அமைச்சர் சரத் வீரசேகரவின் கிழக்கு மாகாண இணைப்பாளராக றிசாத் ஏ காதர் நியமனம்

🕔 September 19, 2020

– முன்ஸிப் அஹமட் –

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி ராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின், கிழக்கு மாகாண இணைப்பாளராக ஊடகவியலாளர் றிசாத் ஏ காதர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை இதற்கான நியமனக் கடிதத்தை அவருக்கு ராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, தனது அமைச்சில் வைத்து வழங்கினார்.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக ரியர் அட்மிரல் சரத் வீரசேகர இருந்த காலப்பகுதியில் – அவரின் ஊடாக, பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைளையும் தொழில் வாய்ப்புக்களையும் அம்பாறை மாவட்டப் பிரதேசங்களுக்கு றிசாத் பெற்றுக் கொடுத்திருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

குறிப்பாக, மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட ‘மெத்தா சமாஜ’ அமைப்பின் தலைவராக சரத் வீரசேகர பதவி வகித்த போது, அம்பாறை மாவட்டத்திலுள்ள பல முஸ்லிம் இளைஞர்களுக்கு அந்த அமைப்பின் ஊடாக தொழில் வாய்ப்புகளை றிசாத் பெற்றுக் கொடுக்க உதவியிருந்தார்.

தற்போதைய நியமனத்தின் ஊடாக, இவர் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அமைச்சரின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான இணைப்பாளராகக் கடமையாற்றுவார் என்பதோடு, அம்மாவட்டங்களில் நடைபெறும் பிரதேச ஒருங்கிணைப்பு மற்றும் மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களிலும் கலந்து கொள்வார்.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த இவர் தற்போது – அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலையில் பணியாற்றி வருகின்றார்.

Comments