பாலமுனை சிறுவர் பூங்கா விவகாரம்; நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, ஒரு வாரத்துக்குள் புனரமைக்கப்படும்:’புதிது’ செய்தித்தளத்திடம் தவிசாளர் உறுதி

🕔 May 29, 2020

– அஹமட் –

பாலமுனை சிறுவர் பூங்காவை புனரமைப்பதற்காக 05 லட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனாவினால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாகவே, புனரமைப்பு நடவடிக்கை தாமதமாகியுள்ளதாகவும் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிளார் ஏ.எல். அமானுல்லா ‘புதிது’ செய்தித்தளத்திடம் தெரிவித்தார்.

நேற்றைய தினம் பாலமுனை சிறுவர் பூங்காவிலுள்ள விளையாட்டு சாதனமொன்று உடைந்து விழுந்ததால், அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு அம்பியுலன்ஸ் வரவழைக்கப்பட்டு, குறித்த சிறுவன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது இவ்வாறிருக்க, கடந்த பெப்ரவரி மாதம் – குறித்த பூங்காவை புனரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டதாகவும், இதனையடுத்து பூங்காவை புனரமைத்துத் தருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் வாக்குறுதி வழங்கியதாகவும் தெரியவருகிறது.

பாலமுனை சிறுவர் பூங்கா- அட்டாளைச்சேனை பிரதேச சபை நிருவாகத்தின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், குறித்த பூங்காவை இதுவரையில் ஏன் புனரமப்புச் செய்யவில்லை என, அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் அமானுல்லாவிடம் ‘புதிது’ செய்தித்தளம் வினவியபோதே, அவர் மேற்கண்ட பதிலைக் கூறினார்.

“பாலமுனை சிறுவர் பூங்காவை புனரமமப்பதற்காக, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நிதியிலிருந்து 05 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா ஏற்படுத்திய அசாதாரண சூழ்நிலை காரணமாக, புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க முடியவில்லை. எதிர்வரும் வாரத்துக்குள் அந்தப் பூங்கா புனரமைக்கப்படும்” என்றும் அவர் புதிது செய்தித்தளத்திடம் தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: பாலமுனை சிறுவர் பூங்காவில் விளையாட்டு சாதனம் உடைந்து விழுந்ததால் சிறுவன் பாதிப்பு; உரிய முறையில் நிர்மாணிக்காததால் வந்த வினை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்