நௌசாத், சிராஸ் கட்சிக்குத் துரோகமிழைத்தனர்; சதிகளைத் தகர்த்து 43 ஆயிரம் வாக்குளை மக்கள் வழங்கியுள்ளனர்: தாஹிர்

🕔 August 9, 2020

– முன்ஸிப் அஹமட் –

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளராகப் பதவி வகிக்கும் ஏ.எம்.எம். நௌசாத் மற்றும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் தவிசாளரும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான சிராஸ் மீராசாஹிப் ஆகியோர், கட்சிக்குத் துரோகமிழைத்து விட்டனர் என்று, நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளரும் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டவருமான எம்.ஏ.எம். தாஹிர் குற்றம் சாட்டினார்.

நிந்தவூரிலுள்ள தனது இல்லத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஊகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே, தாஹிர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தேர்தல் பிரசாரக் காலப் பகுதியில் – நௌசாத் மற்றும் சிராஸ் மீராசாஹிப் ஆகியோர், ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்கள். இதனையே துரோகச் செயல் என தாஹிர் சுட்டிக்காட்டினார்.

ஊடக சந்திப்பில் தொடர்ந்து பேசிய அவர்;

“எமது கட்சி சார்பாக அம்பாறை மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள முஷர்ரப்புக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எமது கட்சியை அம்பாறை மாவட்டத்தில் தோற்கடிப்பதற்காக பல்வேறு சதிகள் நடந்தன. அவற்றையெல்லாம் எமது வேட்பாளர்களுடன் இணைந்து ஆதரவாளர்கள் தகர்த்தெறிந்தனர். எமது ஒற்றுமை மூலம் சுமார் 43 ஆயிரம் வாக்குகளை அம்பாறை மாவட்டத்தில் எமது கட்சி பெற்றெடுத்தது.

எனக்கு 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளன. நிந்தவூரிலிருந்து சுமார் 08 ஆயிரம் விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளன. கட்சிக்கும் எனக்கும் வாக்களித்த அனைவக்கும் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.

அதுவும் நிந்தவூரில் கடந்த 15 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றவரை மீறி, மக்கள் இவ்வாறு எனக்கு பெருந்தொகை வாக்களித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

வெற்றி பெற்றுள்ள எமது நாடாளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் முழு மாவட்டத்துக்கும் சேவையாற்றுவார்.

இந்தத் தேர்தலில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அம்பாறை மாவட்டத்தில் இம்முறை அனைத்துக் கட்சிகளில் இருந்தும் 04 முஸ்லிம்கள் வெற்றி பெற்றுள்ளனர். முஸ்லிம் அரசியல் கட்சிகள் அனைத்தும் இணைந்து இந்தத் தேர்தலில் போட்டியிட்டிருந்தாலும் 03 உறுப்பினர்களைத்தான் அதிகபட்சமாக வென்றெடுத்திருக்க முடிந்திருக்கும்.

அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் சிறுபான்மை மக்களுக்கு எந்தவித அனுகூலங்களும் கிடைக்காது. எனவே, தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு அரசியல் ரீதியாக செயற்பட வேண்டும்.

சம்மாந்துறையில் எமது கட்சிக்கு நௌசாத் துரோகம் செய்தமையினால் 05 ஆயிரம் வாக்குகள் எமக்கு கிடைக்காமல் போயின. அதேபோன்று சாய்ந்தமருதில் சிராஸ் துரோகம் இழைத்தமையினால் நாம் எதிர்பார்த்த 03 ஆயிரம் வாக்குகளைப் பெற முடியாமல் போனது.

இருந்தபோதும் சாய்ந்தமருதில் எமது ஆதரவாளர்களின் அர்ப்பணிப்பின் காணரமாக 1000க்கும் அதிகமான வாக்குகளை கட்சிக்காகப் பெற முடிந்தது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்