தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு; நடந்தவை என்ன: செயலாளர்கள் தகவல்

🕔 May 12, 2020

பொதுத் தேர்தலுக்கான திகதி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று செவ்வாய்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் அரசியல் கட்சிகளிடன் பிரதிநிகளுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடலின் பின்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேக்கர இது தொடர்பில் விளக்கமளித்தார்.

“நீதிமன்றத்தின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் வரை தொடர்ந்தும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இருப்பதாக உயர் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தேர்தலுக்காக திகதி நிர்ணயம் உள்ளிட்ட விடயங்களை மேற்கொள்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முடியும்.

மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுசெல்லும் செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேர்தலை நடத்துவது தொடர்பில் பிரச்சினை இருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையினால் இன்னும் 2, 3 மாதங்களுக்கு இதனை முன்கொண்டு செல்ல முடியுமா என்ற விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இது குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. தேர்தலை எவ்வாறு நடத்துவதா? இல்லாவிட்டால் சில மாதங்களுக்கு தேர்தலை பிற்போடுவதா? என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும். தேர்தல் ஆணைக்குழுவுக்கு அந்த அதிகாரம் இருக்கிறது. அவர்களின் தீர்மானம் இறுதி தீர்மானமாக அமையும் என்று நாம் நம்புகின்றோம்” என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கேள்வி: தொடர்ந்து இவ்வாறு தேர்தலை பிற்போட முடியுமா?

பதில்: தேர்தலை பிற்போடும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கே உள்ளது.​ 1981, 24/3 தேர்தல் சட்டத்தின் கீழ் ஆணைக்குழுவுக்கே அந்த அதிகாரம் உள்ளது. தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த அனைத்து வேட்பாளர்களும் சிக்கலில் உள்ளனர்.

அதேபோன்று வாக்களிக்கும் மக்கள் ஒன்றுகூடுவது, அவர்கள் வாக்களிப்பு தொடர்பிலான பிரச்சினைகளும் உள்ளன.

இங்கு இரண்டு விடயங்கள் உள்ளன. மக்கள் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்க முடியாது. இரண்டாவது விடயம் தேர்தலை எதிர்கொள்ளும் மனநிலை மக்களுக்கு இல்லை. அடுத்த விடயம் வேட்பு மனுத் தாக்கல் செய்த வேட்பாளர்களுக்கும் பார்த்துக் கொண்டு இருக்கவும் முடியாது. இப்படியான பிரச்சினைகளே உள்ளன.

இந்த பிரச்சினைகளை வெற்றி கொள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதே எனது நம்பிக்கை

இதன்போது விருப்பு இலக்கம் வழங்கும் செயற்பாடு குறித்தும் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கருத்து வௌியிட்டார்.

“விருப்பு இலக்கம் வழங்க வேண்டாம் என நாம் கோரிக்கையொன்றை முன்வைத்தோம். விருப்பு இலக்கத்தை வழங்குவதன் மூலம் அனைவரும் மீண்டும் தேர்தலுக்கு தயாராகுவர். எனவே இதனை விட அபாயகரமான நிலமை ஏற்பட முடியும். விருப்பு இலக்கத்தை வழங்கியவுடன் வேட்பாளர்கள் உறுதியாக கிராமங்கள் தோறும் செல்வர். எனவே இது பாரிய பிரச்சினையாகலாம். ஆகவே அதனை வழங்க வேண்டாம் என்ற கோரிக்கையை நாம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு முன்வைத்தோம். வழக்கு தீர்ப்பு கிடைத்ததுடன் செயற்படுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறே கூறினோம்” எனவும் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதன்போது கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசமும் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

ஒரு சிலரைத் தவிர தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடத்துவது சிக்கலானது என ஏனைய அனைவரும் கூறினர். இந்த சூழ்நிலையில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட முடியாது. லஞ்சம் வழங்குவதைப் போன்று பிரதேச அரசியல்வாதிகள் ஊடாக 5,000 ரூபா வழங்குவது தேர்தல் பெறுபேற்றை திரிபுபடுத்தும். இவை அனைத்து குறித்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கருத்துத் தெரிவித்தனர்

என அகில விராஜ் காரியவசம் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்