கோணாவத்தை ஆற்றினையும், அதன் கரைகளை அண்டிய பகுதிகளையும் சட்டவிரோதமாக அபகரிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் தைக்கா நகர் பகுதியில் கோணாவத்தை ஆற்றினை அண்மித்த இடமொன்றினை நபரொருவர் மணலிட்டு நிரப்பி, வேலியடைத்துள்ளதாக – தெரிய வந்தமையினை அடுத்து, இன்று புதன்கிழமை அந்த இடத்துக்கு அரச அதிகாரிகள் வருகை தந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், பிரதேச சபை தவிசாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், ராணுவ புலனாய்வு உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என, பல்வேறு தரப்பினரும் சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்ட இடத்துக்கு வருகை தந்திருந்தனர்.

இதன்போது குறித்த இடத்தை சட்டவிரோதமாக நிரப்பியவர் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் என, விசாரணைகளின் போது தெரியவந்தது.

இதனையடுத்து குறித்த நபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கும், வழக்குத் தொடர்வதற்கும் கரையோர பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களங்களின் அதிகாரிகள் தீர்மானித்தனர்.

இதேவேளை, அங்கு சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள வேலி மற்றும் அங்குகொட்டப்பட்டுள்ள மண் ஆகியவற்றினை அங்கிருந்து நாளை அகற்றவுள்ளதாக பிரதேச சபைத் தவிசாளர் இதன் போது கூறினார்.

அட்டாளைச்சேனை கோணவத்தை ஆற்றினையும், அதன் கரைகளையும் நூற்றுக்கணக்கானோர் சட்ட விரோதமாக அபகரித்துள்ளனர்.

இதற்கு எதிராக அண்மைக்காலமாக ஊடகவியலாளர்கள் குழுவொன்று செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆறு: அபகரிப்பை தடுத்து நிறுத்துமாறு, கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் வேண்டுகோள்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்