‘கடமை நிறைவேற்று அதிபர்’ விவகாரம்; அக்கரைப்பற்று கல்வி வயலயத்தில் அநீதி: பணிப்பாளர் கவனிப்பாரா?

🕔 August 29, 2020

– அஹமட் –

க்கரைப்பற்று கல்வி வலயத்தில் அதிபர் தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் பலர் இருக்கத்தக்கதாக, சில பாடசாலைகளுக்கு ‘கடமை நிறைவேற்று அதிபர்களாக’ ஆசியர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து புகார்கள் எழுந்துள்ளன.

அதிபர் தரப் பரீட்சைகளில் சித்தியடைந்து, பாடசாலைகளில் அதிபர்களாகக் கடமையாற்றுவதற்கான தகைமை உள்ளவர்கள் பலர், அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் உள்ளனர். ஆயினும், அங்கு அதிபர்கள் வெற்றிடமுள்ள சில பாடசாலைகளுக்கு மேற்படி தகைமையுடையோர் நியமிக்கப்படாமல், ‘கடமை நிறைவேற்று அதிபர்’ எனும் பெயரில் – ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பிலேயே தற்போது புகார்கள் எழுந்துள்ளன.

அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள பொத்துவில், அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேன ஆகிய கல்விக் கோட்டங்களில், அக்கரைப்பற்று கோட்டத்திலேயே அதிகமான ‘கடமை நிறைவேற்று அதிபர்கள்’ நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இதேவேளை, அதிபர் தரப் பரீட்சையில் சித்தியடைந்து, அதிபர்களாகக் கடமையாற்றத் தகுதி பெற்றுள்ள சிலர், தமக்கு அதிபர் நியமனம் வேண்டாமென மறுத்து, சாதாரண ஆசிரியர்களாக பாடசாலைகளில் பணியாற்றி வருகின்றமையும் அம்பலமாகியுள்ளது.

மறுபக்கமாக, அதிபர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த பலருக்கு, அதிபர்களாகக் கடமையாற்றும் விருப்பம் உள்ளபோதும், அவர்களுக்கு இதுவரை பாடசாலைகள் பொறுப்பளிக்கப்படவில்லை எனவும் அறிய முடிகிறது.

இவ்விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலத்தின் உயர் அதிகாரி ஒருவருடன் ‘புதிது’ செய்தித்தளம் பேசிய போது; “அதிபர் தரப் பரீட்சையில் சித்திடைந்தோர் இருக்கத்தக்கதாக, ஆசியர்களை ‘கடமை நிறைவேற்று அதிபர்’களாக நியமிக்க முடியாது என்றார்.

அதேவேளை, அதிபர் தரத்திலுள்ளோர் அதிபர்களாகக் கடமையாற்ற முடியாது எனத் தெரிவித்து ஆசிரியர்களாகப் பணியாற்றுவார்களாயின், அவர்களின் அதிபர் தகைமையைப் பறித்தெடுக்க முடியும்” எனவும் கூறினார்.

எனவே, இவ்விவகாரத்தில் அக்கரைப்பற்று கல்வி வலயப் பணிப்பாளர் உடனடியாகவும் விரைந்தும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரும் இவ்விவகாரத்தில் கவனம் செலுத்தி, தவறுகளைத் திருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியமையும் அவசியமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்