ஆதரவாக மாறியது அச்சுறுத்தல்: பைசல் காசிமுடைய வெற்றிக்காக உழைக்கப் போகிறேன்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் தெரிவிப்பு

🕔 July 12, 2020

– அஹமட் –

முன்னாள் ராஜாங்க அமைச்சரும் அம்பாறை மாவட்டத்தில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுகின்றவருமான பைசல் காசிமுடைய வெற்றிக்காக உழைப்பதற்கு தான் தயாராக உள்ளதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சக வேட்பாளருமான ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்துள்ளார்.

பைசல் காசிமுடைய சொந்த ஊரான நிந்தவூரில் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே இதனை நஸீர் கூறினார்.

பைசல் காசிமுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று ஒரு கட்டத்தில் பிரசாரம் செய்துவந்த நஸீர், தனது சொந்த ஊரான அட்டாளைச்சேனைக்குள் பைசல் காசிம் வந்து, தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று அச்சுறுத்தியும் வந்தார்.

நஸீரின் இந்த நிலைப்பாடு தொடர்பில் அவரின் கட்சியான முஸ்லிம் காங்கிரஸினுள்ளும், வெளியிலும், ஊடகங்களிலும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இதேவேளை, அட்டாளைச்சேனைக்கு பைசல் காசிமை அழைத்து வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கும் அங்குள்ள இளைஞர்கள் தீர்மானித்தனர்.

இதனையடுத்து, தனது முடிவிலிருந்து இறங்கிய நஸீர்; அட்டாளைச்சேனையில் பைசல் காசிமுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பிரசார மேடையில் ஏறி, பைசலுக்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில், நேற்றிரவு நிந்தவூரில் பைசல் காசிமுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசாரக் கூட்டத்தில், பைசல் காசிமுடைய அழைப்பின் பேரில் பங்கேற்றிருந்த நஸீர் அங்கு உரையாற்றும் போது; பைசல் காசிமுடைய வெற்றிக்காக தான் உழைக்கப் போவதாகக் கூறினார்.

மேலும் பொத்துவில் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால், அது பைசல் காசிம்தான் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை என்றும் தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: அம்பாறை மாவட்ட அரசியல் களம்: அச்சுறுத்தல் விடுத்த நஸீர் பணிந்தார்; பைசல் காசிமுக்கு வாக்களிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்